LOADING

Type to search

இலங்கை அரசியல்

சூடு பிடிக்கும் உள்ளூராட்சித் தேர்தல்: வடக்கில் இம்முறை அதிக கட்சிகள் போட்டி

Share

எமது யாழ்.செய்தியாளர்

இலங்கையின் அடிப்படை அதிகார அலகான உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது உறுதியாக நடைபெறுமா என்று தெரியாத நிலையிலும் கட்சிகள் தமது ஏற்பாடுகளை தீவிரமாக இறங்கியுள்ளன.

தமிழர் தாயக பகுதிகளான வடக்கு-கிழக்கில் இம்முறை தமிழ்க் கட்சிகள் பிளவுபட்டு நிற்கின்றன. இது தமிழ் மக்களிடையே பெரும் கவலையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் இதுவரை இல்லாத வகையில் கட்சிகள் களமிறங்குகின்றன.

அவ்வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 23 கட்சிகள் உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளைவிட 2023ஆம் ஆண்டு இடம் பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இம்முறை அதிக கட்சிகள் போட்டியிடவுள்ளன.

இதற்கமைய யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் தலா 23 கட்சிகளும், கிளிநொச்சியில் 15 கட்சிகளும், வவுனியாவில் 29 கட்சிகளும் போட்டியிடும் அதேநேரம் மன்னாரில் 25 கட்சிகளும் போட்டியிடவுள்ளதாக தமது முகவர்களை நியமித்துள்ளனர்.

2023 உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் மாவட்டங்களில் தமது அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் இறுதித் தினம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவ்வாறு முகவர்களை நியமித்த கட்சிகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே இந்த எண்ணிக்கை கணக்கிடப்படுகின்றது.

இதேநேரம் இந்த கட்சிகளின் எண்ணிக்கைக்கு அப்பால் சுயேச்சை குழுக்களும் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கு பகுதிகளில் பிரதான தமிழ் அரசியல் அமைப்பாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாரிய பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை தமிழரசுக் கட்சியைத் தவிர அண்மையில் வரை அதில் அங்கமாக இருந்த டெலோ மற்றும் புளொட் கட்சியினரும் அதிலிருந்து வெளியேறி, அதே கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய அணியை உருவாக்கியுள்ளன.

டெலோ மற்றும் புளொட்டுடன் முன்னர் கூட்டமைப்பிலிருந்து விலகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ பி ஆர் எஃப் எப், சிவாஜிலிங்கம் மற்றும் சிறீகாந்தாவின் தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவையே புதிய கூட்டணியை அமைத்துள்ளன.

எனினும் அவர்களின் விளம்பரத்தைக் காணும் போது, ஆங்கிலத்தில் TNA என்பதற்கு முன்னர் சிறியதாக D என்ற எழுத்தைச் சேர்த்துள்ளனர். அதாவது `ஜனநாயக` தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தோற்றத்தை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் அதை தமிழில் ஏன் அவ்வகையில் `ஜ` என்ற வார்த்தையை முன்னால் போடவில்லை என்பதற்கான விளக்கம் ஏதும் இதுவரை இல்லை.

இதனிடையே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சியையும் இந்த கூட்டணியில் சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அந்த அழைப்பு மறுக்கப்பட்டு விட்டது.

அதேவேளை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சியும் இவர்களுடன் இணைவார் என்று முன்னர் கூறப்பட்டது. எனினும், தனக்கு கட்சியில் செயலாளர் நாயகம் பதவியை அளிக்கவோ அல்லது தமது கட்சியின் மான்` சின்னத்திலோ போட்டியிட இதர தலைவர்கள் உடன்படவில்லை, எனவே தனியாகப் போட்டியிடுகிறோம் என்று அறிவித்துள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியில் தலைவர்கள் சட்டப் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கான முன்னால் `D` என்ற எழுத்தை பெரியதாகத் தெரியும்படி சேர்க்காமல் சிறியதாகப் போட்டுள்ளது அவர்களின் நேர்மையற்ற அணுகுமுறையை காட்டுகிறது என்று கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அவர்களை சிலர் `டூப்ளிகேட்` டி என் ஏ என்று இப்போதே விமர்சிக்க ஆரம்பித்துள்ளதாக யாழ்ப்பாண மக்கள் கூறுகின்றனர்.