“பூர்வீக மண்ணில் தமிழ் வளர்க்கும் புலம்பெயர்ந்த தமிழர்:” சிங்கை முஸ்தஃபாவிற்கு தஞ்சை பல்கலைக்கழகம் பாராட்டு
Share
–நக்கீரன்
கோலாலம்பூர், ஆக.21:
சிங்கப்பூரில் வாழ்ந்தாலும் பூர்வீக மண்ணில் தமிழ் வளர்க்கும் செம்மாந்த பணியை அயராது மேற்கொண்டு வருகிறார் சிங்கை முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவனரும் முத்துப்பேட்டை ரகமத் பெண்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளருமான எம்.ஏ. முஸ்தஃபா என்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் பாராட்டு தெரிவித்தார்.
முத்துப்பேட்டை ரகமத் பெண்கள் மெட்ரிகுலேஷன் பள்ளியின் வெள்ளி விழா, ஆகஸ்ட்19 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணைவேந்தர், கனடாவின் வெள்ளி விழா இதழ் உதயனிடம் ரகமத் மெட்ரிகுலேஷன் பள்ளி குறித்தும் அதன் தோற்றுநர் எம்.ஏ. முஸ்தஃபா குறித்தும் பேசினார்.
திரும்பும் திசை எங்கும் நிலம் என்னும் நல்லாள், பச்சை வண்ண பட்டாடை உடுத்தியதைப் போன்று வயல்வெளியாகக் காட்சிதரும் பின்தங்கிய பகுதியான முத்துப்பேட்டையில் பெண் கல்வியை இலக்காகக் கொண்டு உலகத் தரம்கொண்ட மெட்ரிகுலேஷன் பள்ளியை நடத்திவரும் நற்றமிழ் நெஞ்சார் முஸ்தஃபாவின் தமிழ்த் தொண்டை எத்துணைப் பாராட்டினாலும் தகும் என்றார்.
வேளாண் தொழிலை மட்டுமே ஆதாரமாகக் கொண்ட இத்தகைய நடுத்தர பட்டணத்தில் பெண்களின் முன்னேற்றத்தை முன்னெடுக்கும் துணிவும் பரந்துபட்ட நோக்கும் அதைவிட உயர்வானது.
கிராம சூழலில் வாழ்ந்தாலும் அறிவியல் பார்வையும் ஆங்கில புலமையும்மிக்க தமிழ் மாணாக்கியரை பல்லாயிரக் கணக்கில் கடந்த கால் நூற்றாண்டாக உருவாக்கிவரும் ரகமத் மெட்ரிகுலேஷன் பள்ளி, கல்வித் தரத்திலும் தேர்ச்சி விகிதத்திலும் உயர்ந்து விளங்குவது பாராட்டிற்கு உரியது என்றார் துணை வேந்தர்.
இதேத் தமிழ்மகன் முஸ்தஃபா, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளான இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் தொய்வின்றி பாடாற்றி வருகிறார். இதன்தொடர்பில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓர் அறவாரியத்தையும் அவர் ஏற்படுத்தி இருக்கிறார்.
20-ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியில் மலேசிய-சிங்கப்பூர் நாடுகளில் அருந்தமிழ் வளர்ச்சிக்காக நறுந்தொண்டாற்றிய ‘தமிழவேள்’ கோ.சாரங்க-பாணியின் பெயரில் உருவாக்கப்பட்ட அவ்வாரியத்தின் சார்பில் ஈராண்டுகளுக்கு ஒரு முறை சோழப் பெருவளத்தான் கரிகாலன் பெயரில் இலக்கிய விருது வழங்கப்படுகிறது.
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை நாடுகளைச் சேர்ந்த இலக்கியவாணர்களுக்கு கரிகாலன் விருதுடன் பொற்கிழியும் வழங்கப்படுகின்றன.
தவிர, மலேசியாவில் பத்திரிகை உலகில் சாதனை படைத்த ஆதி. குமணன் பெயரில் ஓர் இருக்கையையும் நூலகத்தையும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தி, அதன்வழி தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் காலத்தே நிகழும் தமிழ் இலக்கிய-பண்பாட்டு வளர்ச்சி குறித்து அறியவும் வகைசெய்துள்ளார் தமிழ் மகனார் எம்.ஏ. முஸ்தஃபா. அவர், இன்னும் பாரிய அளவில் தமிழ்த் தொண்டாற்ற தமிழன்னை அவருக்கு துணை இருக்க வேண்டும் என்ற ஆவலை, கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடையே இனம்-மொழி சார்ந்து பன்முனைப் பணியாற்றும் உதயன் இதழின்வழி தெரிவிப்பதில் பெருமகிழ்வெய்துவதாக துணைவேந்த வி. திருவள்ளுவன் தெரிவித்தார்.
குறிப்பாக, தமிழ் இலக்கியத்தின் நவீன பாட்டைக்கு பெரும்பங்கு வகித்த கவிக்கோ அப்துல் ரகுமானின் பெயர், ஆஸ்திரேலிய நாட்டில் ஒரு வீதிக்கு சூட்டப்பட்டதில் முஸ்தஃபாவின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றும் துணைவேந்தர் நினைவுகூர்ந்தார்.
