LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ் மாநகர சபை முதல்வர் தேர்வில் தொடரும் உள்குத்து

Share

எமது யாழ் செய்தியாளர் 

இலங்கையில் உள்ளூராட்சி சபைகளிற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவை உறுதியாக நடைபெறுமா என்று தெரியாத நிலையில், இருக்கும் சபைகளிலும் பலவகைகளில் நெருக்கடிகள் தொடருகின்றன.

விரைவாக உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுமாயின் யாழ் மாநகர சபைகளிற்கு புதிய உறுப்பினர்களும், அவர்களில் ஒருவர மேயராக-மாநகர முதல்வராகத் தேர்வாவார். ஆனால், அதுவரை யாழ் மாநகர சபையின் அமர்வுகளை முன்னின்று நடத்த முதல்வர் இல்லாததால் நகரின் தூய்மைப் பணி உட்படப் பல அத்தியாவசியப் பணிகள் முடங்க்கூடாது என  யாழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் புதிய மாநகர முதல்வர்  வியாழன்(19) அன்று தேர்வாவார் என்று எதிர்பாக்கப்பட்ட போதும் அதுவும் பொய்த்துப் போனது.

வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணம் மாநகர சபை கூடிய நிலையில், அவையில் போதிய உறுப்பினர்கள் (கோரம்) இல்லாத காரணத்தால்  முதல்வர் தேர்வு இடை நிறுத்தப்படுவதாக உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்ததையடுத்து சபை ஒத்தி வைக்கப்பட்டது. 

தமிழர் தாயக பகுதியில் மிக முக்கிய உள்ளூராட்சி அமைப்பான யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாநகர சபையின் முதல்வரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் வியாழனன்று உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.  அதன் போது அவையில் கோரம் இல்லாததால் மாநகர முதல்வர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆணையாளர் அறிவித்தார்.  

யாழ் மாநகர சபையில் ஏற்பட்ட முதல்வர் வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் 19 ஆம் திகதியன்று முதல்வர் தேர்வு நடைபெறும் என்று உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்ததையடுத்து மாநகர சபையின் 45 உறுப்பினர்களில் 24 உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருந்தபோது சபையில் 24 உறுப்பினர்கள் சமூகமளித்துள்ளதனால் கோரம் உள்ளது என்று கூறி முதல்வர் தேர்வு இடம்பெறுவதாக ஆணையாளர் தெரிவித்தார். 

இதற்கமைய இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் இ.ஆனல்ட்டின் பெயரை உறுப்பினர் பி.இ.கிறேசியன் முன்மொழிய உறுப்பினர் என்.எம்.பாலச்சந்திரன் வழிமொழிந்தபோது வேறு தேர்வு ஏதும் இருக்கவில்லை.  இதன்போது சபையில் இருந்த நான்கு உறுப்பினர்கள் இவரது தேர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறுவதாக்கூறி சபையில் இருந்து வெளியேறினர். 

இதன் காரணமாக சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆகக் குறைய அவையை நடத்துவதற்குத் தேவையான 50% எண்ணிக்கையான 23 ஐ விட எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து சபையில் கோரம் போதாமை காரணமாக வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்படுவதாக ஆணையாளர் தெரிவித்தபோது கோரம் இருப்பதாக அறிவிக்கப்பட்டே தேர்வு ஆரம்பமாகியது முதல்வர் வேட்பாளரை எதிர்த்தே உறுப்பினர்கள் வெளிநடப்பு எனவும்  தேர்வை ஒத்திவைக்க வேண்டிய தேவை இல்லை என உறுப்பினர் இ.ஆனல்ட் கோரினார். 

இந்த நிலையில் இன்றைய முதல்வர் தேர்வு ஒத்தி வைக்கப்படுகின்றது அடுத்த திகதி உரிய முறையில் அறிவிக்கப்படும் என உள்ளூராட்சி ஆணையாளர் சபையில் அறிவித்தார்.

சபையின் வியாழன் அமர்விற்கு  த.தே.கூட்டமைப்பு – 15 உறுப்பினர்கள், த.தே.ம.முன்னணியின் மூன்று உறுப்பினர்கள், ஈ.பீ.டி.பி. கட்சியின் நால்வர் மற்றும் சுதந்திரக் கட்சி, கூட்டணி ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர். 

யாழ் மாநகர சபையின் முதல்வராக இருந்த விஸ்வலிங்கம் மணிவண்ணன் சமர்ப்பித்த வரவு-செலவு திட்டம் சபையில் தோல்வியடைந்த சூழலில் அவர் பதவி விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

உள்ளூராட்சி சபைக்கான தேர்தல்கள் தொடர்பில் கட்சிகளும், வேட்பாளர்களும் அதிக கவனம் செலுத்தி வருவதால், மாநகர முதல்வர் தேர்வில் யாரும் உண்மையான அக்கறை காட்டவில்லை என்று கூறப்படுகிறது. சபையின் காலம் இன்னும் மிகச் சொற்ப காலமே உள்ளதால் முதல்வராக தேர்வாகி சபையில் தோல்விகளைச் சந்திப்பதைவிட புதிய தேர்தல்கள் மூலம் சபைக்குத் தேர்வாகி அதன் பின்னர் முதல்வர் பதவியில் கவனம் செலுத்துவது நலம் என்கிற கருத்தும் நிலவுகிறது என்பதையும் அவதானிக்க முடிகிறது. 

எனினும் அடுத்த 14 நாள்களிற்குள் மீண்டும் ஒரு முறை முதல்வர் தேர்விற்கு உள்ளூராட்சி ஆணையாளர் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சட்ட ஏற்பாடாகும். 

இதேநேரம் முதல்வர் தேர்வின்போது சபையில் இருந்து வெளிநடப்புச் செய்த நான்கு உறுப்பினர்களில் மூவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினையும் ஒருவர் ஈ.பி.டி.பியினையும் சேர்ந்தவர்கள் என்பதோடு அதன் பிறகு சபையில் பிரசன்னமானவர்களில் 15 பேர் த.தே.கூட்டமைப்பும், மூவர் ஈ.பி.டி.பி, கூட்டணி மற்றும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.