LOADING

Type to search

மலேசிய அரசியல்

நூலாசிரியர்களின் ‘பணம் காய்க்கும் மரம்’ பட்டுவிட்டது

Share

-நக்கீரன்

மலேசியாவின் பாரம்பரிய தலைநகரத்தில் நூல் வெளியீடு- நூல் அறிமுகம் உள்ளிட்ட தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் கலை-பண்பாட்டு நிகழ்ச்சி-களுக்கும் ‘ஆஸ்தான அரங்க’மாகத் திகழ்வது துன் சம்பந்தன் மாளிகையின் அடித்தளத்தில் அமைந்துள்ள டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர்.சோமா அரங்கம்தான். இதை மறுப்பார் என எவரும் இருப்பார் என நினைக்கவில்லை.

அந்த அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் இலக்கிய மாலைப் பொழுதில் இலக்கிய இன்பம் நாட வந்தவர்கள் எல்லாம் பேரரங்கத்தில் அமர்ந்துவிட, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மட்டும் பரிதவிப்பு மேலிட சிற்றரங்க வாயிற்பகுதி-யில் காத்திருந்தனர்.

அது ஒரு நூல் வெளியீட்டு விழா. நூலாசிரியர் மட்டும் மகிழ்ச்சி ரேகையும் ஒருவித ஐய ரேகையும் கலந்து முகத்தில் இழையோடிய வண்ணம் வெளியில் வந்துவந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தார். சிறப்புப் பிரமுகர்-நூல் வெளியீடு செய்பவர்- தலைமையுரை ஆற்றுபவர் என்றெல்லாம் முப்பரிமாணமிக்க ஒருவரை எதிர்பார்த்துதான் விழா நாயகனுமான அவர் காத்து நின்றார்.

நூல் வெளியீட்டு விழாக்களில் வழக்கமாக காணப்படும் இலக்கிய ஆர்வலர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், பத்திரிகை நண்பர்கள், மஇகா கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச மாநில-தொகுதிப் பொறுப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் என அனைவரும் பலகாரங்களையும் சுவைநீரையும் சுவைத்த பின்னர் அரங்கத்தினுள் அமர்ந்துவிட்டனர்.

அலுவலகப் பணி முடிந்து, கோலாலம்பூர் பயணிகள் மாலை வேளையில் வழக்கமாக சந்திக்கும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, நிகழ்ச்சிக்கு சற்று பின்னால் வந்தவர்கள், பலகாரத் தட்டுகளும் தேநீர்க் குடுவையும் இருந்த இடத்தைதான் முதலில் நாடினர்; ஆனால், அங்கிருந்தவர் “எல்லாம் முடிந்துவிட்டது” என்று சொன்னதைக் கேட்டு சற்று ஏமாற்றம் அடைந்து, பின்னர் சமாளித்து-சுதாரித்துக் கொண்டு, அப்படியே சுற்றி இருந்தவர்களை-யும் மெல்லமாக ஒரு நோட்டம் விட்டபடி, மொத்தத்தில் பலகாரமும் தேநீரும் கிடைக்காத ஏமாற்றத்தை மறைக்கமுடியாமல் அரங்கத்திற்குள் சென்று அமர்ந்து கொண்டிருந்தனர்.

பலகாரமும் தேநீரும் தீர்ந்துவிட்ட நிலையில், பின்னர் ஏன் அவர் காத்துக் கொண்டிருந்தார் என்றால், விழாவின் சிறப்புப் பிரமுகருக்காக சிறப்பாக பரிமாறப்பட்டு மூடிவைக்கப்பட்டிருக்கும் தட்டுகளும் காலியான பின் அவற்றையும் ஒருசேர எடுத்துக் கொண்டு செல்வதற்காகத்தான்;

இரண்டு-மூன்று பேர் மட்டும் கையில் அச்சிட்ட துண்டுக் காகிதங்களுடன் தனியாக உட்கார்ந்து கொண்டிருந்தனர். தமிழ்த் தாய் வணக்கப் பாடலை அடுத்து வரவேற்புரை முடிந்ததும் நிகழ்ச்சிக்கு வந்து அமர்ந்திருப்பவர்களின் கையில் கொடுத்து, ‘இவ்வளவு வெள்ளி கொடுத்து இந்த நூலைப் பெற்றுக் கொள்கிறேன்’ என்று உறுதி பெறுபெறுவதற்கான சீட்டுத்தாள்கள் அவை.

நாடாளுமன்ற கூட்டம், இலக்கிய நிகழ்ச்சி, திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்வாக இருந்தாலும் காலம் தப்பாமல் கலந்துகொள்ளக் கூடிய துன் ச.சாமிவேலனார் அன்றும் சரியான நேரத்திற்கு வந்தார். அதில் கலந்து கொண்ட பொதுமக்களும் கட்சியினரும்தான் மிகமிக சீக்கிரத்தில் வந்துவிட்டனர்.