சிங்கப்பூர் வர்த்தகப் பெருமகனுமான எம்.ஏ. முஸ்தஃபா, தன்னுடைய தாயார் ரகமத் அம்மையாரின் பெயரில் 25 ஆண்டுகளுக்கு முன்னம் நிறுவிய பெண்கள் மெட்ரிகுலேஷன் பள்ளியின் வெள்ளி விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியபோது,
“தாய்மொழிக் கல்வியே தலைசிறந்த சமுதாயத்தை உருவாக்கும். வேற்று-மொழி கலப்பில்லாமல் தாய்மொழியில் பேசுவதை மாணவர்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும்; ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் எல்லாம் தாய் மொழிவழி கல்வியே முன்னிலைப் படுத்தப்படுகிறது” என்றார்.
பள்ளித் தாளாளர் எம்.ஏ. முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மேலும் பேசிய துணைவேந்தர் வி.திருவள்ளுவன், “முத்துப்பேட்டை போன்ற பின்தங்கிய பகுதியில் பெண்களுக்கென நல்லொழுக்கத்துடன் ஆளுமைத் திறனை வளர்க்கும் வகையில் வழிநடத்தப்படும் இப்பள்ளி, தேர்ச்சி விகிதத்திலும் சாதனை படைத்து வருகிறது; இதற்கு காரணமாக இருக்கும் பள்ளி தாளாளர் எம்.ஏ. முஸ்தபா மற்றும் முதல்வர்-ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகிறேன்” என்றார்.
பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் எண்ணத்தையும் இலக்கையும் அறியாமல் தங்களின் விருப்பத்தை அவர்களிடம் திணிக்கும் சூழலில், மாணவர்கள் தங்களுடைய சிந்தனையையும் செயல்படுத்த முடியாமல் பெற்றோர்களுடைய எண்ணத்தையும் ஈடேற்ற முடியாமல் இரண்டுங்கெட்ட நிலைக்கு ஆட்பட நேரிடும்; எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்து, அவர்கள் தம் வாழ்க்கையில் சாதிக்கவும் உயர் நிலையை அடையவும் துணை நல்க வேண்டும்; அதேவேளை, தங்களின் கருத்தை வலியுறுத்துவதற்கு மாறாக, ஆலோசனை என்னும் வகையில் வெளிப்படுத்துவதிலும் கருத்தாடுவதிலும் தவறுநேர வாய்ப்பிருக்காது.
குறிப்பாக, பெற்றோர்கள் மற்ற மாணவர்களை தம் பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பேசினால், அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதுடன், மனதளவில் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்.
விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வாழ்வில் உச்சத்தை தொடலாம் என்பதற்கு ஓர் உதாரணமாக ஒரு காவலரின் மனைவியான அம்பிகா என்பவர், திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்த நிலையிலும் அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் என்னும் குடிமைத் தேர்வை எழுதமுயன்று, மூன்று முறை தோல்வி அடைந்த நிலையிலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டதன் விளைவாக தேசிய அளவில் 168-ஆவது இடத்தில் தேர்ச்சி பெற்று மும்பையில் பெண் சிங்கமாக சட்டம் ஒழுங்கை சீரியமுறையில் செயல்படுத்தி வரும் ஐபிஎஸ் அதிகாரியாக தன்னை நிலைநிறுத்தி உள்ளார் என்பதை சுட்டி காட்டி மாணவியர் உள்ளத்தில் எழுச்சியை ஏற்படுத்தினார்
இற்றை நாட்களில், பெற்றோர் தங்களின் பிள்ளைகளுடன் செலவிடும் நேரம் மிகக்குறைவாக உள்ளதால், மாணவ-மாணவியரும் கணணி, செல்பேசியே கதி என்ற சூழல் ஏற்பட்டுள்ளது; இந்த நிலை மாற வேண்டும்; விவேக தொலைபேசிகளை மாணவச் செல்வங்கள் அதிக அளவில் பயன்படுத்துவதை பெற்றோர் கண்காணிப்பது அவசியம்.
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் பெண் கல்வி அவசியம் என்பதை சுட்டிக்காட்டிய துணைவேந்தர், தற்போது பல்வேறு துறைகளிலும் பெண்கள், ஆண்களுக்கு இணையாக பரிணமித்து வருவதையும் எடுத்தியம்பினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னதாக, பள்ளி முதன்மை முதல்வர் ஆர். சகுந்தலா வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் நடைபெற்ற சுதந்திர தின விழா பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு துணைவேந்தர் பரிசு வழங்கினார்.
இந்தப் பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து எஸ்எஸ்எல்சி, மேல்நிலைக் கல்வித் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற காரணமாக இருக்கும் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளி தாளாளர் எம்.ஏ. முஸ்தபா பரிசும் சான்றிதழும் வழங்கினார்.
பள்ளி முதல்வர் டிசோசா டோனியின் நன்றியறிதலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
முதல் பட விளக்கம்:
ரக்மத் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி பிரியதர்ஷினிக்கு சான்றிதழையும் ரூ.10,000 ரொக்கப் பரிசையும் துணைவேந்தர் வி திருவள்ளுவன் வழங்கியபோது, பள்ளி தாளாளர் எம்.ஏ. முஸ்தபா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.