LOADING

Type to search

மலேசிய அரசியல்

“உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஊடகம் கனடா உதயன்:” சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ்

Share

-நக்கீரன்

கோலாலம்பூர், ஆக.26:

காமன்வெல்த் அமைப்பின் 65-ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தில் நாட்டின் மையப் பகுதியான சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினரும் மந்திரி பெசார்(மாநில முதல்வர்) டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரியுமான டாக்டர் ஜி. குணராஜ் கலந்து கொண்டிருக்கிறார்.

இன்று வெள்ளிக்கிழமை நிறைவடையும் இந்த மாநாட்டில் மந்திரி பெசாரின் சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொண்டிருக்கும் ஜி.குணராஜ், அனைத்து அமர்வுகளிலும் பங்கெடுத்ததாகவும் காமன்வெல்த் உறுப்பிய நாடுகளின் அரசியல், பொருளாதார, பன்முக பண்பாட்டு, கலாச்சாரக் கூறுகளை உற்றுநோக்கவும் அந்தந்த நாடுகளின் அரசியல் பேராளர்களுடன் கலந்துரையாடி கருத்துப் பரிமாற்றம் செய்யவும் இந்த 65-ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு வாய்ப்பாக அமைந்ததாகத் தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகள் வட்டார வரையறைகளைக் கடந்து, உலக சமுதாயத்தை உற்றுநோக்கும் பன்னாட்டுப் பார்வையைக் கொண்டிருக்க வேண்டும்; சிறுபான்மை சமூகங்களை பெரும்பாமை சமுதாயத்தினர் அரவணைக்க வேண்டும்; அரசியல் பொறுப்பு என்பது சமுதாயத் தொண்டாற்றுவதற்கான தார்மீகக் கடமையைக் கொண்டது என்றெல்லாம் பரந்துபட்ட சிந்தனையை ஈராண்டு இடைவெளிக்குப் பின் நடைபெறும் இந்த காமன்வெல்த நாடாளுமன்றக் கூட்டம் ஏற்படுத்தியது.

இன்றைய உலக சமூகத்திற்கு மிகவும் தேவையானது-அடிப்படையானது, மத நல்லிணக்கமும் சமுதாய நல்லிணக்கமும்தான் என்ற சிந்தனையை இந்த மாநாடு ஓங்கி முழங்கியது.

தீபகற்ப மலேசியாவில் உள்ள மாநிலங்கள், சபா மற்றும் சரவாக் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் பிரதிபலிக்கும் வண்ணம் பேராளர்களைத் தெரிவு செய்து இந்த மாநாட்டிற்கு அனுப்பிய மலேசிய அரசுக்கும் இந்த மாநாட்டை சீரான முறையில் செம்மையாக வழிநடத்தும் கனடா அரசுக்கும் சிலாங்கூர் மாநில அரசின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை தன்னைத் தேர்ந்தெடுத்த செந்தோசா சட்டமன்ற தொகுதி மக்களின் சார்பிலும் நன்றி தெரிவிப்பதாக மக்கள் நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான குணராஜ் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 20-இல் புறப்பட்ட மலேசியப் பேராளர்கள், 28 மணி நேர பயணித்துக்குப் இன் கடனாவை அடைந்தோம். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் மலேசியா, சிங்கபபூர், இலங்கை போன்ற நாடுகளில் இருப்பதைப் போலவே கனடாவிலும் தமிழ் மொழியில் அச்சு-இணைய ஊடகம், தமிழ் வானொலி நிலையங்கள் இருப்பதை யெல்லாம் காண மகிழ்ச்சியாக இருக்கிறது.

கனடாவாழ் புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழ்ப் பற்று, ஆன்மிக-பண்பாட்டு-கலாச்சாரத் தன்மைகளைப் பாதுகாக்கும் விதம் யாவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, உதயன் வார இதழ், இலங்கை-மலேசியா-சிங்கப்பூர்-தமிழ்நாடு-வளைகுடா நாடுகள் உள்ளிட்ட நிலப்பரப்புகளில் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஊடகமாக இருக்கிறது என்றார்.