LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையை வாட்டி வதைக்கும் வரிகளும் வானளாவிய விலைவாசி உயர்வும்

Share

விநாயகர் விமர்சனம் – கொழும்பிலிருந்து

கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி

காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே
மா நிறைவு இல்லதும் பல் நாட்கு ஆகும்
நூறு செறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே
வாய் புகுவதனிலும் கால் பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே
கோடியாத்து நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போல
தானும் உண்ணான் உலகமும் கெடுமே

-பிசிராந்தையார்

நன்கு முதிர்ந்து காய்ந்த நெல்லை அறுத்து கவளம் கவளமாகத் திரட்டி யானைக்கு உண்ணக் கொடுத்தால் ஒரு மா (14400 சதுரஅடி) அளவை விடச் சிறிய வயலில் விளைந்த நெல்லைக் கொண்டு பல நாட்கள் யானைக்கு உணவளிக்கலாம். (ஆனால்) நூறு வயல்பரப்பளவில் விளைந்தநெல்; என்றாலும் யானை தனியாக வயலிலே இறங்கித் தின்றால் அதன் வாய்க்குள்ளே நுழைவதைவிட காலிலே உழக்குப்பட்டு அழியும் நெல்லின் அளவே அதிகமாக இருக்கும். அதேபோல பகுத்தறிவுள்ள அரசன் முறையான வரிக்கொள்கைளை வகுத்து அதன்படி நின்றொழுகி மக்களிடம் வரி திரட்டி நல்லாட்சி நடத்தினால் அந்த நாடு கோடி கோடியாகப் பொருளீட்டி செழிப்புற வளரும் அரசனும் மகிழ்வுடன் வாழலாம். மாறாக அரசனானவன் வரைமுறை அறியாத கல்போன்ற முட்டாள்கள் கூட்டத்தோடு சேர்ந்து முறை தவறி வரி வசூலித்து மக்களின் வருவாய்களைக் கொள்ளையடித்தால் யானை தனியே புகுந்த வயல் நிலம் போல உலகமும் கெடும் அரசனும் கெடுவான். ஒரு நாட்டின் வரிக் கொள்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை வெளிப்படுத்தி இலங்கையின் இன்றைய கையறு நிலைமையை கண்ணாடி போலப் பிரதிபலிக்கிறது இந்த புறநானுற்றுப் பாடல்.

வேலை செய்யும் வீரர் கோட்டாபய ராஜபக்ஸ பெரிய கதிரையிலிருந்து துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று பின்கதவால் நாட்டை விட்டு ஓடிய பின்னர் ராஜபக்ஸக்களின் ஆபத்பாந்தவனாக அரசியலமைப்பில் காணப்பட்ட ஓட்டையின் ஊடாக வன் மேன் பார்டியாகி பெரிய கதிரையில் தன்னைத் தாபித்துக் கொண்ட விக்கிரமானவர் பொதுமக்கள் படும் துயரங்கள் பற்றிய எந்தவித உணர்ச்சியுமின்றி இந்த ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் வரிகளைக் வரைமுறையின்றி அதிகரித்திருக்கிறார். அண்மையில் உலகின் பலபாகங்களிலிருக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் அபிவிருத்தி நிபுணர்களுமாக 182 பேர் கூட்டாக இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் பற்றி வெளியிட்ட ஓர் அறிக்கையில் அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கை(ள) பற்றி சாடியிருப்பதுடன் அதன் மூலம் எதிர்ப்பார்க்கப்படும் வரிவருவாயைத் திரட்டுவதும் அதன் ஊடாக வரவு செலவுத்திட்டத்தில் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக எதிர்க்கணியமாக இருந்த ஆரம்ப நிலுவையை (primary balance) ஒரே வருடத்தில் நேர்க்கணியமாக மாற்றுவதும் நடைமுறைச் சாத்தியமல்ல எனக் கூறுகின்றனர். யானையை வயலுக்குள் ஒட்டிவிட்ட நிலைமைதான் நாட்டிற்கும் ஆட்சியாளர்களுக்கும் ஏற்படும் என்பது நமக்கு நன்கு புரிகிறது.

