வரவு செலவுத்திட்ட உரையின் போதும் மக்கள் எழுச்சியை கொச்சைப்படுத்திய தகைமையற்ற ஜனாதிபதி
Share
கதிரோட்டம் 25-11-2022 வெள்ளிக்கிழமை
ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவின் 2023 வரவு-செலவுத் திட்டம் உரையானது வருமானம் மற்றும் செலவினங்களைப் பற்றிய விபரங்களை விட நாட்டு மக்களை நச்சரிக்கும் வகையிலேயே அதிகமாக கருத்துக்களை கொண்டு அமைந்துள்ளது.
இலங்கையில் வாழும் புத்திஜீவிகளும். மத்தியதர வர்க்கம் மற்றும் உழைக்கும் வர்க்கம் அத்துடன் மாணவர் சமூகம் என அனைத்து தரப்பினரையும் கொண்டு நிறுவப்பட்ட ‘அரசலய’ என்னும் போராட்டக் குழுவை விமர்சனம் செய்தும. இவ்வகையான போராட்டங்களோ அன்றி எழுச்சியோ ஆளும் வர்க்கத்தையோ அன்று அதிகாரத்தைக் கையில் எடுத்து வைப்பதற்கு பயன்படுத்தப்படும் இராணுவத்தையோ அச்சுறுத்தாது என்று தனது உரையில் ஆரம்பித்து இறுதியில் இனிமேல் எழுச்சி என்ற போர்வையில் எந்தப் போராட்டம் இடம்பெற்றாலும், அது இராணுவத்தின் துணை கொண்டு அடக்கப்படும் என்ற இழிவான வார்த்தைகளால் ‘இடித்துரைத்துள்ளார் இந்த நவீன ‘ஹிட்லர்’ ரணில் வி(அ)க்கிரமசிங்க.
இந்த ‘உப்புச் சப்பற்ற’ வரவு செலவுத்திட்டத்தை எதற்காக சமர்ப்பித்தோம் என்ற அர்த்தமே எடுத்தியம் இயலாத வகையில், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தற்போதைய அரசியல் குழப்பத்தை கருத்தில் கொண்டு, அந்த வரவு-செலவுத் திட்டம், உள்ளூர் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளின் பரந்த ஆதரவைப் பெறுவது மட்டுமல்லாமல், சர்வதேச அவதானிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற உதவி நிறுவனங்களின் நம்பிக்கை மற்றும் பாராட்டை பெறவும் தந்திரமாக வடிவமைக்கப்பட்ட ஆவணமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றே நாம் கூறவேண்டும்.
மேலும் முக்கியமாக ஜனாதிபதியின் தேர்தல் பிரபல்யத்தையும் எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் தனது செல்வாக்கை மேம்படுத்தும் என்ற சுயநல நோக்கமும் இந்தவரவு – செலவுத் திட்ட த்தின் ஊடாக எடுத்துச் செல்லப்படுகின்றது என இலங்கையின் பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளதையும் நாம் இந்த இடத்தில் எடுத்துக் கூற விரும்புகின்றோம்.. இந்த வகையில் இந்த ஆண்டு முடிவடையும் வேளையில், நாடு அரசியலமைப்பு ரீதியாக இன்னொரு ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகிவிடும் என்ற உண்மையைக் ரணில் விக்கிரமசிங்கா என்னும் தந்திரசாலி கொண்டிருப்பதையும் , 2023 வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கம் நன்கு படம் போட்டுக் காட்டியுள்ளது என்றே நாம் கவனித்துள்ளோம்.
இவை யாவற்றிற்கும் மேலாக, ரணில் விக்கிரமசிங்கவின் இவ்வாண்டுக்குரிய வரவு செலவுத்திட்டத்தில் எந்த வெற்றியும் முக்கியமாக பொருளாதார சமன்பாட்டினை நிலை நாட்டவில்லை என்றே பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும் மேலும் கூறுவதானால் ரணில் விக்கிரமசிங்கவின் 2023 வரவு செலவுத் திட்டம் வெளியில் உள்ள யதார்த்தத்தின் உண்மையான பிரதிபலிப்பைக் காட்டிலும் எதிர்பார்ப்புகள் மற்றும் அரசியலை அடிப்படையாகக் கொண்டு ஒரு கபடத்தனமான இன்னொரு பதவியேற்பு வைபவத்தை நோக்கியதாகவே காணப்படுகின்றது என்றும் கூறலாம்.