LOADING

Type to search

கனடா அரசியல்

மாறிவரும் நூல் வெளியீட்டு முறையால் கைக்கு வரும் முன்பே கசப்பாகும் நூல்கள்

Share

அண்மைய நூல் வெளியீடு ஒன்றின் அனுபவ அடிப்படையில் இக்கட்டுரையை எழுத விளைகின்றேன். மிகுந்த பனிப்பொழிவால் கடும் குளிரும் வழுக்கலும் அதிகமாய் இருந்த நாள் அது. அழைப்பு வந்ததே என்றதற்காக மட்டும் அல்ல புது நூலைப் பெறும் ஆர்வமது உந்தியதால் கனமான அந்த நூலுக்கு கனகாசு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வேலைப்பளுவின் மத்தியிலும் வகுப்புக்களை இடைநிறுத்தி சொன்ன நேரம் போய்ச்சேர்ந்தோம். அங்கு போனபோது இருந்த ஆர்வம் வரும்போது இருக்கவில்லை.

இன்றைய காலத்தில் பல இடங்களிலும் நூல்கள் பல வெளியிடப்படுகின்றன. இதற்காக கடினமாக உழைக்கும் எழுத்தாளர்களைப் பாராட்டியே தீரவேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம் இல்லை. பலகாலம் செலவழித்து பல்வேறு பாடுபட்டு தமது கற்பனைவளத்தாலும், திறத்தாலும், விடாமுயற்சியாலும், பல்வகையான தேடல்களாலும் ஒரு நூலை உருவாக்குகின்றார்கள். அவர்கள் அந்நூலை வெளியிடுவதற்காக வெளியீட்டு விழா ஒன்றை வைப்பதும் வழக்கமானது.

அந்த வழக்கத்தைக் கைக்கொள்ளும்போது நூல்வெளியீட்டு விழா என்ற நிகழ்வை எல்லோரும் சரியான முறையில் நடத்தி முடிப்பதில்லை என்பது மனவருத்தத்திற்கு உரியது. அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களது வெளியீடுகள் வேறு. அதில் குறை கூற வரவில்லை. நூல்வெளியீட்டில் அனுபவம் குறைந்த சிலர் எடுக்கும் நூல்வெளியீட்டு நிகழ்வுகள் நூற் பிரியர்கள், நல்ல வாசகர்கள் மற்றும் விழாவில் கலந்துகொள்ளும் ஏனையவர்களுக்கும் அதிர்ப்தியை ஏற்படுத்துகின்றது.

இந்த நிலை மாறவேண்டும் என்பதற்காக நூல்வெளியீட்டில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு சில விடையங்களை எனது அறிவிற்கு எட்டிய வகையில் கூறிக்கொள்ள விளைகின்றேன்.

ஒரு நூல் வெளியீட்டில் வழக்கமாக இறைவணக்கம் அதற்குப் பின்பே மங்கள விளக்கு ஏற்றல் வரவேற்புரை, ஆசியுரை, சிறப்புரை, நூல் அறிமுக உரை, நூல் வெளியீடு , முதற்பிரதி மற்றும்சிறப்புப் பிரதி வழங்கல், நூல் ஆய்வுரை, ஏற்புரை , பிரதமஅதிதியின் உரை இறுதியில் நன்றியுரை என்பன நடைபெறுவது வழக்கம். நூல் வெளியீட்டுக்கு வருபவர்களுக்கு இவ்வாறான உரைகள் நடைபெறும் என்று தெரியும் அல்லது தெரிந்திருக்க வேண்டும். எத்தனையோபேர் எத்தனையோ வேலைப்பளுக்களின் மத்தியில்த்தான் இவ்வாறான நிகழ்வுகளுக்கு வருகின்றார்கள். மாலை நேர நிகழ்வு எனில் அடுத்தநாள் பாடசாலைகள் இருக்கும் எனில் இப்படியான நீண்ட உரைகளின் மத்தியில் இடையிடையே ஆட்டங்களும் பாட்டுக்களும் இடம் பெறுகின்றன. இத்தகைய ஆட்டங்கள் மற்றும் பாடல்கள் ஒரு நூல் வெளியீட்டிற்கு உகந்ததாகத் தெரியவில்லை. அந்த நூலோடு தொடர்புடையன ஆயினும் அதை தெரியப்படுத்த வேறுமுறைகளைக் கையாள்வதே சாலவும் சிறந்தது.

