LOADING

Type to search

கதிரோட்டடம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை மறைக்க தேர்தல் “பூச்சாண்டி’ காட்டும் அரசும் அரசியல்வாதிகளும்….

Share

கதிரோட்டம் 30 -12-2022

இலங்கையில் கடந்த வருடம் தோன்றிய பொருளாதார நெருக்கடியின் உச்சக் கட்டம் இன்னும் தணிந்து போகாத நிலையில் அங்கு அரசியல்வாதிகளும் உயர் அரச அதிகாரிகளும் தங்கள் சலுகைகளையும் ஊதியங்களையும் சன்மானங்களையும் பெற்று எவ்வித இடையூறும் அற்ற வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களில் பெரும்பான்மைச் சிங்களவர்கள் மட்டுமல்ல தமிழ் அரசியல்வாதிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இந்த அரசின் வாய்ப்புக்கள் வசதிகள் அனைத்தையும் அனுபவிக்கின்றனர்.

எனவே இவற்றை தொடர்ச்சியாக அனுபவிக்கும் வகையில் திட்டங்கள் காய் நகர்த்தப்படுகின்றன என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. மக்களை திசை திருப்பு வகையிலும் பொருளாதார நெருக்கடிகளின் பாரத்தை தேர்தல் செலவுகளில் காட்டுவதற்கும் அனைத்து தரப்பினரும் தந்திரமாக செயற்பட ஆரம்பித்துள்ளார்கள். அவர்களுக்கு அடித்தட்டு மக்களின் துன்பங்கள் மற்றும் வறுமை போன்றவற்றை பற்றிய அக்கறையே இல்லாமல் மீண்டும் தாங்களும் தங்கள் சகாக்களும் அரசியல் பரப்பில் உள்ள அனைத்து தர பதவிகளையும் பெற்று பிரச்சனைகள் எதுவுமின்றி வாழுவதற்காய் அத்திவாரம் இட்டுள்ளதாகத் தெரிகின்றது.

தற்போது தேர்தல் பரபரப்பொன்று உருவாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதாவது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் புதிய ஆண்டில் நடைபெறுமென்று ஊகங்கள் உலவுகின்றன. அத்தேர்தலை எதிர்கொள்ளும் விதத்தில் அரசியல் கட்சிகள் தம்மைத் தயார்படுத்தத் தொடங்கியிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இந்த பரபரப்பில் சாதாரண மக்களும் ஏழைகளும் தங்கள் பிரச்சனைகளை மறந்து தாங்கள் “தலைவர்கள்” என எண்ணுகின்றவர்களுக்காக வாக்கு வேட்டை ஆடப் புறப்படுவார்கள். அவ்வாறு தேர்தல் பிரச்சார வேலைகள் செய்யும் சாதாரண மக்களுக்கு ‘ பிச்சை’ போடுவது போன்று சன்மானங்கள் வழங்கப்படும் என அறியப்படுகின்றுத.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படப் போவதாக உத்தியோகபூர்வமாக எதுவித அறிவித்தலும் வெளியிடப்படவில்லை. ஆனால் ஊகங்களின் அடிப்படையிலேயே இது தொடர்பான செய்திகள் பொதுவெளியில் உலாவருகின்றன. இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் அத்தேர்தல் நடத்தப்படக் கூடுமென்று ஊகங்கள் மாத்திரமே உலவுகின்றன.

நாட்டில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அத்தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படவில்லை. அத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ஒருசாரார் கோருகின்றனர். ஆனால் மற்றொரு தரப்பினரோ நாட்டின் இன்றைய நிலையில் எந்தவொரு தேர்தலும் நடத்தப்படுவது உசிதமல்ல என்று வலியுறுத்துகின்றனர்.

இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலவியதால் மக்கள் அனைவருமே பெரும் துன்பத்தை அனுபவித்தனர். அவ்வாறான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு தற்போதுதான் படிப்படியாக மீண்டெழுந்து வர முயலுகிறது. ஆனால் தவறான ஒரு ஜனாதிபதி பதவியில் அமர்ந்திருப்பதனால் காலங்கள் கடந்தும் நாட்டின் கஸ்டங்கள் நீங்குவதாகத் தெரியவில்லை என தொழிற்சங்கத் தலைவர்களும் சமூகத் தொண்டர்களும் குரல் எழுப்பி வருகின்றனர்.

மேலும் இலங்கையின் திறைசேரி தற்போது போதிய நிதியின்றிக் காணப்படுகின்றது. அத்தியாவசிய சேவைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கே சிரமப்படுகின்ற நிலைமை உள்ளது. இவ்வாறான பொருளாதார நெருக்கடி நிலவுகின்ற போது, தேர்தலொன்றை நடத்துவதென்பது வீணான நிதிவிரயத்தை ஏற்படுத்துமென்பதே நாட்டின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டோரின் வலியுறுத்தலாக உள்ளது.

அரசுக்கு எதிரான தரப்பினரே உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு கோருகின்றனர் என்று சொல்லப்பட்டாலும் ஆட்சியில் உள்ளவர்களும் எதிர்க்கட்சிகளில் உள்ளவர்களும் ஒரே விதமான மனநிலை கொண்டவர்களாக உள்ளார்கள் என்பதே பொது மக்களின் எண்ணமாக உள்ளதை அறிந்து கொள்வதற்கு ஊடகங்களுக்கு கூட ஆர்வம் இருப்பதாகக் தெரியவில்லை. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுகின்ற இவ்வேளையில், இச்சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்தி மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளலாமென எதிரணியினர் எண்ணுவதாகத் ரணில் தரப்பினர் கூறி வந்தாலும் அதுவும் ஒரு ஏமாற்று வேலை என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள். அதுதவிர, தேர்தலுக்காக பெருமளவு நிதியைச் செலவிடுவதால் நாட்டில் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையுமென்றும், அதன் மூலம் அரசு மீது மக்களுக்கு வெறுப்பை தேடித்தரும் என்பதும் எதிர்பார்த்த ஒன்றாகும். ஆனால் தகுதியற்ற ஜனாதிபதியாகத் விளங்கும் ரணில் அவர்கள் தனது சுயவிமர்சனம் செய்து கொள்ள ஆயத்தமாக இல்லை என்பதும் வெளிப்படையாக தெரிகின்றது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஆயத்தங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளதைக் காண முடிகின்றது. வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியலைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தவிர்க்க முடியாததொரு அரசியல் கூட்டணியாகும். தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளென்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைக் குறிப்பிட்டாலும் அவர்களுக்கும் மக்கள் ஆதரவு குறைந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. எனினும் அரசாங்கத்தை காப்பாற்றும் வகையில் தகுதியற்ற ஜனாதிபதியான ரணிலையும் காப்பாற்றும் தந்திரத்தைத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யும் என்பதும் தமிழ் மக்களுக்கு நன்கு தெரிந்த உண்மையாகும்
இது இவ்வாறிருக்க. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருந்த அரசியல் கட்சிகள் மீண்டும் ஒன்றுசேரப் போவதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவருகின்றன.

அத்தகவல்கள் எத்தனை தூரம் உண்மையென்பது இதுவரை தெரியவரவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருந்த அரசியல் கட்சிகள் மீண்டும் ஓரணியில் ஒன்றுசேர்வது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்குமென்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கும் ரணிலிற்கும் ‘முண்டு’கொடுக்கும் வேலையைத் தான் தொடர்ந்து செய்து வருகின்றது என்பதால் இந்த ஓற்றுமை சாத்தியமில்லை என்றே தமிழ் மக்கள் முடிவுகள் எடுக்கத் தொடங்கிவிட்டார்கள் என யாழ்ப்பாணத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.