LOADING

Type to search

கனடா அரசியல்

“நல்லூரில் சங்கிலியன் இராஜதானி அமைந்திருந்த வளாகத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களையும் கட்டடங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது”

Share

கனடிய தமிழ் ஊடகப் பிரதிநிதிகளோடுடனான சந்திப்பில் யாழ்ப்பாண மாநகர மேயர் மணிவண்ணன் எடுத்துரைப்பு

” யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கந்தசுவாமி ஆலயம் மற்றும் சட்டநாதர் ஆலயம் ஆகியவற்றுக்கு அருகில் சங்கிலியன் மன்னன் ஆட்சிக் காலத்தில் இராஜதானி அமைந்திருந்த வளாகத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களையும் கட்டடங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே நாம் உடனடியாக இந்த செயற்பாடுகளில் ஒற்றுமையாக தகுந்த தலைமைத்துவத்தின் கீழ் செயலாற்ற கடமைப் பட்டவர்களாக உள்ளோம். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்திற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் அனைத்து நாடுகளிலிருந்தும் தங்கள் உதவிக் கரங்களை நீட்ட வேண்டும்”

இவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கனடிய தமிழ் ஊடகப் பிரதிநிதிகளோடுடனான சந்திப்பில் யாழ்ப்பாண மாநகர மேயர் மணிவண்ணன் எடுத்துரைத்தார். ஸ்காபுறோவில் உள்ள கனடிய தமிழர் பேரவையின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் திரு மணிவண்ணனுக்கு உதவியாக கனடிய தமிழர் பேரவையின் தலைவர் சிவன் இளங்கோ அவர்கள் பிரதான மேசையில் அமர்ந்திருந்தார்.

சங்கிலிய மன்னன் இராஜதானியில் அமைந்துள்ள வரலாற்றுச் சின்னங்களை மற்றும் கட்டடங்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் விடயம் தொடர்பாக மேயர் மணிவண்ணன் தொடர்ந்து உரையாற்றுகையில்.

”இந்த திட்டங்களை ஒழுங்கான முறையிலும் சட்ட நடைமுறைகளுக்கு ஏற்பவும் நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக ‘ யாழ்ப்பாணம் மரபுரிமை இயக்கம்’ என்ற அமைப்பு தற்போது யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் தலைவராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை முன்னாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இந்த அமைப்பின் முதற்கட்ட வேலையாக சங்கிலின் தோரணத்திற்கு முன்பாக அமைந்துள்ள ‘மந்திரி மனை’ என்ற வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கட்டடத்தை தொலலியல் திணைக்களத்திடமிருந்து அனுமதியைப் பெற்று அதனை பாதுகாக்கும் வகையில் புணரமைத்து பாதுகாப்பாக பராமரிப்பது என்ற திட்டத்தின் ஆரம்பக் கட்டமாக தொல்லியல் திணைக்களத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளோம்.

தற்போது இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பாரிய நிதி தேவைப்படுகின்றது.
இந்த நிதியை இலங்கை அரசாங்கமோ அன்றி தொல்லியல் திணைக்களமோ எமக்கு தராமாட்டா.எனவே எமது புலம் பெயர் உறவுகளிடமிருந்து நிதிஅன்பளிப்புக்களை நாம் ஏற்றுக்கொள்ளவுள்ளோம்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதே நேரத்தில் அதற்கு சமாந்தரமாக இந்த சங்கிலியன் இராஜதானி அமைந்திருந்த பிரதேசத்தில் அமைந்திருக்கும் சங்கிலியன் தோரண வாயில். ஜமுனா ஏரி. சங்கிலியன் அரண்மனை ஆகியவற்றை பாதுகாத்து பராமரிப்பது போன்ற பணிகளையும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.’ என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய கனடிய தமிழர் பேரவையின் தலைவர் சிவன் இளங்கோ அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ‘மந்திரி மனை’ பாதுகாத்து பராமரிக்கும் திட்டத்திற்கு தேவையான ஆரம்பக் கட்ட நிதியை கனடிய தமிழர் பேரவை சேகரித்து வழங்கும் என்று உறுதியளித்தார்.
◌தொடர்ந்து கனடிய தமிழ் ஊடகங்களான பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களின் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கும் மேயர் மணிவண்ணம் பதிலளித்தார்.

LJI ARJUNE AND GANESH