மேலும் நிகழ்சியினைப் பொறுப்பேற்று நடத்திச் செல்பவர்கள் அடுத்துவரும் நிகழ்ச்சியினைக் கூறுவதற்கிடையில் தமது வித்துவத்தை வெளிக்காட்டும் வகையில் அந்த நிகழ்வுக்குச் சம்பந்தமில்லாத தேவையற்ற விடயங்களைக் கூறி வந்திருப்போரின் பொறுமையைச் சோதிக்கின்றார்கள். இத்தகைய விடயங்கள் ஒரு நூல் வெளியீட்டில் தவிர்க்கப்பட்டவேண்டியவை.

அடுத்ததாக நூலைப்பற்றி அறிமுகம் செய்பவர்கள் நூலின் அட்டைப்பட விளக்கம் தொடங்கி நூலின் அமைப்பு அல்லது வடிவம் வரையும் ஓரளவேனும் கூறிக்கொள்ளல் வேண்டும். நூல் கூறும் விடயங்களை ( உள்ளடக்கத்தை) நூலுக்கு பிறர் கொடுத்த உரைகளைப்பற்றி ஒரு சில வார்த்தைகளேனும் கூறி அத்தோடு நூலசிரியரைப் பற்றி ஒரு சில விடயங்களைக் குறிப்பிடுவது வழக்கம் அதுவே முறையும் எனக் கருதுகிறேன். நூலின் அறிமுக உரையே நூலை வாங்கவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்த வேண்டும்.

அதுவும் வாசகனது அல்லது நல்ல நூல்களை நாடிவருபவர்களது எதிர்பார்ப்பாகும்.

அடுத்து நூலை ஆய்வுசெய்பவர் நூலை முழுமையாகப் படித்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரால்த்தான் நூலைத் திறம்பட ஆய்வு செய்ய முடியும். அவர் நூலில் உள்ளடக்கப் பட்டுள்ள விடயங்கள் அதாவது இலக்கிய நூல் எனில் கூறப்பட்ட விடயம், கூறப்பட்ட பாங்கு , அதன் நடை , சுவை, அது வெளிப்டுத்தும் உணர்வு இலக்கியத்தின் ஊடாக வெளிக்கொணரப்படும் விடயம் என்பன போன்ற விடயங்களோடு அட்டைப் படத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர் தனது ஆய்வுரையை மேற்கொள்ள வேண்டும் இப்பொழுதெல்லாம் அட்டைப்படத்தைப் பற்றிப் பேசுவதை சில நூல் வெளியீடுகளில் காணமுடிவதில்லை என்பதுவும் மனவருத்தத்திற்கு உரியது.

வெளியிடப்படும் நூல் இலக்கணம் சார்ந்ததாக இருப்பின் அந்த நூலிற்கு உரிய ஆய்வுரை செய்பவர் மிகுந்த இலக்கண அறிவு உடையவராக இருக்கவேண்டும் அப்படிப்பட்ட ஒருவரால் மட்டுமே அந்த நூலைக் கையில் எடுத்து ஆய்வுரை வழங்க முடியும். உதாரணமாக பிறப்பியல், புணரியல் தெரியாதவர் அல்லது அறியாதவர் இலக்கண நூலை ஆய்ந்து கூற முடியுமா?

“உந்தி முதலா முந்து வளி தோன்றி
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும்………..” எனும் தொல்காப்பியச் சூத்திரம் தெரியாத ஒருவர் பிறப்பியலைப் பற்றிய அந்நூல் சொல்லும் கருத்தை ஆழமாக ஆராய்ந்து தனது சிறந்த ஆய்வுரையை வழங்க முடியுமா? புரியவில்லை.

