LOADING

Type to search

மலேசிய அரசியல்

இனவாதக் கட்சியாக உருமாற்றம் கண்டுள்ள பாஸ் தேசிய அரசியலுக்கு கடும் மருட்டல்

Share

-நக்கீரன்

கோலாலம்பூர், ஆக.30:

21-ஆம் நூற்றாண்டு பிறந்து கால் நூற்றாண்டை நெருங்கும் இந்த வேளையில் உலகில் பெரும்பாலான நாடுகள் வலச்சாரி அரசியலை முன்னெடுக்கின்றன. மலேசியாவும் அந்தப் பாதையில் பயணிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பாஸ் கட்சியும் அம்னோவும் முன்னெடுக்கும் அரசியல் இதைத்தான் சுட்டிக் காட்டுகின்றன.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்காவிலும் இந்தியா-விலும் வலச்சாரி அரசியல் ஆழ வேரூன்றிவிட்டன. தற்பொழுது உலக அளவில் சக்திமிக்க வலச்சாரி தலைவர்களாக விளங்குபவர்கள் இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சியின் நரேந்திர மோடி, அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசில் நாட்டின் போல்சனாரோ, மலேசியாவில் பெஜுவாங் கட்சியின் தலைவர் துன் மகாதீர் ஆகியோர். இவர்களுடன், பாஸ் கட்சியின் டான்ஸ்ரீ அப்துல் ஹடி அவாங்கும் இப்போது இணைகிறார்

மலாயா சுதந்திரம் அடைந்தபொழுது கேடிஎம் உள்ளிட்ட அரசுப் பணிகளில் ஏறக்குறைய 40%ஆக இருந்த தமிழர்கள்-யாழ்ப்பான தமிழர்கள்- மலையாளிகள் உள்ளிட்ட இந்தியர்களின் எண்ணிக்கை துன் ரசாக் காலத்தில் சரிவடையத் தொடங்கி, துன் மகாதீரின் 22 ஆண்டு கால ஆட்சியில் 4% என்ற அளவில் படுபாதாள நிலைக்குச் சென்றது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஜெர்மனி, ஸ்பெயின், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் வலதுசாரி கொள்கையுடைய கட்சிகள் வலுவாக ஆதிக்கம் செலுத்துகின்றன. பிரான்ஸ் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில்கூட இரண்டாவது தவணையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் இமானுவேல் மெக்ரோன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட மரெய்ன் லூ பென்னிடம் இருந்து கடுமையான சவாலை எதிர்கொண்டு தட்டுத் தடுமாறிதான் கரை சேர்ந்தார். மரெய்ன் லூ கடுமையான வலச்சாரி போக்கு கொண்டவர்.

அதைப்போல ஆஸ்திரியாவின் சுதந்திரக் கட்சி, பிரான்ஸ் நாட்டின் தேசிய முன்னணி, ஸ்கெண்டிநேவிய தீபகற்கத்தைச் சேர்ந்த நோர்வே நாட்டின் முன்னேற்றக் கட்சி, ஸ்விட்சர்லாந்தின் மக்கள் கட்சி ஆகியவையும் ஐரோப்பிய ஒன்றியத்தில் செல்வாக்கு பெற்ற வலச்சாரி கட்சிகளாக வளர்ந்து வருகின்றன.

வலச்சாரி சிந்தனை அல்லது வலச்சாரி கட்சி என்றால் என்ன?

மதத்தின் அடிப்படையிலும் இனத்தின் அடிப்படையிலும் சிந்தித்து செயல்-படுவதுதான் வலச்சாரி பார்வை; எல்லார்க்கும் எல்லாமும் என்பது ஜனநாயக சிந்தனை அல்லது இடதுசாரிப் பார்வை.

மூன்று நாட்களுக்கு முன்னம், பொதுச் சாலையில் ஓர் இந்திய வம்சாவளிப் பெண்ணிடம் ஓர் அமெரிக்கப்பெண் உன்னுடைய நாட்டுக்கு திரும்பிப் போ என்று மூர்க்கத்தனமாக பேசி, மல்லுக்கு நின்றதை வலதுசாரி நடவடிக்கைக்கு சான்றாகக் கொள்ளலாம்;

மகாதீரின் அண்மைய 22 மாத ஆட்சியில் தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததும் அந்த வகையைச் சேர்ந்ததுதான். இவற்றை யெல்லாம்விட மிகவும் சரியாக சொல்லாக வேண்டுமெனில், மலேசியாவில் நிலவும் லஞ்ச-ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக இருப்பவர்கள் மலாய்க்காரர் அல்லாதவர்களும் இஸ்லாம் அல்லாதவர்களும் என்று பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ ஹடி அவாங் சொன்னக் கருத்தை, இனவெறுப்பு அரசியலுக்கும் வலதுசாரி சிந்தனைக்கும் பொருத்தமான சான்றாகக் கருதலாம்.

