மலேசியாவின் 10-ஆவது பிரதமரை அடையாளம் காணும் 15-ஆவது பொதுத் தேர்தல்
Share
-மலேசியா நக்கீரன்
கோலாலம்பூர், நவ.10:
குறைப்பிரசவ குழந்தையைப் போல மலேசியாவின் 14-ஆவது நாடாளுமன்றம் அதன் முழு தவணைக் காலத்தை நிறைவுசெய்வதற்கு முன்பே வல்லடியாக அரசியல் தன்னலவாதிகளால் களைக்கப்பட்டதன் விளைவாக, நாடு இப்பொழுது 15-ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ளது.
இந்தத் தேர்தல் முடிவு மலேசியாவின் 10-ஆவது பிரதமரை நாட்டிற்கு அடையாளம் காட்டும்.
நவம்பர் 19-ஆம் நடைபெறவுள்ள மலேசியாவின் பொதுத் தேர்தல் பரப்புரைக்காக இரு வார அவகாசம் இருக்கும் வகையில் நவம்பர் 5-ஆம் நாளை வேட்பு மனுத்தாக்கல் தினமாக மலேசிய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
2022 மார்ச் 12-இல் மலேசியாவின் தென் கோடியில் சிங்கப்பூருக்கு அருகில் அமைந்துள்ள ஜோகூர் மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றதில் இருந்தே நாடாளுமன்றத்தைக் களைக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வந்த தேசிய முன்னணி, சுமார் 6 மாதங்களுக்குப் பின் தான் எண்ணியதை சாதித்தது; இஸ்லாம் சமய இறைத்தூதர் முகமது நபியின் பெயரன் இமாம் உசேனின் நினைவு நாளான அக்டோபர் 10-இல் கடந்த நாடாளுமன்றம் களைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் களைக்கப்படுவதற்கு முன்பு இருந்த அரசியல் நிலவரம், களைக்கப்பட்டதற்குப் பின் மெல்ல மாறியது; மலேசியாவின் 15-ஆவது தேர்தல் திருவிழா தொடங்கிய நவம்பர் 5-க்குப் பின், நாட்டின் அரசியல் களம் நாளுக்கு நாள் மாறி வருகிறது.
அரசியல் நிலைத்தன்மை, சீரான பொருளாதார வளர்ச்சி, பொருட்களின் விலைக் கட்டுப்பாடு, இளைஞர் சமுதாயத்திற்கான வேலை வாய்ப்பு ஆகிய முக்கிய அம்சங்களுக்கு நிரந்தரத் தீர்வைக் காணும் வகையில் நாட்டு மக்கள் தங்களுக்கான நிலையான அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கான 15-ஆவது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் அன்றுதான் இடம்பெற்றது.
நாடு முழுவதும் இருள்சூழ் வானிலையில் இந்த வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று முடிந்தாலும் இன்னும் பத்து நாட்களில் மக்களுக்கான ஒளிசூழ் எதிர்காலத்திற்கான அச்சாரமாக இது அமையும்.
இது பருவ மழைக்காலம் என்பது தெரிந்தும், நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடியும் தலைவர்களின் தன்னலப் போக்கும் மக்களின்மீது பொதுத் தேர்தலைத் திணித்துள்ளது. 14-ஆவது நாடாளுமன்றத்தை சீரழித்த கட்சித்தாவிகளான அரசியல் தவளைகளின் பின்னங்கால்களை வரவிருக்கின்ற 15-ஆவது பொதுத் தேர்தல் ஒட்டவெட்டும் என்பது திண்ணம்.
2018 மே 9-ஆம் நாளில் நடைபெற்ற கடந்த பொதுத் தேர்தலில் யார் பிரதமராக வரவேண்டும் என்று மக்கள் வாக்களித்தார்களோ அவரை வரவிடாமல் மற்ற மூவர் பிரதமர் ஆவதற்கும் வரிசையாக கொள்ளைப்புற அரசுகள் அமைவதற்கும் காரணமான போக்கிரி அரசியல்தனத்திற்கும் இந்தத் தேர்தல் முடிவுரை எழுதக்கூடும்.
அதைவிட நம்பி வாக்களித்த மக்களுக்கு துணிந்து துரோகம் இழைக்கும் சுயநல மக்கள் பிரதிகளுக்கும் வாக்காளர்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்பதும் உறுதி!
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் அதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடைபெறுவது வழக்கம். வட்டார அரசியல் சூழலால், சில தேர்தல்களின்போது, ஒரு சில மாநிலங்கள் விடுபட்டதும் உண்டு.
ஆனால், இந்த முறை பொதுத் தேர்தலோடு பேராக், பகாங், பெர்லிஸ் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெற வேண்டிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி, நாட்டிற்கு பொருளாதார சுமையையும் அரசியல் நிலையற்றத் தன்மையையும் ஏற்படுத்திய சுயநல தலைவர்கள், அதைப்பற்றி யெல்லாம் கவலைப்படாமல் பொழுது விடிந்தால் ஒரு பேச்சு, பொழுது சாய்ந்தால் இன்னொரு கருத்து என வஞ்சக அரசியலை பஞ்சமில்லாமல் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் இருமுறை பிரதமர் துன் மகாதீரின் பெஜுவாங் கட்சி நிறுத்திய 42 வேட்பாளர்களும் வைப்புத் தொகையை இழந்தனர். இந்த லட்சணத்தில் தான் 3-ஆவது முறையாக பிரதமர் ஆகும்படி சிலர் விரும்புவதாக தானாகவே வெளிப்படுத்திக் கொள்ளும் மகாதீர், அவர் ஆற்ற வேண்டிய கடமை இன்னும் இருப்பதாக சொல்லிக் கொண்டு 97வயதில் மீண்டும் போட்டி இடுகிறார்.
டத்தோஸ்ரீ அன்வாரின் ஆதரவால் 2-ஆவது முறை பிரதமரான மகாதீர், கடைசியில் அன்வாரை பிரதமர் ஆகாமல் தடுத்து தேசிய அரசியலை நாசம் செய்தது போதாது என்று எண்ணி, ஒருவேளை, இந்தத் தேர்தலில் அன்வார் பிரதமராகும் வாய்ப்பு நேர்ந்தால் அதை எப்படி தடுப்பது என்பதற்கான குயுக்தியைத்தான், தான் இன்னும் செய்ய வேண்டிய பணி இருப்பதாக அவர் சொல்லி வருகிறார் போலும்.
மலேசிய அரசியல், வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்றால், இந்தத் தேர்தலில் யார் யாரை மண்ணைக் கௌவ வைக்க வேண்டும் என்பதில் வாக்காளப் பெருமக்கள் விழிப்பாக இருக்கின்றனர்.
நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கு துணைபுரியும் வகையில், மலேசிய நாடாளுமன்றத்தின் 222 இடங்களுக்கு, யார் யாரைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதை மனதில் கொண்டு அந்தந்தத் தொகுதி மக்கள் வாக்களிக்கும் நவம்பர் 19-நாள் பின்னிரவில் நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பது தெரியவரும்.