‘ஆசைகள்’ அதிகமாகிப் போய்விட்டனவா, மாவை சேனாதிராஜாவிற்கு?………
Share
கதிரோட்டம் 02-12-2022 வெள்ளிக்கிழமை
இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கியவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்ற போது எம்மில் அறுபது வயதைக் கடந்தவர்களில் அதிகமானவர்கள் “தமிழ்க் கட்சிகள் தான்” என்று உடனேயே பதிலைத் தந்து விடுவார்கள். அந்தளவிற்கு கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்ற அரசியல் பதவிகளையும் அமைச்சர் பதவிகளையும் பெற்று தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கு தூண்களாக விளங்கியும் தங்கள் குடும்பங்களின் பொருளாதார மற்றும் உயர் கல்வி சார்ந்த விடயங்களை கவனித்ததும் தாங்கள் மட்டும் வளர்ச்சியின் குளிர்ச்சியை அனுபவித்தது தான் தமிழ்க் கட்சிகளும் அதன் தலைவர்களாகவும் தொண்டர்களாகவும் விளங்கிய பலரது ‘அரசியல்’ பங்களிப்பாகும்.
ஆனால் தற்போதைய நெருக்கடியாக காலப்பகுதியில் அரசியல் உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் என்ற விடயங்களைத் தாண்டி, ‘அரிசியும் அதற்கு தேவையான உணவுப் பொருட்களும் தான் அவசரத் தேவை என்ற நிலைக்கு இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
அதற்கு மேலாக. நாட்டு மக்கள் இன. மத மொழிகள் என்ற பேதமற்று படுகுழிகளுக்குள் பொருளாதார ரீதியாக தள்ளப்பட்டுள்ளார்கள்.
வடக்கு தமிழர்களை எடுத்துக்கொண்டால் போரில் நேரடியாகப் பங்கெடுத்த இலட்சக் கணக்கான குடும்பங்களின் நிலை மோசமானதாக உள்ளது. அன்றாடம் காய்ச்சிகள் என்ற நிலைக்கு இன்னும் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டும். அங்கங்களை இழந்தும் பெற்றாரை இழந்தும் . இவ்வாறாக எமது மக்களின் வாழ்வியல் முறைகள் வலுவிழந்து போயுள்ளன.
இவ்வாறான நிலையில் “தமிழரசுக் கட்சிக்குப் புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார். அதன்பின்னர் தமிழரசுக் கட்சியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய பங்காளிக் கட்சியினரும் இணைந்து கூட்டமைப்பின் புதிய தலைவரைத் தெரிவு செய்வார்கள்’ என்ற செய்தியை அறிவிக்கும் அவசியம் மாவை சேனாதிராஜாவிற்கு ஏன் ஏற்பட்டது என்பது தான் இன்றைய சாதாரண தமிழ் மகள் ஒருவரின் கேள்வியாக எழுந்துள்ளது.
மாவை சேனாதிராஜாவின் இந்த கருத்து தொடர்பாக கொழும்பு பத்திரிகையாளர் ஒருவர் கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு எழுதிய குறிப்பு ஒன்றில் “மாவை சேனாதிராஜா தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராக வருவதற்கு தான் ஆசைப்படுகின்றார். அவரது நோக்கங்கள் இரண்டு ஒன்று . தான் வட மாகாண சபையின் முதல்வராக வரவேண்டும். அதற்கான முயற்சியின் முதல்வடிவம் தான் . முதலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராக பதவியேற்க வேண்டும் என்ற அறிவிப்பைச் செய்தது’ என்று தெரிவித்துள்ளார்.
மாவை சேனாதிராஜா அவர்களுக்கு தற்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வருவதிலும் பார்க்க வடக்கு மாகாண சபையின் முதல்வராக வருவதே அதிக விருப்புடன் எதிர்பார்க்கும் விடயமாகும். தன் அரசியல் பயணத்தின் இறுதிக் காலத்தில் அதிகாரமும் தமிழ் மக்களின் ஆசீர்வாதமும் மிக்க ஒரு பதவி அல்ல ஒன்றுக்கு மேற்பட்ட உயர் பதவிகள் ‘மாவைக்கு’ தற்போது ஆசைப்பட்ட விடயங்களாக விளங்குகின்றன.
மேலும் எந்தப் பதவியில் எவர் வந்து அமர்ந்தாலும், அந்தப் பதவிகளால் தமிழ் மக்களின் அடிப்படையான பிரச்சனைகளாக விளங்கும் வறுமை. விரக்தி. சுதந்திரம் ஆகியவை கிட்டப் போவதில்லை என்பதே உண்மை.