டத்தோஸ்ரீ நஜீப் காலத்தில், பாஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் 25 லட்சம் இரகசியமாக வந்து சேர்ந்ததே, அதற்கு இதுவரை நாட்டு மக்களிடம் விளக்கம் சொல்லாத ஹடி அவாங், தற்பொழுது அரசியலில் மதத்தையும் இனத்தையும் கலந்து இந்த நாட்டில் நிலவும் சமய நல்லிணக்கத்திற்கும் இன இணக்கத்திற்கும் வேட்டு வைப்பதைப் போல முரட்டுத்தனமாக பேசி இருக்கிறார்.

உண்மையில் பாஸ் கட்சியின் தொடக்கம், ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற இடதுசாரி கொள்கையுடன்தான் உருவானது. 2-ஆம் உலகப் போர் முடிவுபெற்ற நேரம் அது; மலாயா விடுதலைப் பெறுவதற்கு சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் 1945-ஆண்டு காலக்கட்டத்தில் இஸ்லாமிய அரசியல் இயக்கங்கள் எல்லாம் கூட்டுசேர்ந்து மலாய் தேசியவாத கட்சியை உருவாக்கின. இந்தக் கட்சிதான் அடுத்த ஆறு ஆண்டுகளில் உருமாற்றம் அடைந்து 1951, நவம்பர் 24-இல் பாஸ் என்னும் முழுமையான இஸ்லாமிய அரசியல் கட்சி உருவானது. அப்பொழுதும் அதன் அரசியல் கொள்கை இடதுசாரித் தன்மை கொண்டதாகத்தான் இருந்தது.

காலவோட்டத்தில், அதன் அரசியல் கொள்கை மத-இன அடிப்படையிலான வலதுசாரி தன்மைக்குத் திரும்பியது. குறிப்பாக, ஹுடுட் சட்டம் போன்ற இஸ்லாமிய சட்டத்தின்படி நாட்டின் நீதிபரிபாலனம் நடைபெற வேண்டும் என்ற சிந்தனையை வலிந்து முன்னெடுத்த மதவாதக் கட்சியாக பாஸ் விளங்கி வந்தது.

2013, மே 5-இல் நடைபெற்ற நாட்டின் 13-ஆவது பொதுத் தேர்தல் சமயத்திலேயே ‘பக்கத்தான் ராயாட்’ என்னும் மக்கள் கூட்டணி மத்திய ஆட்சியைப் பிடித்திருக்கும். அந்தத் தேர்தலில் மக்கள் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பிகேஆர், ஜசெக கட்சிகள் வென்ற அளவுக்கு பாதி அளவுக்குகூட பாஸ் வெல்ல முடியாமல் போனது; அந்த நேரத்தில் ஹுடுட் சட்ட அமலாக்கம் குறித்து அதிகமாக பேசியது பாஸ். இல்லாவிட்டால், அப்பொழுதே நாட்டில் அரசியல் மாற்றம் நிகழ்ந்திருக்கும்.

அந்தத் தேர்தலில் பலத்த அடி வாங்கியபின் பாஸ் கட்சி ஹுடுட் சட்டத்தைப் பற்றி அதிகம் பேசாமல் இருந்தது. அதற்கு வட்டியும் முதலுமாக இப்பொழுது இனவாத அரசியலையும் ஜனநாயக விரோதப் போக்கையும் பாஸ் கட்சி மேற்கொண்டு, புத்ராஜெயா அரசியலில் சண்டித்தனம் புரிகிறது.

மலேசியாவின் மூத்த அரசியல் இயக்கமான பாஸ் கட்சிக்கென்று சில வரலாற்றுப் பெருமைகள் உண்டு. இரண்டு மாநிலங்களில் தனித்து ஆட்சி அமைத்துள்ள ஒரேக் கட்சி நாட்டில் பாஸ் கட்சி மட்டும்தான்; கெடா மாநில சட்டமன்றத்தில்கூட பெரியக் கட்சி இந்தக் கட்சிதான்.

