LOADING

Type to search

கனடா அரசியல்

ஒட்டாவா சிவன் கோவிலுக்கு இணைந்து சென்று சிவனருளைப் பெற்ற கியூபெக் மூத்தோர் இணைய உறுப்பினர்கள்

Share

இளவரசி இளங்கோவன் ,
மொன்றியல் , கனடா

15/10/2022ம் நாள் சனிக்கிழமைகாலை 7 மணி வரை மதில் மேல் பூனை போல் போகலாமா வேண்டாமா என்று குழப்பத்திற்கு இடையில் ஒவ்வொரு விடயத்தையும் வாய்ப்பாகவும் நமக்கு ஏதோ ஒன்று கிடைக்கப்போகிறது என்று எதிர்பார்போடும் அணுகுவதால் கடைசி நிமிடத்தில் நிச்சயமாக நாம் இன்று சிவனைப் போய் தரிசிக்க வேண்டும் என்று உள்ளிருந்து ஒரு குரல் கேட்கவே 7 வயது மகனோடு கிளம்பினேன்.

ஒட்டாவா சிவன் கோவிலுக்கு புறப்பட்டு வீட்டை விட்டு வெளியில் வந்த பொழுது மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. ஆமாம் கடந்த வருடம் இதே போல புரட்டாசி கடைசி சனியில் நாங்கள் ஒட்டாவா சிவன் கோவிலுக்கு சென்ற பொழுது எப்படி ஒரு புகை சூழ்ந்த மேகமூட்டத்துடன் அதிகாலை காட்சியளித்ததோ அதேபோல இந்த பயணத்தின் போதும் காட்சியளித்தது எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது.

கியூபெக் மூத்தோர் இணையம் அறிவித்தபடி ஒட்டோவா சிவன் கோவிலுக்கு 15/10/2022ம் நாள் சனிக்கிழமை காலை 8 மணிக்கு Van Horne Tim Hortons க்கு (Station Plamondon) முன்பாக இருந்து பேருந்து புறப்பட்டு பின் முருகன் கோவில் முன்பாக 15 நிமிடங்கள் நின்று மேலும் பல பக்தர்களை அரவணைத்துக்கொண்டு மொத்தம் 43 பேருடன் (பெரியவர்கள் 42, சிறுவர்கள் 1) பெரிய பேருந்து ஆலயம் நோக்கி புறப்பட்டது .

கியூபெக் மூத்தோர் இணையத்தலைவர் ஐயா திரு.முத்துக்குமார் சிவானந்தன் பேருந்திலிருந்த அனைவரையும் அன்புடன் வரவேற்று வசதியை உறுதி செய்து கொண்டார்.
எல்லோரும் காலையிலிருந்து விரதத்தை கடைபிடித்து எதுவும் சாப்பிடாமல் பக்தி பயணத்தை தொடங்கினர்.

இடையில் நிமிடங்கள் தேநீர் இயற்கை உபாதைகளுக்கு ஒதுக்கப்பட்டு பக்திபயணம் தொடர்ந்தது.இரண்டு மணிநேர பயணம் ஒரு சிறிய தடங்கலுக்கு பிறகு ஈசனின் அருளால் அனைவரும் பத்திரமாக போய் சிவன் கோவிலில் இறங்கினோம்.

சிறிய அளவில் தற்போது கோவில் அமைந்தாலும் பெரிய கோவில்கட்டும் பணிக்காக காத்திருந்தது சிவனாலயம்.நிர்ணயிக்கப்படட 5M தொகையில் பாதி சேர்ந்திருப்பதாக அறிய நேர்ந்தது.

சிவபக்தர்கள் அனைவரும் அர்ச்சனை, எள் தீபம் வேண்டி உள்நுளைய ஆலயம் நிரம்பி வழிந்தது. ஏற்கனவே தரிசித்த பக்தர்களுக்கு தெரியும். இருப்பினும் வசிக்கும் புதியவர்களுக்காக இந்த தகவல்.கற்பகவிநாயகர், செல்வ முத்துக்குமாரசாமி இருபுறமும் வீற்றிருக்க வைத்தியநாத சுவாமி சிவலிங்கமாக தலையில் நாகமுடி சூட காட்சி தருகிறார்.தையல்நாயகி அம்மாளும், நடராசா பெருமாளும்,நவக்கிரக மூர்த்திகளும் பைரவரும், சூரிய பகவானும் உடனுறைந்திருக்கிறார்கள்.

எள் விளக்கு ஏற்றப்பட்டு வெளியில் வைக்க வழி செய்யப்பட்டுள்ளது .

மூத்தோர் இணைய தலைமையாளர் ஐயா திரு.முத்துக்குமார் சிவானந்தன் கணீரென தீந்தமிழில் பாட பக்தியோடு ஒன்ற முடிந்தது.

ஆலயத்தின் முன்பும் பேருந்தின் முன்பும் புகைப்படம் எடுத்து கொண்டபின் வீடு நோக்கிய பயணம் தொடங்கியது.