அவ்வாறாக சிறந்த ஆய்வுரைக்கு உரிய ஒருவர் இல்லாத இடத்தில் அதை ஆய்வுரை என்று கூறாது விடுதல் மிகவும் பொருத்தமானது.

அடுத்து ஏற்புரை. இப்பொழுதெல்லாம் சரியான ஏற்புரை நிகழ்வதற்கு வாய்ப்புக்கிடைப்பது பெரிதும் குறைவு. நூல்வெளியீட்டுப் படப்பிடிப்புக்கள் அவ்வுரைக்கு இடம் கொடுப்பதில்லை அல்லது வேறு ஆட்டமோ பாட்டோ இடையில் வந்து குறுக்கிடுகின்றன. அவ்வாறே ஏற்புரை நிகழ்ந்தாலும் இடையில் வரும் நிகழ்வுகளால் வாசகர்கள் சலிப்படைந்து வெளியேறுகின்றனர்.

நூல் வெளியீட்டில் ஆய்வுரை நிகழ்த்தப்பட்டால் ஏற்புரை வழங்கப்படல் வேண்டும். ஆய்வு செய்தவரின் உரைக்கு உட்பட்டு அவர் கூறிய கருத்துக்களுக்கான பதிலாக அல்லது ஏற்பாக அந்த ஏற்புரை அமைவதுண்டு. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க அடுத்து நூல்வெளியீடு.

நூல் வெளியீடானது அறிமுக உரையை அடுத்து நடைபெறுவது. அந்நிகழ்வில் பிரதமஅதிதி முதற் பிரதியைப் பெற்றுக்கொள்ள அதைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்களை அழைப்பதுண்டு. இதில் மிக முக்கியமான விடயம் முக்கிய பிரமுகர்கள் நூல் சம்பந்தமான அறிவு அல்லது நூலின் பெறுமதி தெரிந்தவராக இருந்தால் கொடுக்கப்படும் நூலிக்கும் மரியாதை அதை எழுதிய எழுத்தாளருக்கும் மரியாதை. அதனால் நூல் வெளியீட்டை நிகழ்த்துபவர்கள் அல்லது நூலாசிரியர்கள் முக்கிய பிரமுகர்களைத் தெரிவு செய்யும் பொழுது ஓரளவு இலக்கிய ஆளுமைகள் , இலக்கிய அறிவு அல்லது ஈடுபாடு உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும். அதுவே வரவேற்கத்தக்கதும் கூட. அல்லது அழைப்புக் கொடுத்தவர்களையேனும் கூப்பிடலாம். அதைவிடுத்து அந்த முக்கிய பிரமுகர்கள் என்ற பிரிவுக்குள் வர்த்தகப் பிரமுகர்களே அடக்கப்படுவதைக் காணும்போது பார்வையாளராக இருக்கும் மக்களுக்குமட்டுமல்ல (பெரியவர்கள்) இளைய தலைமுறையினர் கூட “ இது புத்தக வெளியீடா அன்றி வர்ததகமா?அன்றி விளம்பரமா? “என்றெல்லாம் கதைக்கும் அளவிற்கு சில இடங்களில் நூல் வெளியீடுகள் அமைந்துவிடுகின்றன. அன்றும் சிலர் அவ்வாறே பேசினார்கள்.

இப்படியான செயற்பாடுகள் எப்படியான தரமான நூலாக இருந்தாலும் அந்நூல் மக்களின் கைகளுக்குப் போய்ச்சேரும் முன்பே எண்ணத்தால் அதன் மதிப்பீடு குறைகின்றது. இதனை வெளியீட்டாளர்களோ அன்றி நூலின் உரிமையாளர்களோ நிச்சயமாகக் கருத்தில்கொள்வது மிகவும் அவசியமாகின்றது.

உமா மோகன் (M.A) CANADA