அதைப்போல, தற்போதைய 14-ஆவது நாடாளுமன்றத்தின் 222 உறுப்பினர்-களில் 18 பேர் மட்டுமே ஒரேக் கட்சியின் செல்வாக்கில் வென்றவர்கள். அவர்கள் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். கிளந்தான் மாநிலத்தில் 9 எம்பி-க்கள், திரங்கானுவில் 6 பேர், கெடாவில் மூவர் என 18 நாடாளுமன்றத் தொகுதிகளை தனித்து வென்ற பெருமை இந்தக் கட்சிக்கு உண்டு.

நாட்டை 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுவரும் அம்னோ கட்சிக்குக்-கூட இந்த ஆற்றல் கிடையாது. ஆனாலும், மூன்று மாநிலங்களில் மட்டும்தான் பாஸ் கட்சிக்கு ஆதரவும் செல்வாக்கும் இருக்கிறடேத் தவிர, தேசிய அளவில் பரந்துபட்ட ஆதரவு இந்தக் கட்சிக்கு இல்லை.

14-ஆவது நாடாளுமன்றம் உருவானதில் இருந்தே பாஸ் கட்சியின் போக்கும் கருத்தும் அப்பட்டமான ஜனநாயக அத்துமீறலாக இருக்கிறது.

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைவதற்கு முன்பே, மகாதீர் நாட்டு மக்களிடம் தெளிவாக சொன்னார், 14-ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வென்றால் நான் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிரதமராக இருந்துவிட்டு, பின் டத்தோஸ்ரீ அன்வாரிடம் பதவியை ஒப்படைப்பேன். எனக்கும் வயதாகிவிட்டது என்று 2017 நவம்பர் 6-ல் நாட்டு மக்களிடம் தெரிவித்தார்.

ஆட்சி அமைந்தபின், பிரதமர் பதவியைவிட்ட நகர மறுத்தார். இது குறித்து அன்வார் தரப்பில் கோரிக்கை எழுந்தபொழுதெல்லாம் மகாதீர் மல்லுக்கு நின்றது ஒருபுறமிருக்க, அந்த வேளைகளில், ஐந்தாண்டு தவணை முழுவதும் மகாதீரே பிரதமராக நீடிக்க பாஸ் அதரவு அளிக்கும் என்று அடுத்த வீட்டு சிக்கலில் தேவையின்றி தலையிடுவதைப் போல ஒவ்வொரு முறையும் பாஸ் கட்சி தெரிவித்தது. பாஸ் கட்சியின் ஆதரவை மகாதீரும் கேட்கவில்லை; அன்வாரும் நாடவில்லை. அப்படி இருந்தபொழுது நம்பிக்கைக் கூட்டணி-யின் உள்விவகாரத்தில் தேவையின்றி தலையிட்ட பாஸ், ஜனநாயக நெறியை காலிலிட்டு மிதித்தது.

கடைசியில், மகாதீரும் ஏமாந்து, அன்வாரும் ஏமாற்றப்பட்ட நிலையில் நாட்டில் இப்பொழுது கொல்லைப்புற ஆட்சிகளின் அத்தியாயம் தொடர்கிறது.

இந்த நிலையில், கடந்த குறுகியகால நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி ‘துரித உணவைப் போன்றது’ என்றும் பிரதமர் பதவிக்காக அடித்துக் கொண்டனர் என்றும் குருட்டுத்தன கருத்தை வெகு அண்மையில் வெளிப்படுத்தியது பாஸ்.

நாட்டின் பெருந்தலைவர்களும் அமைச்சர்களும் கைநிறைய வருமானம் கிடைத்தாலும் ஏன் தொடர்ந்து லஞ்ச-ஊழலில் ஈடுபடுகின்றனர் என்பதைப் பற்றி சிந்திக்காமல்.., கருத்து சொல்லாமல்.., நாட்டில் ஊழலும் லஞ்சமும் இடம்பெறுவதற்கு மலாய்க்காரர் அல்லாதவர்களும் முஸ்லிம் அல்லாதவர்-களும்தான் காரணம் என்றால், ஹடி அவாங்கில் சிந்தனையில் ஏதோ கோளாறு நேர்ந்துள்ளது.

ஒன்றுமட்டும் தெளிவாகிறது. மதவாகக் கட்சியான பாஸ், இப்பொழுது இனவாதக் கட்சியாகவும் புதிய பரிமானம் பெற்றுள்ளது; குறிப்பாக, மேலை நாடுகளிலும் கீழை நாடுகளிலும் வளர்ந்துவரும் இன-மத அடிப்படையிலான வலதுசாரி அரசியலுக்கு மலேசியாவும் தயாராகிறதோ என்ற ஐயமும் கூடவே எழுகிறது.