அத்துடன் நாட்டின் நிதிநிலைமையை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றவர்கள் அரசியல்வாதிகளின் செல்வாக்குப் பெற்ற தனியார்துறை கடன் உரிமையாளர்களே என்ற கருத்தையும் இவ்வாராட்சியாளர்கள் முன்வைக்கின்றனர். இடர் அபாயம் நிறைந்த (high risk)  பிணைமுறிகளில் முதலீடு செய்ததன் மூலம் இத்தகைய முதலீட்டாளர்கள் கொள்ளை இலாபம் ஈட்டியுள்ளதாகவும் இப்போது இலங்கை மீளச் செலுத்த வேண்டியுள்ள கடன்களை பதிவழிப்பு (write off) செய்தாலே ஒழிய இலங்கைக்கு மீட்சி கிடைக்கப்போவதில்லை எனவும் இதுவரை கொள்ளை இலாபம் பார்த்தவர்கள் இப்போது எங்சியுள்ள கடன்களைப் பதிவழிப்புச் செய்யவேண்டும் என்று கேட்டிருக்கின்றனர். அது மட்டுமல்லாது ஒரு நாடு கடுமையான நிதிநெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நேரத்தில் உரிய நேரத்தில் உரிய வகையில் உதவி செய்யாமல் காலத்தை இழுத்தடித்துவரும் சர்வதேச நிதி நிறுவனங்களின் நடத்தையும் மேற்படி புலமையாளர்களின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

தற்போது கசியும் உள்ளகத் தகவல்களின் படி வரிகளை இந்தளவுக்கு உயர்ந்த வீதங்களில் அதிகரிக்க வேண்டும் என்று IMF நிறுவனமே நிபந்தனை விதித்ததாகவும் மானியங்களை அகற்றவும் பெற்றோலியம் எரிவாயு மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருள்கள் சேவைகளின் விலைகளை சந்தை விலைக்கு அதிகரிக்க வேண்டும் என்றும் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மாத்திரமின்றி இலாபத்தில் இயங்குபவற்றையும் தனியார் மயப்படுத்துமாறும் கோரப்பட்டதாகத் தெரிகிறது. ஏற்கெனவே அதிகரிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணங்களை மேலும் ஒரு மிகப்பெரிய தொகையினால் அதிகரிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் மட்டுமே தொடர்ச்சியாக மின்விநியோகத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியும் என்றும் இல்லாவிட்டால் நீண்ட நேர மின் துண்டிற்பிற்கு தயாராகுமாறும் எரிசக்தி அமைச்சர் கூறகிறார். அதே வேளை நட்டத்தில் இயங்குவதாகக் கூறும் மின்சாரசபை கடந்த வருடம் தமது ஊழியர்களுக்கு தலா 100000 ருபா வரையில் போனஸ் வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது போனஸ் என்பது நிறுவனங்கள் இலாபம் உழைக்கும் போது அதில் ஒரு பகுதியை ஊழியர்களுக்கு ஊக்குவிப்பாக வழங்குவதாகும். ஆனால் தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் போனஸ் வழங்குவது பொது முயற்சியாண்மைக் குழு எனப்படும் கோப் (committee on public enterprises- COPE) குழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல தற்போதைய நெருக்கடி காலகட்டத்திலும் அரச நிறுவனங்களில் கட்டடங்களையும் சுற்றுப்புறங்களையும் அலங்கரித்தல் போன்ற அத்தியாவசியமற்ற செலவுகள் மேற்கொள்ளப்பட்டு அரசநிதிகள் வீணடிக்கப்படுகின்றமை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம் பொருளாதாரம் உயிருக்கு ஊசலாடும் இந்த வேளையிலும் கூட இலஞ்சமும் ஊழலும் குறைந்நதாகத் தெரியவில்லை. ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைப் புறச்சூழலைப் பயன்படுத்தி தமது பைகளை நிரப்பிக் கொள்ளும் பணிகளிpருந்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சற்றேனும் தளர்ந்து விடவில்லை. அதேவேளை உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாக பொது வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்குச் சிகிச்சைகளை மேற்கொள்வதில் பாரிய நெருக்கடிகள் எதிர்நோக்கப்படுகின்றன. குறிப்பாக புற்று நோய் வைத்திய சாலைகளில் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் கிடைக்காமையால் நோயாளர்கள் இறக்கும் ஆபத்து அதிகரித்துள்ளதாக தொடர்புடைய வைத்தியர்கள் கூறுகிறார்கள். இத்தகைய மருந்துகள் சந்தையில் பல ஆயிரங்கள் தொடக்கம் இலட்சங்கள் வரையில் உள்ளதால் நோயாளிகள பலர் அவற்றைக் கொள்வனவு செய்யும் அளவுக்கு பொருளாதார வசதி படைத்தவர்கள் அல்ல. சிலர் பொது வெளியில் நிதிதிரட்டி அவற்றைக் கொள்வனவு செய்ய முயற்சித்தாலும் அவற்றைத் தொடர்ச்சியாக வழங்கவேண்டியுள்ளதால் நோயாளிகளால் அவற்றைத் தொடர முடியாது போகும். சாதாரண புரசிட்டமோல் வில்லைகள் ஏனைய மருந்துப் பொருள்களின் விலைகளும் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன. வுரிகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மருத்துவ சேவைக்கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மனிதன் நோய்வாய்ப்படுவதை ஒரு நுகர்வாகக் கருதி அதற்கு வரி விதிக்கப்படுகிறது. இலங்கையில் நோய்வாய்ப்படுவதென்பது ஒரு பாவப்பட்ட செயலாக மாறிவிட்டது.

