வில்லன் பரஞ்சோதி பி.எஸ். வீரப்பாவா அல்லது கே.ஏ.தங்கவேலுவா?
Share
வானவீதியில் வலம்வந்த ‘எங்கே அவள்?’
மின்னல் பண்பலை வானொலி நாடகம்
-நக்கீரன்
கோலாலம்பூர், ஆக.14:
மலேசிய அரச வானொலியான மின்னல் பண்பலையின் முத்திரைப் படைப்பாக ஞாயிறுதோறும் முன்னிரவு 7:30 மணி அளவில் ஒலிபரப்பப்படும் நாடக வரிசையில் ஆகஸ்ட் 14-இல் ஒலியேற்றப்பட்ட நாடகம் ‘எங்கே அவள்?’.
மின்னல் வானொலியில் வாரத்திற்கு ஒருமுறை ஏறக்குறைய அரை மணி நேரத்திற்கு ஒலிபரப்பப்படும் பாரம்பரிய நாடகப் படைப்பு, மலேசிய இந்திய சமுதாயத்தின் குறிப்பாக தமிழர்களின் அரசியல்-பொருளாதார-கல்வி-சமூக-ஆன்மிக பண்புநலக் கூறுகளை வெளிப்படுத்தக் கூடியது. வானொலி நாடக எழுத்தாளர்களும் அதற்கேற்ப தங்களின் படைப்பை இயற்றி வருகின்றனர். தவிர, வானொலி நாடகத் தயாரிப்பாளர்களும் அரசாங்கத்தின் கொள்கை, மின்னல் வானொலியின் எதிர்பார்ப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி வானொலி நாடகங்களை தயாரித்து விண்ணேற்றி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று ஆகஸ்ட் 14-ஆம் நாள் ஒலியேற்றப்பட்ட ‘எங்கே அவள்?’ என்னும் வானொலி நாடகம், பெண்கள்மீது ஏவப்படும் பாலியல் வன் கொடுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்தது.
பெண்மையைப் போற்றும் பண்பாட்டை பாரம்பரியத் தன்மையாக கொண்ட நம் சமுதாயத்தில், அண்மைக் காலமாக பெண்கள்மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல், நாகரிக சமுதாயத்திற்கு பொருத்தமில்லாதது என்பதை இன்றைய நாடகம் தெளிவாக சுட்டிக் காட்டியது.
அண்மைக் காலம்வரை பார்வதி நாகராஜன் வானொலி நாடகத் தயாரிப்பாளராக இருந்த நிலையில், திடீரென பாரதி கண்ணம்மாள் என்பவர் குதித்ததில் இருந்தே எனக்கு ஒரு வகையில் நெருடலாக இருந்தது.
தந்தையர் தின் சிறப்பு நாடகம் உள்ளிட்ட ஏராளமான வானொலி நாடகங்களை பார்வதி நாகராஜன் படைத்திருந்தார். அவற்றில் ஒரு சில நாடகங்கள் செம்மையாகத் தயாரிக்கப்பட்டது குறித்து அவரிடம் விளக்கமும் கேட்டிருந்தேன். ஆனால், அவரிடம் வாக்களித்தபடி அந்த நாடகங்களைப் பற்றி, நான் எழுத முடியாமல் போனது. இந்த நிலையில்தான் காயத்ரி கண்ணம்மாள் புதிய நாடகத் தயாரிப்பாளராக வந்துள்ளார்.
2021 டிசம்பர் பிற்பகுதியில் இருந்து மின்னல் பண்பலை வானொலிக்கான நாடகங்களைத் தயாரித்து வரும் காயத்ரி கண்ணம்மாவின், தயாரிப்புகள் ‘நேற்று பொறித்த அப்பளத்தை’ப் போல இருந்த நிலையில், இன்றைய படைப்பு, இதோ, இப்பொழுது பொறித்த அப்பளத்தைப் போல மொறுமொறுவென்றிருந்தது.
பெண்கள்மீது பாலியல் அத்துமீறல் புரிந்தால், தண்டனை நிச்சயம் என்ற கருத்தை உள்ளீடாக வைத்து ஒலியேற்றப்பட்ட இந்த நாடகம் ஒரு திகில் நாடகமாக இருந்தது.
பேய் தோன்றுதைப் போன்றும் மனசாட்சி வெளிப்படுவதைப் போன்றும் மௌடீக காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக, பேய் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெண்களை ஈர்க்கும். பேயைக் கண்டாலே அரளும் பெண்களுக்கு பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளும் திரைப்படங்களும் ஏன் பிடிக்கிறது என்றால், அதில் ஓர் உளவியல் அடக்கம் இருக்கிறது.
பிறப்பு முதல் இறப்புவரை முதலில் தந்தை, பிறகு அண்ணன்-தம்பி, அடுத்து காதலன் அல்லது கணவன், வயதான நிலையில் மகன் அல்லது மருமகன், தொடர்ந்து பெயரன் என்றெல்லாம் ஏதோ வகையில் ஆணை அண்டியிருக்கும் அவசியம் பெண்களுக்கு ஏற்படுகிறது.
இத்தகைய ஆணாதிக்க வாழ்க்கைப் பயணத்தில், ஓரோர் இடத்தில் அல்லது வேளையில் பெண்கள் ஏதாவது ஒரு வகையில் ஆண்களால் பாதிக்கப்படும்பொழுது, பெண்கள் கையறு நிலைக்கு ஆளாகின்றனர். அத்தகைய பெண்களாகப் பார்த்துதான் அவர்களின் பொருள், கற்பு ஆகியவறை கயமைத்தன ஆண்கள் சூறையாடுகின்றனர்.