அந்த நேரத்தில் அவருக்கு நாட்டின் உயரிய விருதான ‘துன்’ பட்டம் வழங்கப்படவில்லை. டத்தோஸ்ரீ பட்டம் மட்டும் கொண்டிருந்ததால், “வணக்கம் டத்தோஸ்ரீ, வாங்க டத்தோஸ்ரீ’ என்ற முகமன்மொழி நாற்புறத்தில் இருந்தும் ஒலிக்க, புன்னகை தவழ்ந்த முகம்-கூப்பிய கரங்கள் என அனைவரின் அன்பையும் ஒருசேர ஏற்றுக் கொண்ட டத்தோஸ்ரீ சாமிவேலு, நேராக நிகழ்ச்சி அரங்கிற்கு செல்ல முயன்றார்.

“பலகாரம் தயாராக இருக்குங்க டத்தோஸ்ரீ” என்று சொல்லி அவரை இடைமறித்தார் நூலாசிரியர். சிறப்பு மேசைக்குச் சென்ற அவர், அடுக்கி வைக்கப்பட்டிருந்த நால்வகைப் பலகாரங்களில், பாசிப் பயிற்று உருண்டைகளில் மட்டும் ஒன்றே ஒன்றை எடுத்துச் சாப்பிட்ட சாமிவேலு, எடுத்த எடுப்பிலேயே, இந்த உருண்டையில் கலந்துள்ள தேங்காய்ப்பூ, சாறு பிழியப்பட்ட சக்கை என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

எனக்கு பெருவியப்பாக இருந்தது;

நாட்டில் நீண்ட சாலைகளையும் அகன்ற பாலங்களையும் தட்டி தட்டி கட்டி எழுப்பும் ஓர் அமைச்சர், உணவு விடயத்திலும் இத்துணை சமர்த்தராக இருக்கிறாரே என்று எண்ணிப் பார்த்தேன்.

அரசியலில் தன்னை அண்டி நின்றவர்களை எப்படி தாய்க் கோழியைப் போல பாதுகாத்தாரோ, அதைப்போல தமிழிலக்கிய வட்டத்திலும் தனக்கு ஆதரவான எழுத்தாளர்களுக்கு பாரி மன்னனைப் போல விளங்கினார் சாமிவேலு.

ஓர் எழுத்தாளர், தன் நூல் வெளியீட்டு விழாவிற்கான தேதியை அவரிடமிருந்து பெற்றுவிட்டால், அந்த எழுத்தாளர் கரைசேர்ந்தார் என்று பொருள்.

மஇகா 2-ஆம் கட்ட, 3-ஆம் கட்ட தலைவர்களின் சட்டைப் பையில் கை வைக்காத குறையாக அவர்களிடம் கேட்டுக்கேட்டு பெற்று, குறைந்தது அரை இலட்சமாவது வசூலித்து சம்பந்த எழுத்தாளரிடம் ஒப்படைப்பார்.

ஒருமுறை மஇகா தலைமையகத்தின் நேதாஜி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நூல் வெளியீட்டு நிகழ்வின்போது, கடுமையான இடைநில்லாத மழை; மாலை 7:00 மணிக்கு தொடங்க இருந்த நிகழ்ச்சி, எட்டு மணியைத் தொட்ட பின்னும் வெறும் 12 பேர்தான் வந்திருந்தனர். அப்போதுகூட, சொந்தப் பணத்தைப் போட்டு 25 ஆயிரம் வெள்ளியை வழங்கி, தன்னை நம்பிய எழுத்தாளரை கண்கலங்காமல் காத்தவர் சாமிவேலு.

அரசியலில் கடும்போக்காளரார வாழ்ந்த சாமிவேலு, இலக்கிய மேடையில் ஒருகாலும் அரசியலைக் கலக்கமாட்டார். அந்தக் கண்ணியத்தை கடைசிவரைக் காப்பாற்றிய அவர், நூல், நூலாசிரியர், சமுதாயத்தைப் பற்றி மட்டுமே பேசுவார்.

ஒரு சில எழுத்தாளார்கள் தங்களுக்கு ஏதேனும் பணமுடை ஏற்பட்டால், உடனே சாமிவேலு தலைமையில் ஒரு நூல் வெளியீட்டு விழாவை நடத்தினால் மீட்சி பெறலாம் என்ற நம்பிக்கையை மலேசியாவில் வாழ்கின்ற தமிழ் எழுத்தாளர் சமூகத்தில் ஏற்படுத்திய கோமகனைப் போன்ற சாமிவேலனாரின் மறைவு, நாட்டின் அரசியல் தளத்திற்கு மட்டுமல்ல; தமிழ் இலக்கிய வட்டத்திற்கும் இழப்பாகும்.

87 வயதான சாமிவேலு, அறிஞர் அண்ணவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-இல் மறைந்தார். மலேசியத் தமிழர்களையும் இந்திய சமுதாயத்தையும் ஒரு தலைமுறைக் காலத்திற்கு அரசாங்கத்தில் பிரதிநிதித்த அவர், அரசியல் களத்தில் ஏற்படும் வெம்மையைத் தணித்துக் கொள்வதற்காகவே இலக்கிய நிகழ்ச்சிகளில் விரும்பிக் கலந்துகொண்டார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு பணம் காய்க்கும் மரமாகத் திகழ்ந்து வந்தார் தமிழ் இன-மொழி உணர்வாளரான துன் சாமிவேலு.

வாழ்க சாமிவேலு புகழ்!

வளர்க மலேசியத் தமிழர்கள்!!