மறுபுறம் பாடசாலைக் கல்வியில் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. புhடசாலை நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டாலும் அப்பியாசக் கொப்பிகள் மற்றும் ஏனைய கற்றல் உபகரணங்களின் விலைகள் வானளாவ உயர்ந்து விட்டன. மக்கள் ஒரு புறம் விலைவாசி உயர்வினால் தமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவே பகிரதப் பிரயத்தனம் செய்து வரும் நிலையில் கல்வி சுகாதாரம் போன்ற வாழ்வாதாரத் தேவைகளைப் நிறைவேற்றமுடியாமல் மனதளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அரசாங்கம் பொதுமக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் பற்றிய உணர்திறன் கிஞ்சித்துமின்றி ஏற்கெனவே அதிகரித்துள்ள மின் கட்டணத்தை இன்னும் எத்தனை ரூபாவினால் அதிகரிப்பது என்று பார்க்கிறது.

ஏதோ பொதுமக்கள் சேர்ந்து செய்த தவறினால் தான் அரச நிறுவனங்கள் நட்டமடைந்நது போலவும் பொதுமக்கள் கொள்ளையடித்ததால் தால் தான் நாடு வங்குரோத்து அடைந்தது போலவும் தொடர்ந்தும் பொதுமக்களிடம் இருந்து கறந்து எல்லாவற்றையும் சரிசெய்ய முனைவது தெரிகிறது. நாட்டைக் கொள்ளை அடித்தவர்கள் நடுவீட்டில் ஜம்மென்று உட்கார்ந்து அனுபவிக்கிறார்கள். இலட்சக்கணக்கில் மின் கட்டணங்களைச் செலுத்தாமல் நிலுவையில் விட்டுள்ள அரசியல் வாதிகளிடமிருந்தும் பணமுதலைகளிடமிருந்து அவற்றை அறவிடுவது பற்றியோ அல்லது உற்பத்தி மற்றும் வினியோகச் செலவுகளையும் குறைத்து நிறுவன மறுசீரமைப்பில் ஈடுபடுவது குறித்தோ அக்கறை காட்டப்படவில்லை.

அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் எத்தகைய ஊழல்களைச் செய்து நாட்டைக்கொள்ளையடித்தாலும் அவற்றைக் கண்டுபிடிப்பது பற்றியோ கோடிக்கணக்கில் ஏற்பட்ட இழப்புகள் பற்றியோ கொள்ளையடித்தோரிடமிருந்து அவற்றை மீட்பது பற்றியோ குற்றவாளிகளைக் கண்டு பிடித்துத் தண்டணை வழங்குவது பற்றியோ எவ்வித கரிசனையும் காட்டப்படவில்லை என்பதைவிட. அதற்கான திசையில் நகர்வதற்கான ஒரு சிறிய சமிக்ஞை கூட இதுவரையில் இல்லை. இந்தியாவில் இருப்பது போல விஜிலன்ஸ என அழைக்கப்படும் (central vigilance commission) மத்திய அமலாக்கல் துறை அதிகாரிகள் முக்கியமான அரசியல்வாதிகள் பிரபலங்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் போன்றோறைப் பின்தொடர்வது போன்றதொரு வலுவான கட்டமைப்பு இலங்கையில் இல்லை.

