LOADING

Type to search

இலங்கை அரசியல்

‘ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டம்`- வேலன் சுவாமிகள் பிணையில் விடுதலை

Share

தைப் பொங்கல் விழாவில் பங்குபெற யாழ்ப்பாணம் வந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான போராட்டத்தில் பங்குபெற்று கருப்புக் கொடி காட்டியதாக பொலிசார் குற்றஞ்சாட்டிய வழக்கில் வேலன் சுவாமிகளிற்கு யாழ் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சிவகுரு ஆதீணகுரு தவத்திரு வேலன் சுவாமிகள் புதன்கிழமை (18) கைது செய்யப்பட்டு அன்று இரவுவேளை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

அவர் சார்பில் சட்டத்தரணிகளான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி சிவஸ்கந்தசிறி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.

அப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்தபோது பொதுப் பாதுகாப்பிற்கு குந்தகமாகச் செயல்பட்டமை, பொலிசாரின் பணிக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் மீது பொலிசார் வழக்குத் தொடுத்தனர்.  ஜனாதிபதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றார் என்றும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 

நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ”அரசியல் அமைப்பின் 14ஆம் சரத்தின் கீழ் ஓர் எதிரணி ஜனநாயக வழியில் போராட இடமுண்டு. அதேநேரம் குறிப்பிட்ட தினம் ஜனாதிபதியின் வருகையின் சமயம் அமைதியான வழியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வேலன் சுவாமி எந்தவொரு வன்முறையிலும் ஈடுபடவில்லை” என்று வாதிட்டார். மேலும் பலமுறை தன்னை தொடர்ந்து பயணிக்க அனுமதிக்குமாறே அவர் கோரினார் என்றும் நீதிமன்றில் கூறப்பட்டது. அவை காணொளிகளாகவும் வெளிவந்துள்ளதோடு அங்கே பொலிசார் ஏற்படுத்திய தடையுன்போது சுவாமிகள் உடல் அளவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்பவை உட்பட சட்டத்தரணிகள் மன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். 

இவற்றினை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்றம் புதன்கிழமை இரவு 9 மணியளவில் தவத்திரு வேலன் சுவாமியை ஒர் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததோடு வழக்கினை ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சமூகச் செயற்பாட்டாளரான வேலன் சுவாமிகள் கடந்த ஆண்டு தமிழ் மக்களிற்கு நியாயம் கோரி இடம்பெற்ற பி 2 பி போராட்டத்தில் முன்னிலை வகித்திருந்தார். தொடர்ச்சியாக தமிழ் மக்களின் நலம் சார்ந்த விடயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். அதன் காரணமாக பொலிசார் மற்றும் பாதுகாப்பு படையினரின் சீற்றத்திற்கு ஆளாகியுள்ளார் என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறனர்.