மூன்று மாதங்களில் அந்நிய தொழிலாளர் பிரச்சினைக்குத் தீர்வு
Share
மலேசியா உணவக உரிமையாளர் சங்க ஆண்டுக் கூட்டத்தில் அமைச்சர் சிவக்குமார்
-நக்கீரன்
பெட்டாலிங்ஜெயா,டிச.28:
நாட்டில் புதிதாக அமைந்துள்ள மத்திய கூட்டரசாங்கத்தை வழிநடத்தும் பிரதமர், இந்திய சமுதாயம் எதிர்கொள்ளும் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு காணும்படி கேட்டுக் கொண்டிருப்பதால், மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்க(பிரிமாஸ்)த்தினர் நீண்ட காலமாக எதிர்கொண்டிருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சினைக்கு ஏறக்குறைய மூன்று மாதங்களில் தீர்வு காணப்படும் என்று மனித வளத் துறை அமைச்சர் வி.சிவக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம்(பிரிமாஸ்), நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று மனித வள அமைச்சிடம் பிரிமாஸ் தலைவர் கோரிக்கை வைத்தார்.
மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் 22-ஆவது ஆண்டுக் கூட்டம் நேற்று டிசம்பர் 28 புதன்கிழமை, பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் நடைபெற்றபோது, அதில் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்டு உரையாற்றிய பேராக் சட்டமன்ற முன்னாள் சபாநாயகருமான சிவக்குமார், உணவகத் தொழில்துறை எதிர்கொண்டுள்ள தொடர் பிரச்சினை குறித்து தனக்கு நன்றாகத் தெரியும்; காலை, பகல், மாலை, இரவு என எல்லா வேளைகளிலும் உணவுக் கடையைத்தான் நாடுகிறோம். தவிர, உணவகத் தொழிலில் நேரடியாக ஈடுபட்ட அனுபவமும் அண்மையில் தனக்கு ஏற்பட்டது என்றார்.
அதனால், தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சினை காரணமாக, பிரிமாஸ் உறுப்பினர்கள் எதிர் கொண்டிருக்கும் பிரச்சினை தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் அதற்காக, பிரிமாஸ் தலைவர் ஜி.கோவிந்தசாமி என்ற சுரேஷ் இப்படி கோரிக்கையை மழையைப் பொழிவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் சிவக்குமார் பிரிமாஸ் உறுப்பினர்களின் கைத்தட்டலுக்கு இடையில் குறிப்பிட்டார்.
இந்திய சமுதாயம், குறிப்பாக வர்த்தகர்கள் எதிர்கொண்டுள்ள அனைத்துவித சிக்கலையும் உடனுக்குடன் தீர்க்கும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டுள்ளதால், தொழில் துறையினருக்குத் தேவையான அந்நிய தொழிலாளர்களை எளிய முறையில் தருவிப்பது குறித்து உள்துறை அமைச்சருடன் ஏற்கெனவே ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 5-ஆம் நாள் மீண்டும் உள்துறை அமைச்சகத்துடன் இதன் தொடர்பில் பேச்சு நடத்த ஏற்பாடு ஆகியுள்ளது. அதனால், ஏறக்குறைய அடுத்த 3 மாதங்களில் உணவக உரிமையாளர்களின் தொழிலாளர் பற்றாக்குறை சிக்கலுக்குத் தீர்வு காணப்படும் என்றும் சிவக்குமார் உறுதி அளித்தார்.
முன்னதாக பிரிமாஸ் தலைவர் ஜெ. கோவிந்தசாமி என்ற சுரேஷ், தலைமையுரை ஆற்றியபோது, தற்பொழுது உணவகங்களில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் தங்களின் தாய் நாட்டிற்குத் திரும்பும்போது, இயல்பாகவே மாற்றுத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வதற்கான வாய்ப்பு உள்துறையால் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் இதன் தொடர்பில் அமைச்சர் உரிய பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.
அத்துடன், பத்து ஆண்டுகள்வரை உணவகங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு பரந்த அனுபவமும் உணவகத் தொழிலின் தன்மையும் நன்கு தெரிந்திருக்கும் என்பதால், வயதுக் கட்டுப்பாட்டைக் காரணம் காட்டி அவர்களை திருப்பி அனுப்பாமல், அவர்கள் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவுக் கடைகளில் மேலும் பணிபுரிய வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை அவைத்தார்.
பிரிமாஸ் கௌரவத் தலைவர் டத்தோ ரெனா இராமலிங்கம், பிரிமாஸ் தலைவர் ஜெ.கோவிந்தசாமி என்ற சுரேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், மலேசிய இந்திய வர்த்தக தொழிற்சங்க சம்மேளனம்-மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ ந.கோபாலகி ருஷ்ணன், கிள்ளான் முன்னாள் எம்பி சார்லஸ் சந்தியாகு, மைக்கி உறுப்பினர்களான சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கத் தலைவர் சுதந்திரன், ஜவுளிக்கடை உரிமையாளர் சங்கத்தின் டத்தின் மகேசுவரி உள்ளிட்ட தலைவர்களும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டில் நடைபெறாமல் இருந்த பிரிமாஸ் ஆண்டுக் கூட்டம், இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்றது.