LOADING

Type to search

கனடா அரசியல்

நடேஸ்வராக்கல்லூரி பழையமாணவர் சங்க ஒன்றுகூடல் – 2022

Share

குரு அரவிந்தன்

கனடாவில் இயங்கிவரும் நடேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களின் ஒன்றுகூடல் ரொறன்ரோவில் உள்ள மிலிக்கன் பூங்காவில் சென்ற சனிக்கிழமை 27-8-2022 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நீண்ட நாட்களின் பின் வெவ்வேறு காலகட்டங்களில் படித்த சங்க அங்கத்தவர்கள் ஒன்றாகச் சந்தித்து உரையாடவும் முடிந்தது. காலை உணவைத் தொடர்ந்து, வருடாந்த பொதுக்கூட்டம் காலை 11:00 மணியளவில் நடைபெற்றது. அங்கத்தவர்களின் கலந்துரையாடலைத் தொடர்ந்து மதியஉணவும் அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி 120 வருடங்களை நிறைவு செய்ததை 2021 ஆண்டு கொண்டாடும் முகமாக நினைவுக் கோப்பைகளும், நினைவு ரீசேட்களும் பழைய மாணவர் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டாலும், கோவிட் – 19 காரணமாக அவற்றை வழங்க முடியாமல் இருந்தது. இந்த ஒன்றுகூடலின்போது, சிறப்பு விருந்தினருக்கும், நிர்வாகசபை உறுப்பினர்களுக்கும் அவற்றை வழங்கியதன் மூலம் அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கத்தோலிக்க பாடசாலைகளை ஆரம்பித்து மதமாற்றங்களை மேற்கொள்ள முற்பட்டபோது, இந்துமத நம்பிக்கை கொண்டவர்கள் நடேஸ்வரா, பரமேஸ்வரா, வைத்தீஸ்வரா, இந்துக்கல்லூரி, மகாஜனா போன்ற தனியார் பாடசாலைகளை இந்து மாணவர்களுக்காக அப்போது ஆரம்பித்தது நினைவிருக்கலாம்.

‘பொலியும் ஆழி வளங்கள் யாவும் நிறை காங்கேசந்துறையிலே பொறையில் ‘நேர்மை நெறிநில்’ நீதி அறிவை ஊட்டும் முறையிலே கலை நலங்கள் எழில் பெறும் நடேஸ்வரா கல்லூரியில்’ என்று சுப்பையா ஆசிரியர் இயற்றிய கல்லூரிக்கீதத்தில் குறிப்பிட்டது போல, இப்போது இங்குள்ள வளங்கள் எல்லாவற்றையும் மாணவர்களுக்குப் பதிலாக இராணுவமே அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

அதியுயர் பாதுகாப்பு வலயமாகக் காங்கேசந்துறை பகுதி பிரகடனப் படுத்தப்பட்டதால், கல்லூரிவீதியில் இருந்த நடேஸ்வராக்கல்லூரி இயங்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. யுத்த சூழ்நிலைகாரணமாகப் காங்கேசந்துறை நடேஸ்வராக்கல்லூரி பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திருந்தது. ஊர்மக்கள், அதிபர்கள், ஆசிரியர்களின் விடா முயற்சியால் மீண்டும் பழைய இடமான கல்லூரிவீதியில் கல்லூரி இயங்க ஆரம்பித்தது. புதிய கட்டிடம், விளையாட்டு மைதான கட்டிடம் போன்றவற்றை அமைப்பதற்குப் பழைய மாணவர் சங்கங்கள் பெரும் உதவியாக இருக்கின்றன.

மக்கள் இடம் பெயர்ந்ததாலும், கல்லூரிவீதியின் ஒருபகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாலும் வருகைதரும் மாணவர்கள் தொகை குறைவாகவே இருக்கின்றது. கல்லூரியின் கிழக்குப்பக்கத்தில் இருந்து வரும் மாணவர்கள் வடக்கு நோக்கிப் பருத்துறைவீதி வழியாக காங்கேசந்துறை சந்திவரை சென்று சுற்றுப் பாதையால்தான் கல்லூரிக்கு நடந்து வரவேண்டிய நிலை இப்போது இருக்கின்றது. அதனால் வளர்ந்த பெண் பிள்ளைகளை அனுப்பப் பெற்றோர்கள் தயக்கம் காட்டுவதால், வசதி படைத்தவர்கள் வேறுபாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்புகின்றார்கள். ஒன்றுபட்டுச் செயற்பட்டால் இந்த நிலையை விரைவில் மாற்றி பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கை இன்னும் காங்கேசந்துறை மக்களிடையே இருக்கின்றது.