LOADING

Type to search

கதிரோட்டடம்

மாங்கனித் தீவின் பொருளாதாரம் வளம்பெற தம்மை உரமாக்கிய மலையகத் தொழிலாளர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்

Share

கதிரோட்டம் 18-11-2022

இலங்கைக்கு இருநூறு வருடங்களுக்கு முன்னர் நாடு பிடிக்க வந்த வெள்ளைக்காரர்களுக்கு இந்த மாங்கனித் தீவு நன்கு பிடித்துக் கொண்டதால். அங்கு காணப்பட்ட வளமிக்க நிலங்களை செல்வத்தை ஈட்ட வல்ல விளை நிலங்களாக்கினர்.

மலை நாட்டு பிரதேசங்களில் தேயிலை. கோப்பி றப்பர். கறுவா மற்றும் ஏலக்காய் போன்ற திரவியங்களை பயிர் செய்யும் வகையில் அங்கு தோட்டங்களை அமைக்கத் தொடங்கினார்கள். தொடர்ந்து அந்த காலப்பகுதியில் முக்கியமாகத் தேவைப்பட்ட தொழிலாளிகளின் தேவை கருதி இந்தியாவின் தென்பகுதிகளிலிருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்தார்.

இந்த வரலாறு என்பது இலட்சக் கணக்கான துன்பியல் அனுபவங்களைக் கொண்டது என்பதை இந்த தொழிலாளர்களின் இலங்கை நோக்கிய பயணம் தொடர்பான விபரங்களை வாசித்தவர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள்.

வுழியில் தங்களோடு பயணம் செய்தவர்கள் ஆயிரக் கணக்கில் இறந்தபோதும் அவர்களின் இழப்புக்களையும் மனங்களில் தாங்கிக் கொண்டு இலங்கையின் மலை நாடு என்னும் புதிய தாயகத்தை நோக்கி அவர்கள் சவால்களுக்கு மத்தியில் பயணித்தார்கள்.

அவ்வாறு இலங்கையின் மலை நாட்டு மண்ணில் குடியமர்த்தப்பட்ட அவர்கள் இன்று வரை மாடுகள் போல தங்களை வருத்திய வண்ணம் உழைக்கின்றார்கள். இதனால் இலங்கையின் பொருளாதாரம் உச்சத்தைத் தொட்டது. ஆனால் அவர்களது வாழ்வு அடி மட்டத்தோடு தான் தொடர்கின்றது.

ஆனால் இவர்களால் உயர்ந்தவர்கள் தோட்ட முதலாளிகளும் அவர்களோடு இணைந்த வர்த்தகர்களும் என்பது வெள்ளைத் தாளில் எழுதப்பட்ட உண்மைகள். ஆனால் இன்னொரு பிரிவினரும் இந்த தொழிலாளர்களின் உழைப்பினால் உயர்ந்தவர்களாக மலையகப் பகுதிகளில் காணப்படுகின்றார்கள். அவர்கள் தான் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கத் தலைவர்கள். தொண்டமான் தொடக்கம் இராதாகிருஸ்ணன் வரை அனைவரும் சுகபோகங்களை அனுபவிக்கு அதிஸ்டம் நிறைந்தவர்களாக தங்கள் வாழ்க்கையை  இனிக்க இனிக்க அனுபவிக்கின்றார்கள்.

இந்த மலையகத் தொழிற்சங்கத் தலைமைகள் பற்றி இவ்வார உதயன் பக்கம் ஒன்றில் இலங்கையின் சிரேஸ்ட பத்திரிகையாளர் வி. தேவராஜ் எழுதியுள்ளதை நாம் அனைவரும் ஊன்றிப் படிக்க வேண்டும்

“மலையகத் தலைமைகள் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்” என்று ஆரம்பிக்கும் தேவராஜ் அவர்கள் தொடர்ந்து எழுதுகின்றார்.

மலையக தொழிங்சங்க அரசியல் தலைமைகளின் ஒன்றிணைவினால் மலையகத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர் பார்ப்பார்களாயின் அது பகல் கனவாகவே இருக்கும். ஏனெனில் இவர்கள் அனைவரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே. இவர்களுக்கும் இவர்களைச் சார்ந்தவர்களுக்கும் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை மற்றும் பிரதேச சபை ஆசனங்களைக் கைப்பற்றிக் கொள்வதற்கான ஏணியே மலையக மக்கள். இதற்கும் அப்பால் தேசியக் கட்சிகளுக்கு மலையக வாக்குகளை வாரி வழங்கும் “தரகர்கள்” அதற்கு ஈடாக தமக்கு அமைச்சுப் பதவிகளையும் தாம் சார்ந்தவர்களுக்கு உயர் பதவிகளையும் பெற்றுக் கொடுப்பதே இவர்களின் அரசியல் பேரம். மலையகத் தலைமைகளின் இந்தப் பேரங்களில் வாக்களித்த மலையக மக்களுக்கு ஒரு நன்மையும் கிட்டவில்லை.

ஆட்சிபீடம் ஏறும் தேசியக் கட்சிகள் அமைக்கும் அரசாங்கத்தில் பங்காளிகளாவது அமைச்சுப் பதவிகளைப் பெறுவது சுகபோகங்களை அனுபவிப்பது இறுதியில் ‘இவர்களால் மலையகத்திற்கு ஏதும் பிரயோசனமில்லை. இவர்களுடனான உறவை நாங்கள் அறுத்துக் கொள்கின்றோம்‘ என்று கூறி இன்னொரு கூட்டணிக்குத் தாவுதல். அடுத்த தேர்தல்வரை கூட்டு பிறகு அதே பல்லவி என மலையக தொழிற்சங்க அரசியல் சுழன்று கொண்டிருக்கின்றது.

இந்த சுழற்சியில் சிக்கி தலைகள் சுற்றுவது போல. மலையக மக்களே அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே தவிர மலையகத் தொழிற்சங்கத் தலைவர்கள் தாங்கள் சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் பணம் ஆகியவற்றில் தினமும் திளைத்தபடி அடுத்த பதவிகளைப் பெறுவதற்காக காத்துக்கிடக்கின்றார்கள்