அதனை தொடர்ந்து மொன்றியல் நகைச்சுவை நாயகர் திரு பாலா அண்ணா அவர்களோடு சேர்ந்து நல்ல பாட்டுக்கள், நகைச்சுவை என வாய்விட்டு சிரிக்க வாய்த்திட்டது நல்ல வாய்ப்பு.
மேலும் சில அன்பர்களால் உளுந்து வடை வழங்கபட்டது.

இந்த மாதிரி பயணங்கள் நிச்சயமாக தேவைப்படும். இளையவர்களோடு நாம் உறவாடும் போது நாம் இளமையாக உணர்வோம். முதியவர்களோடு உறவாடும் போது நிறைய அனுபவங்களை பெறுவோம். நம் வயது ஒத்தவர்களோடு இருக்கும்போது பொழுது மகிழ்ச்சியாக உணர்வோம்.

இந்த முதியவர்களோடு பயணிக்கும் பொழுது நிறைய ஆசீர்வாதங்களும் அன்பும் நிறைய அனுபவமும் அவர்களுடைய வாழ்வியல் பாடங்களும் அவர்கள் பேச்சின் வழியாக அறியக்கூடியதாக இருந்தது. அந்த வகையில் பயணம் சிறப்பாக இருந்தது. திரும்பி வரும் பொழுது பக்தி பாடலில் தொடங்கி ஐயப்பப் பக்தி பாடல்கள், மனதை மயக்கும் பழைய பாடல்கள் பாடி மகிழ்ந்தனர். அபிமானி திருமதி தில்லை யசோதா தொடக்கி வைக்க அனைவரும் உற்சாகமாக பாடினர்.

மொத்தத்தில் ஒட்டவா வைத்தியநாதன் ஆலய பயணம் பக்தி பரவச பயணமாகவும் மனிதர்களை சந்தித்து ஒரு புத்துணர்வு பயணமாகவும் இருந்தது.

வாய்ப்பு உள்ளவர்கள் சென்று வாருங்கள் .மொன்றியலில் இருந்து 2 மணித்தியால பயணம் தான். மறக்காமல் புதிய ஆலய பணிக்கு நன்கொடையாக அர்ச்சனையோ, எள்விளக்கோ வாங்கி பயன்பெறுங்கள்.

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று ஒவ்வொரு சிவ தலங்களிலும் சிவனை தரிசிக்கும்போது மனதார ஆழ்ந்த மனதாக உச்சரிப்போம். எதற்காக தென்னாடுடைய சிவனே போற்றி என்று உச்சரிக்கிறோம். அதாவது சிவனை ஒரு குறிப்பிட்ட தினத்தில் வணங்கினால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கர்மவினைகள் காணாமல் போகும்.

முக்தி தலங்கள்
1. பிறக்க முக்தியளிப்பது திருவாரூர்
2. வாழ முக்தியளிப்பது காஞ்சிபுரம்
3. இறக்க முக்தியளிப்பது வாரணாசி (காசி)
4. தரிசிக்க முக்தியளிப்பது தில்லை (சிதம்பரம்)
5. சொல்ல முக்தியளிப்பது திருஆலவாய் (மதுரை)
6. கேட்க முக்தியளிப்பது அவிநாசி
7. நினைக்க முக்தியளிப்பது திருவண்ணாமலை மேற்கண்ட முக்தி தலவரிசையை நம்மில் பலர் அறிந்திருப்பார்கள்.

இவற்றில் காசியை தவிர மற்ற அனைத்தும் தென்னாட்டில் அமைந்துள்ளன. இதனால் தான் தென்னாடுடைய சிவனே போற்றி…! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!! என்ற முழக்கம் உருவாயிற்று போலும்.

ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் மேற்கண்ட தலங்களில் ஏதாவது ஒன்றிற்கு சென்று இறைவனை வழிபட்டால் நமது கர்மவினைகள் அடியோடு அழிந்து மிகுந்த புண்ணியம் கிட்டும்.

ஒரு சிலரால் மட்டுமே இது சாத்தியம். அவ்வாறு செய்பவர்கள் மிகுந்த புண்ணியசாலிகள். மேற்கண்ட தலங்களுக்கு செல்ல இயலாவிடில் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். அருகில் உள்ள சிவதலத்திற்கு குடும்பத்துடன் சென்று சிவபெருமானுக்கு அபிசேகம் செய்து வரலாம். அர்ச்சனை செய்யலாம். அன்னதானம் செய்யலாம். சிவத்தலத்தில் மந்திரம் செபிக்கலாம். அவ்வாறும் செய்ய இயலாவிடில் சிவனது மந்திரங்களை கேட்கலாம். சிவபெருமானின் பெருமைகளை பேசலாம்.

அவ்வாறும் செய்ய இயலாவிடில் சிவபெருமானை நினைத்து கொண்டே இருக்கலாம். இவ்வாறு செய்யும் போது நமது கர்மவினைகள் அடியோடு அழியத்தொடங்கும். மிகுந்த புண்ணியம் கிட்டும். 16 பேறுகளும் கிட்டும். சிவபெருமானின் அருளால் நிம்மதியான வாழ்வு கிட்டும். தென்னாடுடைய சிவனே போற்றி…! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

நன்றி
இளவரசி இளங்கோவன் ,
மொன்றியல் , கனடா