LOADING

Type to search

அரசியல்

வேளாளர் மகளிர் கல்லூரியில் … தேர்வு செய்யப்பட்ட 100 மாணவிகளுக்கு ‘விடுதலை வேள்வியில் தமிழகம் ’ நூல் வழங்கும் நிகழ்வு

Share

இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை முன்னிட்டு ஈரோடு -வேளாளர் மகளிர் கல்லூரி மாணவிகள் 100 பேருக்கு த. ஸ்டாலின் குணசேகரன் தொகுத்தும் பதிப்பித்தும் வெளியிட்ட ‘விடுதலை வேள்வியில் தமிழகம் எனும் இரண்டு பாகங்களும் 1200 பக்கங்களும் அடங்கிய நூல் வழங்கப்பட்டது.

இந்நூல் வழங்கும் நிகழ்வை அர்த்தமுள்ளதாகவும், மாணவிகளுக்குப் பயனுள்ளதாகவும், அந்நூலை மாணவிகள் ஆர்வமுடன் வாசிப்பதற்கு அடித்தளமிடுவதாகவும் திட்டமிட்டு நடத்தியது கல்லூரி நிர்வாகம்.

6000 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் இக்கலை – அறிவியல் கல்லூரியில் 100 மாணவிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டின் சிறப்புப் பரிசாக இந்நூலை தமது பொறுப்பில் வழங்க கல்லூரி நிர்வாகம் தீர்மானித்தது.

இந்திய விடுதலைப் போராட்டம் பற்றியான தலைப்புகளில் பேச்சு, கட்டுரை, வினாடி – வினா போட்டிகளை அறிவித்தார் கல்லூரி முதல்வர். விருப்பமும் ஆர்வமும் உள்ள மாணவிகள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர்.

* விடுதலை வேள்வியில் தமிழகம் ‘ போன்ற ஆழமான நூல்களைப் படிக்கும் ஆர்வமும், ஈடுபாடும், சிறிதளவேனும் பயிற்சியுமுள்ள மாணவிகளைத் தேர்வு செய்யும் பொருட்டே பல்வகைப் போட்டிகள் நடத்தப்பட்டன.

அவ்வாறு அரிதின் முயன்று தேர்வு செய்யப்பட்ட 100 மாணவிகளுக்கு சிறப்புப் பரிசாக ‘விடுதலை வேள்வியில் தமிழகம் ‘ என்ற நூலின் இரண்டு பாகங்களும் வழங்கப்பட்டன.

இந்நூல் வழங்குவதற்கென்றே சிறப்பு நிகழ்வொன்றை 27.12.2022 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கல்லூரி அரங்கில் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்வுக்கு வேளாளர் மகளிர் கல்லூரியின் தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர் தலைமையேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் செ.கு. ஜெயந்தி வரவேற்புரையாற்றினார். முதுகலை மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறைத் தலைவர் முனைவர் பொ. கார்த்திகா மாணவர்கள் தேர்வு குறித்து விளக்கவுரையாற்றினார். கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் கே.எம். பாம்பணன் முன்னிலை வகித்தார். ‘விடுதலை வேள்வியில் தமிழகம் நூலின் தொகுப்பாசிரியரும் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவருமான த. ஸ்டாலின் குணசேகரன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் நூலின் சிறப்பம்சங்கள் யாவற்றையும் விரிவாகவும் அழுத்தமாகவும் எடுத்துரைத்தார். வரலாற்றுத் துறைப் பேராசிரியர் என். கவிதா நன்றி கூறினார்

மாணவிகள் ஒவ்வொருவராக மேடைக்கு வந்து முதல்வர் கரங்களால் நூலினைப் பெற்றுக் கொண்டனர்.

பரிசு பெற்ற அனைத்து மாணவிகளும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட நூல்பிரதிகளுடன் ஒரு குழுப் படமும் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வு விடுதலைப் போராட்டம் பற்றிய எழுச்சியையும் இந்நூலினை ஆர்வமுடன் வாசிக்கும் எண்ணத்தையும் ஏற்படுத்தியது.