வடக்கு மாகாண சபையை பௌத்த மடமாக்க முயற்சிகள்
Share
எமது யாழ் செய்தியாளர்
இலங்கை தனது 75 ஆவது சுதந்திர தினத்தை அடுத்த மாதம் கொண்டாடவுள்ள நிலையில், அந்த சந்தர்ப்பத்தப் பயன்படுத்தி பௌத்தத்தை வலிந்து திணிக்க அரசு முனைவதாக வடக்கு மாகாண மக்கள் கவலைப்படுகின்றனர்.
நாட்டின் பவளவிழா சுதந்திர தினக் கொண்டாட்டம் எதிர்வரும் பிப்ரவரி 4ஆம் திகதி நாடு முழுவதும் இடம்பெறவுள்ள நிலையில் வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் தனித்து பௌத்த மத வழிபாடுகள் மட்டும் இரவு முழுவதும் இடம்பெற பிரதம செயலாளர் ஏற்பாடு செய்துள்ளார்.
இதன் காரணமாக வடக்கு மாகாண சபை காரியாலயம் பௌத்த மயமாக்கப்படவுள்ளதாக பல்துறையைச் சார்ந்தவர்களால் கடும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
சுதந்திர தின நிகழ்வுகளை ஒட்டி நாடு முழுவதும் இடம்பெறும் சர்வ மத வழிபாடுகள் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எனினும் வடக்கு மாகாண சபையால் சகல மத வழிபாடு என்னும் பெயரில் இந்த ஏற்பாடுகளை செய்திருந்தாலும் ஏனைய மதங்களிற்கான வழிபாடுகள் ஆலயங்களில் இடம்பெறவுள்ள நிலையில் பௌத்த வழிபாடு மாகாண சபையில் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், கிறிஸ்தவ மத வழிபாடு மன்னாரிலும், சைவ வழிபாடு வவுனியாவிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இதர மதங்களின் வழிபாடுகள் ஆலயங்களில் நடைபெறும் நிலையில், பௌத்த வழிபாடு மட்டும் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. அதற்கமைய பிப்ரவரி மாதம் 2ஆம் திகதி இரவிரவாக மாகாண சபை அலுவலகத்தில் பிரித் ஓதி பௌத்த வழிபாட்டு ஏற்பாடுகள் இடம்பெறுவதோடு காலையில் பௌத்த துறவிகளிற்கு தானம் வழங்கப்படவுள்ளது.
இந்த பிரித் ஓதும் நிகழ்விற்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பௌத்த துறவிகளும் அழைக்கப்படுவதோடு அநுராதபுரத்தில் இருந்தும் ஒரு தொகுதி பௌத்த பிக்குமார்களும் அழைத்து வரப்படவுள்ளனர்.
இந்த நிகழ்வுகளிற்காக பிப்ரவரி 2ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் அலுவலகத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்கள் பௌத்த கொடிகளால் அலங்கரிக்கப்படவுள்ளது என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.