ஒரு பெண் பேயாக வந்து, கொட்டகொட்ட விழித்துக் கொண்டு, தொங்கிய நாக்குடன் ஆவேசம் பொங்க சம்பந்தப்பட்ட ஆணை பழிவாங்கி பலிதீர்க்கும் காட்சிகள் பெண்களை ஈர்ப்பதற்கு இதுவேக் காரணம்.
இதை உள்வாங்கியதாலோ என்னவோ, துளசி தேவி என்ற பெண்(இவர் உண்மையிலேயே பெண்ணா அல்லது புனைபெயரா என்பது தெரியவில்லை) இயற்றிய நாடகத்தை நாடகத் தயாரிப்பாளரான காயத்ரி கண்ணம்மா என்ற பெண் கச்சிதமாகத் தயாரித்துள்ளார்.
திகில் நாடகமாக படைக்கப்பட்ட இந்த நாடகத்தின் செம்மாந்த சிறப்பு, ‘மலையக நடிகர் திலகம்’ சோ.பரஞ்சோதி வில்லன் வேடம் தறித்ததுதான்.
மலேசியாவின் மார்கண்டேயனான இவரை, சமூகவாதியா அல்லது ஆன்மிகவாதியா என்று வரையறுக்க முடியாவிட்டாலும் ‘சமயச் செல்வர்’, மேடை நாடகக் கலைஞர், வானொலி நாடகக் கலைஞர், நாடக எழுத்தாளர், என்ற பெருமைக்கெல்லாம் உரியவர், இவர். வழக்கமாக நகைச்சுவை கலந்த ஒரு நளினத்தன வசனம் பேசும் பரஞ்சோதி,. இன்றைய ‘எங்கே அவள்’ நாடகத்தின் மூலம் வில்லத்தன பாத்திரத்தை வெளிப்படுத்தி இருகிறார்.
‘Love-The Fashion Magazine’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் பூமிநாதனாக வலம் வருகிறார். அட்டைப் படத்திற்காக கவர்ச்சியான இளம் பெண்களுக்கு வலைவீசும் பூமிநாதன், மது என்ற இளம் மாதின் அழகில் மயங்கி, மதுவை தந்திரமாக வளைத்து அவரை வேட்டையாடுகிறார். கடைசியில் போலீஸ் வளையில் சிக்கி, நீதிமன்றத்தில் தண்டனை பெறுவதுடன் நாடகம் நிறைவுறுகிறது.
பூமிநாதனை குறிவைத்து அவரின் அலுவலகத்திற்கு வேலை தேடிவரும் புலன் விசாரணை அதிகாரி விஜய்யும் பூமிநாதனின் கையாள் தேவதாசும் தங்களின் அசல் தன்மையை மறைத்துக் கொண்டு இருவருமே ஒருவருக்கொருவர் போலியாக உரையாடுவது மனதைத் தொடுகிறது.
விஜய் வரும் காட்சிகளிலெல்லாம் மறைந்துவிட்ட மதுவும் உடன் வருகிறார். இந்த மதுவை பச்சையாக பேய் என்று சொல்லமுடியாவண்ணம், அதை ஒரு மௌடீகத் தன்மையில் வெளிப்படுத்தி, காஞ்சனா படக் காட்சியை மனத் திரையில் பதியவைக்கும் காயத்ரி கண்ணம்மாவின் திறமை.. ., நேயர்களை வளைக்கும் விதம்.. ., பாராட்டிற்கு உரியது.
பூமிநாதன் தொடக்கத்தில் பி.எஸ். வீரப்பாவைப் போல தென்பட்டாலும், போகப்போக அவரின் வில்லத்தனம் வெளுத்துவிடுகிறது.
நம் நாடு திரைப்படத்தில் தருமலிங்கம்(எஸ்.வி. ரங்காராவ்), ஆளவந்தார் (எஸ்.ஏ. அசோகன்), புண்ணியகோடி(கே.ஏ. தங்கவேலு) என 3 வில்லன்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் புண்ணியகோடியைத்தான் ‘எங்கே அவளி’ன் பூமிநாதன் நினைவுப்படுத்துகிறார்.
காவல் துறையிடம் சிக்கப்போகிறோம் என்பதை ஊகித்துவிட்ட நிலையில், தன்னுடைய கையாள் தேவதாசிடம் எரிந்துவிழும் பூமிநாதன் உதிர்க்கும் “Please shut up; get lost” என்னும் ஆங்கில வசனத்திற்குப் பதிலாக ஒருவேளை தமிழ் வசனம் இடம்பெற்றிருந்தால், பூமிநாதனின் வில்ல குணம் இன்னும் நல்லத்தனமாக வெளிப்பட்டிருக்குமோ என்னவோ?. இந்த இடத்தில் காயத்ரி கண்ணம்மாள், கோட்டை விட்டுவிட்டார் என்றேத் தெரிகிறது.
ஆனாலும், தன்னுடைய கலைப் பயணத்தில் பூமிநாதன் மூலம், பரஞ்சோதி புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறார் என்றுதான் குறிப்பிட வேண்டும். அசோக்குமார், தியாகராஜன், கல்பனாஸ்ரீ, யுவராணி, தருமதேவர் ஆகியோரும் தங்களின் பங்கை தங்களுக்கான பாத்திரங்களின்வழி வெளிப்படுத்தி இருக்கிறனர்.
பதவி உயர்வுடன் தொலைக்காட்சிப் பிரிவிற்கு சென்றுவிட்ட பார்வதி நாகராஜனுக்கு வாழ்த்து; மின்னல் பண்பலை வானொலி நாடகத்தை இன்னும் மேம்படுத்த காயத்ரி கண்ணம்மாளிற்கும் வாழ்த்து.