LOADING

Type to search

கனடா அரசியல் விளையாட்டு

உலகக் கிண்ண உதைபந்தாட்டமும் கனடாவும் – 2022

Share

குரு அரவிந்தன் – Canada

இம்முறை 2022 ஆண்டு கனடாவும் உலக்கிண்ண விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது. 36 வருடங்களின் பின், அதாவது 1986 ஆம் ஆண்டுக்குப் பின் இப்பொழுதுதான் கனடா இந்த நிலைக்கு முன்னேறியிருக்கின்றது. புலம்பெயர்ந்து வந்த தமிழ் மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய கனடா நாடு உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுக் கலந்து கொண்டதில் கனடிய மக்களாகிய எங்களுக்குப் பெருமையே.

கடந்த 23 ஆம் திகதி கனடாவும், பெல்ஜியமும் மோதிக் கொண்டன. பெல்ஜியம் உதைபந்தாட்டத்தில் முன்னணியில் நிற்கும் ஒரு நாடாகும். போட்டியின் முதற்பகுதியில் கனடா வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் இரண்டாவது பகுதியில் ஓய்ந்து போயிருந்தார்கள். இதற்கு முக்கிய காரணம், உளரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள். போட்டி ஆரம்பத்தில் கனடாவுக்குக் கிடைத்த பனால்டியைக் கனடிய வீரர்கள் சரிவரப் பயன்படுத்தவில்லை. இரண்டாவது, இடைவேளைக்குச் சற்று முன்பாகப் பெல்ஜியம் ஒரு கோலைப் போட்டிருந்தது. இதனால் கனடிய வீரர்கள் மனம் தளர்ந்து போயிருந்தார்கள். விளையாட்டுத் தொடங்கிய நேரத்தில் இருந்து கனடாவிற்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் முன்நிலை வீரர்களின் தவறுகாரணமாக அத்தனை பந்துகளும் திரும்பத்திரும்ப வெளியேதான் அடிக்கப்பட்டன. அங்கேதான் அவர்களின் பயிற்சியில் ஏதோ தவறு நடந்திருப்பதைச் சாதாரண இரசிகர்களால் கூட அவதானிக்க முடிந்தது.

உலகக் கிண்ண உதைபந்தாட்டம் இம்முறை மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கட்டாரில் நடைபெறுகின்றது. சிறிய நாடான கட்டார், கட்டார் விமானச் சேவை மூலம் சர்வதேச பயணிகளுக்கு நன்கு அறிமுகமானது. இதுவரை எந்த ஒரு உலகக்கிண்ண போட்டியிலும் பங்கு பெறாத கட்டார் நாடு இம்முறை தனது நாட்டிலேயே போட்டியை நடத்துவதற்கான தகுதியைப் பெற்றிருந்தது. இதற்குப் பின்னால் சில மறைமுக நடவடிக்கைகள் காரணமாக இருந்ததாகவும் அவ்வப்போது சில குற்றச் சாட்டுக்கள் இருந்தன. எது எப்படியோ இதுவரை அங்கு நடந்த போட்டிகள் சிறப்பாக நடைபெறுவதை அவதானிக்க முடிகின்றது. பாலைவனச் சுவாத்தியம் கொண்ட கட்டாரில் விளையாட்டு மைதானமும் குளிரூட்டப்பட்டிருப்பது விசேட அம்சமாகும்.

உலகிலே அதிக மக்கள் விருப்போடு பார்க்கும் ஒரு விளையாட்டாக உதைபந்தாட்டம் இருக்கின்றது. பிரித்தானியா தனது கட்டுப்பாட்டுக்குள் இருந்த நாடுகள் எல்லாவற்றிலும் உதைபந்தாட்டத்தை அறிமுகம் செய்திருந்த படியால், பல நாடுகள் பங்குபெறும் இந்த விளையாட்டு இன்று உலகப் பிரசித்தி பெற்ற விளையாட்டாக மாறியிருக்கின்றது. இதன் காரணமாக இலங்கையிலும் உதைபந்தாட்டம் பிரபலமான விளையாட்டாக இருப்பது மட்டுமல்ல, அதிக பார்வையாளர்களைக் கொண்ட விளையாட்டாகவும் இது இருக்கின்றது.

அதிர்ச்சி தரும் எதிர்பாராத சில மாற்றங்கள் கட்டாரில் இதுவரை நடந்த சில போட்டிகளில் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக சவூதி அரேபியா, யப்பான் ஆகிய நாடுகளின் வெற்றி ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. பிரபல விளையாட்டுக் குழுவான ஆஜன்ரைனாவை சவூதிஅரேபியா தோற்கடித்திருந்தது. அதே போல ஜேர்மனியை யப்பான் தோற்கடித்திருந்தது. இந்த இரண்டு முக்கியமான மாற்றங்களும் புதிய குழுக்களுக்குத் தங்களாலும் முடியும் என்ற உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இன்னும் ஒரு போட்டியில் ஸ்பெயின் கோஸ்ராறிக்காவை 7-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று இதுவரை நடந்த போட்டிகளில் அதிக கோல்கள் போட்ட குழுவாக இருக்கின்றது. போத்துக்கல் – கானா விளையாட்டில் போத்துக்கல் வெற்றி பெற்றாலும் கானா வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடியதை அவதானிக்க முடிந்தது. இந்த விளையாட்டில் கலந்து கொண்ட போத்துக்கல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பனால்டி மூலம் ஒரு கோலைச் சிறப்பாகப் போட்டிருந்தார்.

வருகின்ற 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா – குறோசியாவோடு போட்டி போட இருக்கின்றது. டிசெம்பர் 1 ஆம் திகதி வியாழக்கிழமை கனடா – மொறக்கோவோடு போட்டி போட இருக்கின்றது. புள்ளிகள் அடிப்படையில் கனடா எங்கே நிற்கின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். டிசெம்பர் மாதம் 18 ஆம் திகதி உதைபந்தாட்ட உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடைபெற இருப்பதால், மொத்தம் 28 நாட்களில் விரைவாக இந்த விளையாட்டுப் போட்டி முடிவுக்கு வருகின்றது.

உலகிலே இரண்டாவது அதிக சனத்தொகை கொண்ட நாடான இந்தியா இதில் பங்கு பற்றாதது பெரும் குறையாக இருக்கிறது. உதைபந்தாட்டத்தில் சிறந்த பல வீரர்கள் இந்தியாவில் இருப்பது யாவரும் அறிந்ததே. தகுந்த முறையில் பயிற்சி கொடுத்தால் அவர்கள் உலகின் பார்வையை தம்பக்கம் திருப்புவார்கள் என்பது நிச்சயம். ஹொக்கி விளையாட்டில் புகழ் பெற்ற இந்தியா இப்போது அதையும் இழந்து விட்டது. அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற விளையாட்டுத்துறை இந்தியாவில் ஒதுக்கப்படுவது பெரும் கவலைக்குரியதாகவே இருக்கின்றது.