LOADING

Type to search

மலேசிய அரசியல்

படைவீட்டு அரசு தொடந்திருந்தால் சைவ சமயம் இன்னும் செழித்திருக்கும்

Share

-தமிழ்மகன்

நக்கீரன்

கோலாலம்பூர், ஜன.26:

கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நடைபெற்ற படைவீட்டு அரசு, தொடர்ந்து நிலைபெற்றிருந்தால், சிவனியத்தை ஆதாரமாகக் கொண்ட சைவ சமயம் இன்னும் செழித்திருக்கும் என்று தமிழகத்தைச் சேர்ந்த பன்முக இலக்கியப் படைப்பாளர் தமிழ்மகன் தெரிவித்தார்.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்க ‘டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் 6-ஆவது பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டியில் 10ஆயிர டாலர் பணப் பரிசை வென்றவர், பா.வெங்கடேசன் என்னும் இயற்பெயரைக் கொண்ட தமிழ்மகன்.

உட்பகை, சகோதர சண்டை, பொறாமை, வெற்றுப் பெருமை உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி தங்களுக்குள் போரிட்டுக் கொண்ட தமிழ் மன்னர்களான சேர-சோழ-பாண்டிய மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த காலக்கட்டத்தில், டில்லியை மையமாகக் கொண்ட மொகலாயர் ஆட்சி, வடக்கிலிருந்து தென்பகுதிக்கும் பரவ ஆரம்பித்தது.

அதேவேளை, மராட்டியர்கள், பல்லவர்கள், விஜய நகரப் பேரரசினர் உள்ளிட்டவர்களின் அதிகார கரங்களும் தமிழகத்தை ஆக்கிரமித்தன.

இடையில், ஆற்காட்டுப் பகுதி உள்ளிட்ட வடதமிழகத்தில் திருவண்ணா-மலையை ஒட்டிய ஆரணி நகரை மையமாகக் கொண்ட படைவீட்டு அரசு சம்புவராய மன்னர்களால் உருவாக்கப்பட்டது. இந்த மன்னர்கள், சைவ சமயத்தை மிகவும் போற்றி வளர்த்தனர் என்றும் பிற சமயங்களான பௌத்த, சமண மதங்களுக்கும் மதிப்பளித்தனர்.

கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் உருவான இந்த அரசின்மீது புதுடில்லி சுல்தான்களின் படை போர்தொடுத்தது. டில்லி மொகலாய சாம்ராஜ்யத்தில் ஒரு கட்டத்தில் தலைமை இடைவெளி ஏற்பட்டது. அப்பொழுது அடிமை வம்சம் என்னும் கில்ஜி பரம்பரை உருவானது, ஏறக்குறைய இந்தக் கட்டத்தில்தான்; அலாவுதீன் கில்ஜியும் அவரின் படைத் தளபதி மாலிக் காபூரும் தென்னிந்தியாமீது கவனத்தைத் திருப்பியபோது பாதிப்பிற்கு ஆளானது படைவீட்டு அரசு; இந்த இருவரும் மடிந்தபின், மீண்டும் புதுடில்லி சுல்தானகத்தில் ஒரு தொய்வு நிலை உருவானது.

அதுவரை தென்னகத்தில் அடங்கி இருந்த பாமினி ஆட்சியாளர்களும் விஜயநகரப் பேரரசு ஆட்சியாளர்களும் மீண்டும் தலையெடுத்ததுடன், சுற்றியிருந்த சிற்றரசுகளின்மீது தாக்குதலும் மேற்கொண்டனர். குறிப்பாக, விஜயநகரப் பேரரசின் தெலுங்கு மன்னர்கள் படைவீட்டு அரசின்மீது மூர்க்கமாக தாக்குதல் தொடுத்தனர்.

பெரும் படைவலிமை கொண்ட டில்லி சுல்தான்களையும் விஜய நகர ஆட்சியாளர்களையும் எதிர்கொள்ள முடியாமல் சம்புவராய அரசர்கள் திணறி பின்வாங்கிய நேரத்தில், படைவீட்டு அரசைச் சுற்றிலும் இருந்த வானவ கோராயர்கள், பழவேட்டரையர்கள், மலையமான்கள், அதியமான்கள் உள்ளிட தமிழ் குறுநில மன்னர்களும் சிற்றரசர்களும் சம்புவராய அரசர்களுக்கு உதவிபுரிய வில்லை; மாறாக, காழ்ப்பும் வெறுப்பும் கொண்டு ஒதுங்கி நின்றனர்.

இத்தகைய காரணங்களால், படைவீட்டு அரசு வீழ நேரிட்டது.

இத்தகைய வரலாற்று சம்பவங்களைத் தொகுத்துதான் படைவீடு என்னும் பெயரில் வரலாற்று நாவலாக கடந்த 2020-இல் தமிழ்மகன் வெளியிட்டார். அந்தப் படைப்புதான் டான்ஸ்ரீ சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் 6-ஆவது பன்னாட்டு புத்தகப் பரிசையும் கேடயத்தையும் வென்றது.

இந்தப் படைவீடு நாவல் குறித்து கருத்து தெரிவித்த தமிழ்மகன், உலகாளும் நாயகனும் பரம்பொருளுமான சிவனையும் அன்னை உமையவள் பார்வதியையும் ‘அம்மையே-அப்பா’ என்று ஒருசேர போற்றும் சிவநெறிக் கொள்கையை, தங்களின் சமய நெறியாகக் கொண்டு சம்புவராயர்கள் வாழ்ந்தனர் என்று தெரிவித்தார்.

சம்புவராயர்களின் படைவீட்டரசு அந்நியர்களின் படையெடுப்பிற்கு ஆளாகாமல், இன்னும் நிலைத்திருந்தால் சைவ சமயம் இன்னும் பேரளவில் செழித்திருக்கும் என்றும் தமிழ்மகன் தெரிவித்தார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக, இதழியல் துறையில் பணியாற்றிவரும் இவர், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், குங்குமம், குமுதம், தின மணி உள்ளிட்ட பருவ-நாளிதழ்களில் பணியாற்றியவர். சிறந்த நாவலுக்காகவும் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்காகவும் தமிழ்நாட்டு அரசின் விருதுகளை இரண்டு முறை பெற்றுள்ள இவர், 15-க்கும் மேற்பட்ட நூல்களையும் அதிகமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

தமிழ் இலக்கிய உலகில் சிறந்த படைப்பாளியாகத் திகழும் இவரின் பெயர், மலேசிய தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரிய வரலாற்றிலும் இடம்பெற்றதன்வழி, பன்னாட்டுத் தமிழர்களின் கவனத்தையும் பெற்றுள்ளார்.