LOADING

Type to search

கனடா அரசியல்

காரைநகர் இந்து பழைய மாணவர் சங்க கனடா கிளையின் 10 ஆவது ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலாநிதி ஆறுமுகம் நல்லநாதன்

Share

காரைநகர் இந்துக் கல்லூரியின் மகிமை மிக்க பழைய மாணவனான கலாநிதி ஆறுமுகம் நல்லநாதன் லண்டன் Queen Mary பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் தொலைத் தொடர்பாடல் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றி வருபவர்.

பேராசிரியர் நல்லநாதன் தனது ஆரம்பக் கல்வியை சுப்பிரமணிய வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை காரைநகர் இந்துக் கல்லூரியிலும், உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றவர். பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான இவர், பொறியியல் பட்டப்படிப்பினை முடித்த பின்னர் பேராதனை பல்கலைக் கழகத்திலேயே விரிவுரையாளராகப் பணியாற்றியிருந்தவர்.

Cambridge பல்கலைக்கழகம், Hong Kong பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கலாநிதிப் பட்டப்படிப்பினை மேற்கொண்டு பொறியியல் துறையில் கலாநிதி பட்டத்தினைப் பெற்றுக்கொண்ட இவர், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக 2007ஆம் ஆண்டு வரை சேவையாற்றினார். பின்னர் பெரிய பிரித்தானியாவிற்குச் சென்று லண்டன் King’s Collegeஇல் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றியதைத் தொடர்ந்து பேராசிரியராகப் பதவியுயர்வினைப் பெற்றுக் கொண்டார்.

2017ஆம் ஆண்டு தொடக்கம் Queen Mary பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் தொலைத் தொடர்பாடல் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றி வரும் நல்லநாதன், தகவல் தொழில்நுட்பத்துறையில் சர்வதேச அளவில் சாதனைகள் படைத்து வருபவர்.

சர்வதேச பல்கலைக்கழக மட்டங்களில் கீர்த்திமிகு பட்டியலாகக் கருதப்படுகின்றதான 2016ஆம் ஆண்டு அதிகமாகக் குறிப்பிடப்பட்ட ஆராய்ச்சியாளர் பட்டியலில் பேராசிரியர் நல்லநாதன் அவர்களும் இடம்பெற்று சாதனை படைத்திருந்தார்.

உலக அளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிபுணர்களின் நிறுவனமான மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் நிறுவனத்தில் (IEEE) Fellow உறுப்பினர் என்ற தகுதியைப் பெற்றுக் கொண்டு மற்றுமொரு உயரிய கௌரவத்தினைப் பெற்றுக் கொண்டவர்.

IEEE Fellow உறுப்பினர் என்ற தகுதி தொழில்நுட்ப சமூகத்தினால் அதிசிறந்த கௌரவமாகவும் முக்கியமான தொழில்துறைசார் சாதனையாகவும் அங்கீகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். IEEE நிறுவனம் அதன் 16 ஆவது சர்வதேச மாநாட்டிற்கு பேராசிரியர் நல்லநாதன் அவர்களை கௌரவ விருந்தினராக அழைத்து சிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

நாவலடிக்கேணி, காரைநகரைச் சேர்ந்த சிறந்த கல்விப் பின்புலத்தைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த நல்லநாதன் அவர்களின் தந்தையார் அமரர் ஆறுமுகம் புகழ்பெற்ற ஆசிரியராக விளங்கியவர்.

சர்வதேச அளவில் சாதனைகளை ஏற்படுத்தி உயரிய கௌரவங்களைப் பெற்று காரை. இந்து அன்னையை பெருமைப்படுத்தி வருகின்ற பேராசிரியர் நல்லநாதன், எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம்திகதி சனிக்கிழமை கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெற ஏற்பாடாகியுள்ள பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 10 ஆவது ஆண்டு விழாவின் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வது விழாவிற்கு பெரும் சிறப்பினைச் சேர்ப்பதுடன் கல்லூரி அன்னையையும் பேருவகை கொள்ள வைத்துள்ளது.