மலேசிய பத்துமலையில் திருமுறை விழாக்கோலம்
Share
-நக்கீரன்
பத்துமலை, நவ.27:
பத்துமலை தமிழ்ப் பள்ளி வகுப்பறைகள் எங்கும் திருமுறைப் பாடல்கள் ஒலித்தன; அதேவேளை, பள்ளியைச் சுற்றிலும் திருமுருக திருத்தல வளாகத்திலும் பெரியவர்கள் உட்பட சிறுமியரும் சிறாரும் பண்பாட்டு உடையில் வலம் வந்தக் காட்சி மனதை அள்ளுவதாக இருந்தது.
மலேசிய இந்து சங்கத்தின் சமய நிகழ்ச்சிகளில் திருமுறை விழாவிற்கு எப்போதும் முதலிடம் உண்டு. ஆறு சமயக் கொள்கைகளில் சைவ சமயத்தின் மறைப் பெட்டகமான திருமுறைப் பாடல்களை ஓதுவது இவ்விழாவின் நோக்கம்.
அந்த வகையில் சிலாங்கூர் மாநிலப் பேரவையின் 44-ஆவது திருமுறை விழா இன்று நவம்பர் 27-ஆம் நாள் பத்துமலை தமிழ்ப் பள்ளியில் நடைபெற்றது.
காலை 8:00 மணி அளவில் பதிவு நடவடிக்கையுடன் தொடங்கிய இவ்விழாவில், வட்டாரப் பேரவைகளின் சார்பில் போட்டியாளர்கள் கலந்து கொண்டு திருமுறைப் பாடல்களை பண்ணிசையுடன் பாடினர்.
நண்பகல் வரை போட்டி நடைபெற்றபின், உணவிற்கு பிந்திய இரண்டாவது அங்கத்தில் தலைவர்களின் உரை, திருவிழாவிற்கு துணை நின்றவர்களுக்கு சிறப்பு செய்தல், போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு ஆகிய அங்கங்கள் இடம்பெற்றன.
மாநிலச் செயலாளர் தொண்டர்மணி ரவிச்சந்திரனின் வரவேற்புரையைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் தொண்டர்மாமணி முனியாண்டி தலைமை உரையாற்றினார்.
கொரோனா தொற்று பரவலால் கடந்த ஈராண்டுகளாக திருமுறை விழா நடைபெறாமல் இருந்த நிலையில், இப்பொழுது நடைபெறும் 44-ஆம் ஆண்டு திருமுறை விழாப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ-மாணவியர், பெற்றோர், இந்து சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் குடும்பம் குடும்பமாக ஆயிரக் கணக்கில் கலந்து கொண்டுள்ளனர். இவ்விழா இனிதே நடைபெற அருள் வழங்கிவரும் பரம்பொருள் சிவபெருமானை வணங்குவதாக முனியாண்டி தன்னுரையில் குறிப்பிட்டார்.
இந்த விழாவிற்கு சிலாங்கூர் மாநில சார்பில் 20 ஆயிர வெள்ளி கொடையளித்த ஆட்சிமன்ற உறுப்பினர் கணபதி ராவிற்கும் நிகழ்ச்சி சிறக்க துணைநின்ற அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் முனியாண்டி பேசினார்.
அவரையடுத்து சிறப்புரையாற்றிய கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதி ராவ், மலேசிய இந்து சங்கத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். போட்டி போட்டு கோபுரங்களை எழுப்புவதைக் காட்டிலும் வழிபாட்டு முறையை செம்மைப் படுத்துவது-தான் பல இன மக்கள் வாழும் இந்த நாட்டில் நம்முடைய இந்து சமயம் மேலும் வளர துணைபுரியும். அந்த வகையில், இதுபோன்ற திருமுறை விழாக்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றார்.
தொடர்ந்து, மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ‘சங்கபூஷன்’ – ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் ஆற்றிய சிறப்புரையில்
திருமுறை நெஞ்சம் தீமைக்கு அஞ்சும் என்னும் ஆன்றோர் பெருமக்களின் நல்வாக்கிற்கு இணங்க திருமுறை சிந்தனையை தத்தம் உள்ளத்தில் சுமந்து இங்கேக் குழுமியிருக்கின்ற சிறியவர்கள் பெரியவர்கள் உள்ளிட்ட அனைவரையும் மலேசிய இந்து சங்க தேசியப் பேரவையின் சார்பில் வரவேற்பதாகவும் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
ஆதியும் அந்தமும் இல்லாத நம் இந்து சமய எல்லையில் திருமுறை என்னும் சீர்முறையை அன்றாட வாழ்வில் ஓதி உணர்ந்து வாழ்பவர்களின் உள்ளத்தில் ஆன்ம நேயமும் அன்பு நெறியும் எந்நேரமும் குடிகொண்டிருக்கும் என்றார்.
அத்தகைய திருமுறையை வளரும் இளந் தலைமுறையினர்தம் உள்ளத்தில் பதிய வைக்கவும் பெரியவர்தம் எண்ணத்தை சிவனடி நோக்கி பயணிக்க வைக்கவும் ஆண்டுதோறும் திருமுறை விழாக்களை இந்து சங்கம் நடத்தி வருவதாக தங்க கணேசன் சொன்னார்.
இந்த விழா சீரோடும் சிறப்போடும் நடைபெறுவதற்காக பாடுபட்ட மாநில திருமுறை விழாக் குழுவினரையும் அவர்களுக்கு உதவி தோள்கொடுத்த மாநிலப் பேரவை நிருவாகத்தினரையும் பாராட்டிய அவர்,
திருமுறையை ஓதுவோர்க்கு போட்டி நடத்துவது, அவர்களை உற்சாகப்-படுத்தி ஊக்குவிக்கத்தானேத் தவிர போட்டியில் வென்றவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே அடிப்படையில் எந்த பேதமும் இல்லை; நம் அன்றாட வாழ்வில் வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் சிவனருளை நாடி, திருமுறையை ஓதுவதுதான் முக்கியம் என்று கூறி தங்க கணேசன் தன்னுடைய உரையை நிறைவு செய்தார்.
பத்துமலை தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி சரசுவதி த/பெ செங்கல்வராயன், சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகள் மற்றும் பாலர் பள்ளிகளின் துணை அமைப்பாளர் மணிசேகரன், சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மன்றத் தலைவர் பாண்டியன், இந்து சங்க பத்துமலை வட்டாரப் பேரவைத் தலைவர் கோ.கோபால் உட்பட கல்வியாளர்களும் சமய சார்பாளர்களும் கலந்துகொண்ட இந்த விழாவின் சிறப்பு அங்கமாக போட்டியாளர்களுக்கு சிறப்பு செய்த நிகழ்வும் இடம்பெற்றது.