இலங்கையிலும் இலஞ்ச ஆணைக்குழு இயங்கினாலும் அதனால் மிகப்பெரிய அளவில் சாதனைகள் செய்ததாக வரலாறில்லை. எந்த ஒரு முக்கிய ஊழல் அரசியல்வாதியும் அதனூடாக உள்ளே போனதாகவும் தெரியவில்லை. எந்த ஒரு அரசியல்வாதியையம் இன்னொரு அரசியல் வாதி அவர் எக்கட்சியில் இருந்தாலும் இது விடயத்தில் காட்டிக் கொடுத்ததும் கிடையாது. அவ்வாறு யாராவது ஒரு சில அரசியல் வாதிகள் இதுபற்றி பொது வெளியிலோ கதைத்தாலும் நிரூபித்துக் காட்டச் சொல்லு என்று எதிர்ப்பறிக்கை விடுவதுடன் எல்லாம் முடிந்துவிடும். அதிகாரிகள் என்ன சோடை போனவர்களா? பியோன் தொடக்கம் அமைச்சுகளின் உயர் அதிகாரிகள் வரையிலான பலர் இதில் கைதேர்ந்தவர்கள். ஆனால் நேர்மையான அதிகாரிகள் பதவி உயர்வுகள் இன்றி தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றப்பட்டு பழிவாங்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. அரச நிர்வாகத்துறை சீர்திருத்தப்பட்டு நேர்மையாக சிலகாலம் இயங்கினாலே இலங்கை எதிர்நோக்கும் சமகாலப் பிரச்சினைகள் பலவற்றில் இருந்து மீண்டெழலாம். மாறாக நாடு படுபாதாளத்தில் விழுந்துள்ள இப்போதைய நிலையிலும் அதே மந்தநிலையில் இயங்கும் அமைச்சுகளும் அரசு நிறுவனங்களும் பொருளாதார மீட்சியைக் கால தாமதப்படுத்துவதையே காணமுடிகிறது

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தென்கொரியாவின் இடர்க்கால நிவாரண அமைப்பின் தலைவர் ஒரு இராஜாங்க அமைச்சரையும் அதிகாரிகளையும் உயிரோடு தோலுரித்த வீடியோக்காட்சி பார்க்க அற்புதமாக இருந்தது. நாட்டின் இடர்ச்சூழலில் அரச இயந்திரம் உயிர்ப்படன் இயங்கிக்கொண்டிருக்கும் நிதிமற்றும் தொழில் நுட்ப உதவிகளையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் அமைச்சருடனான கூட்டத்திற்கு தயாராக இருந்த அவர் கூட்டத்திற்கு அரைமணிநேரம் தாமதமாக வந்த ராஜாங்க அமைச்சரையும் அதிகாரிகளையும் முகத்திற்கு நேரே நின்று என்னுடைய நாட்டில் இப்படி தாமதமாக வந்திருந்தால் உடனடியாகவே விசாரணை நடைபெற்று தண்டணை தரப்பட்டிருக்கும் பொறுப்பில்லாமல் வழங்கிய உறுதிமொழிகளை நிலைவேற்ற முடியாதவர்களிடம் நான் ஏன் பேசவேண்டும். பொய்யர்களிடமும் தாம் கொடுக்கல் வாங்கல் செய்ய விருப்புவதில்லை என்றும் முகத்தில் அடித்தால் போல் விளாசினார்.

இந்தமாதிரி மோசமாக நடத்தையை மாற்றிக் கொள்ள முடியாவிட்டால் சர்வதேச உறவுகளை கட்டியெழுப்பலாம் எனக் கனவுகாண வேண்டாம் எனவும் எச்சரித்தார். நல்லமாட்டுக்கு ஒரு சூடு ஆனால் விமர்சனம் செய்தவரைக் குறைசொல்வதிலும் சப்பைக்கட்டுக் கட்டித் தாமதத்pற்கு காரணங்கள் தேடுவதிலுமே இலங்கையின் அடுத்த சிலநாட்கள் கழிந்தன. இவர்கள் எங்கே திருந்தப் போகிறார்கள்.