LOADING

Type to search

மலேசிய அரசியல்

புதிய அமைச்சரவை: ‘அன்வாரும் அப்படித்தான்’ பிகேஆர் இந்திய தலைவர்களும் தொண்டர்களும் குமுறல்

Share

நக்கீரன்

கோலாலம்பூர், டிச.03:

நாட்டின் 10-ஆவது பிரதமராக அடையாளம் காணப்பட்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தன்னுடைய தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றுமை அரசாங்கத்தில் தன்னுடையை ஆணையையும் அன்புக் கட்டளையையும் ஏற்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிகேஆர் கட்சியில் செயல்பட்ட ஒரேயொரு தலைவருக்குக்கூட அமைச்சர் பதவி வழங்கவில்லை.

தனக்கு வற்றாத ஆதரவை வழங்கிவரும் இந்திய சமுதாயத்திற்கு-குறிப்பாக தமிழர்களுக்கு இந்த நேரத்தில்கூட உரிய அங்கீகாரம் அளிக்காமல், வேறு எப்போது அன்வார் அளிக்கப்போகிறார் என்னும் ஆதங்கம் பிகேஆரில் மட்டும் அல்ல; ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்திலும் எதிரொலிக்கிறது.

பிகேஆர் சார்பில் ஓர் இந்தியருக்கு அமைச்சர் வாய்ப்பு அளிக்கப்பட்டால், பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த பத்தாம் பசலி-விட்டில்பூச்சி வாக்காளர்கள், டிசம்பர் 07-இடைத்தேர்தலின்போது பக்காத்தான்-பாரிசான் கூட்டு வேட்பாளர் சோஃபீ ரஸாக்கிற்கு வாக்களிக்காமல் போய்விடுவார்களா என்ன?

மொத்தத்தில், ‘பத்தோடு பதினொன்று; அத்தோடு இதுவொன்று’ என்று தமிழ்ச் சமுதாயத்தில் நிலவும் சொலவடையைப் போல, மற்ற தலைவர்கள் எப்படியோ, அப்படித்தான் தானும் என்பதை அன்வார் நிரூபித்திருக்கிறார்.

கடந்த கால் நூற்றாண்டாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை மக்கள் நீதிக் கட்சி-பிகேஆரின் தலைவராக மட்டுமல்ல; இந்த நாட்டின் தலைவராகவும் சமுதாய வழிகாட்டியாகவும் கருதி பல்லாயிரக் கணக்கான இந்தியத் தொண்டர்களும் தலைவர்களும் தங்களின் ‘உடல்-பொருள்-ஆவி’ உள்ளிட்ட அத்தனையையும் ஒரு பொருட்டாகக் கருதாமல் அவரின் பின்னால் அணிவகுத்து வருகின்றனர்.

அன்வார் சிறையில் இருந்தாலும் சரி; நாடாளுமன்றத்திற்கு சென்றாலும் சரி; சமுக வீதியில் நடைபயின்றாலும் சரி, அனைத்தையும் சமமாகக் கருதும் தமிழர்கள், தேனீக்களும் வண்டுகளும் தேன் மலரை மொய்ப்பதைப் போல அவரை எப்போதும் சூழ்ந்து நிற்கின்றனர்.

1966-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’ என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற “நான் ஆணையிட்டால்” என்று தொடங்கும் பாடலைப் பாடியவர் டி.எம்.சௌந்தரராஜன்; இசை அமைத்தவர் எம்.எஸ்.விசுவநாதன்; இயற்றியவரோ வாலி.

ஆனால், அந்த திரை ஓவியத்தைக் காணும் ரசிகர்கள், அந்தப் பாடல் என்னவோ எம்ஜிஆரே இயற்றி, அவரை இசை அமைத்து அவரேப் பாடியதைப் போல அதை ‘எம்ஜிஆர் பாடல்’ என்றேக் குறிப்பிட்டனர்.

அந்தப் பாடலை தமிழ் ரசிகர்களைப் போலவே அன்வாரும் விரும்பினார். காரணம் அவரும் ஓர் எம்ஜிஆர் ரசிகர். அதேவேளை, பிகேஆர் பொதுக் கூட்ட மேடைகளில் அந்தப் பாடலுக்கு அன்வார் அபிநயம் செய்யும் பொழுதெல்லாம், அன்வாரையும் இன்னோர் எம்ஜிஆர் எனக் கருதி பிகேஆர் இந்தியத் தொண்டர்களும் தலைவர்களும் புரிந்த ஆர்ப்பரிப்பிற்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அளவில்லை.

2020-இல் அன்வார் பிரதமர் ஆக முடியாமல் மடைமாற்றம் செய்த துன் மகாதீரையும் அவர்வகுத்தத் திட்டத்தின்படி அணிதாவி ஆட்சிக் கலைப்பிற்கு அச்சாரமிட்ட டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, டத்தோஸ்ரீ ஹிஷாமுடின், தான்ஸ்ரீ முகைதீன் உள்ளிட்டோரையும் பிகேஆர் தமிழர்கள் மனதிற்குள் சபித்தனர்.

15-ஆவது பொதுத் தேர்தலில்கூட, தேர்தல் நடைபெற்ற அன்று ஏறக்குறைய இரவு 11:00 வரை அன்வார் எப்படியும் பிரதமர் ஆகிவிடுவார் என்று உற்சாக துல்லலில் இருந்த இந்தியர்கள், அதன் பின்னர் 15-ஆவது பொதுத் தேர்தல் மூலம் நாட்டில் அமைந்திருப்பது தொங்கு நாடாளுமன்றம் என்பதையும் எந்தக் கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதையும் அறிந்து, தங்கல் வீட்டு திருமணம் நின்றதைப் போன்ற மனநிலக்கு ஆளாகினர்.

தேர்தல் வரை, பெரிக்காத்தான் கூட்டணியையும் தேசிய முன்னணியையும் சம தொலைவில் வைத்த பிகேஆர் இந்தியத் தலைவர்களும் தொண்டர்களும், தேர்தலுக்குப் பின் தேசிய முன்னணியின் ஆதரவைப் பெற்றாவது அன்வார் பிரதமர் ஆகிவிட வேண்டும் என்று மனப்பால் குடித்தனர்.

எந்த எண்ணம் வீண்போகவில்லை; சமயத்தையும் இனத்தையும் முன்னிறுத்தி அடிப்படைவாத அரசியல் புரியும் பாஸ் கட்சி இணைந்த பெரிக்காத்தான் கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாதென்ற பதைபதைப்பில் நெளிந்த மலேசியத் தமிழர்களின் நெஞ்சம் குளிர்கின்றமாதிரி, மலாய் ஆட்சியாளர் மன்றமும் மலேசிய அரசியலில் இன-மத அடிப்படைவாதம் இத்துடன் போதும் என்ற கருத்தை முன்வைத்தனர். நாட்டின் அடுத்த பிரதமராக அன்வார் பொறுப்பேற்க இசைவும் தெரிவித்தனர்.

இத்தனை தடைகளைத் தாண்டி, பிரதமர் பொறுப்பில் அமர்ந்த அன்வார் இப்ராகிம், காலமெல்லாம் தனக்கு படைக்களனைப் போன்று திகழ்ந்துவரும் இந்திய சமுதாயத்தை மதிக்கும் விதமாகவும் அரவணைக்கும் வகையிலும் ஒரு தமிழருக்கு அமைச்சர் வாய்ப்பு அளிக்காமல், பிகேஆர் இந்தியர்களை அடியோடு தட்டிவிட்டிருப்பது, காலத்தால நீக்கப்படாத களங்கம்.

அன்வாரின் ஆணைக்கும் அன்புக் கட்டளைக்கும் ஏற்ப செயல்படுவதுடன் தன்னுடைய சுண்டுவிரல் அசைவிற்கு ஏற்ப, எள் என்றால் எண்ணய்யாக வந்து நிற்கும் இந்தியத் தொண்டர்களை அன்வார் இந்த அளவிற்கு உதாசீனம் செய்திருக்கக்கூடாது.

பக்கத்தான் கூட்டணி சார்பில் ஜனநாயக செயல் கட்சி(ஜசெக)யைச் சேர்ந்த சிவக்குமார் அமைச்சராகி இருக்கலாம். எத்தனை சிவக்குமார் அமைச்சரவையில் இடம்பெற்றாலும் தன்னுடைய தலைமையில் இயங்கும் பிகேஆரைச் சேர்ந்த இந்தியர் ஒருவருக்கு வாய்ப்பளிக்காமல் தவிர்க்கும் மனம் அன்வாருக்கு எப்படி வந்தது?

அடுத்து அறிவிக்கப்பட இருக்கும் துணை அமைச்சர் வரிசையில் எத்தனை இந்தியருக்கு வாய்ப்பளித்தாலும், துணையமைச்சர், துணையமைச்சர்தானே? கேபினட் த்குதிக்கு இணையாகுமா?

மொத்தத்தத்தில் அன்வாரும் அப்படித்தான்!.