குஜராத் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் நியமனம்
Share
விமன்ஸ் ப்ரீமியர் லீக்கில் குஜராத் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து பிசிசிஐ இந்தாண்டு முதல் மகளிர் அணிகளுக்கான ப்ரீமியர் லீக்கை நடத்தவுள்ளது. ஐபிஎல் தொடரைப் போன்று மகளிர் அணிகளுக்கான டி20 போட்டித் தொடரை இந்த ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்துகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. விறுவிறுப்பான போட்டிகள், அனல் பறக்கும் ஆட்டம், பிபியை எகிறச் செய்யும் கடைசி ஓவர்கள் என ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. ஆண்டுதோறும் இந்த தொடர் திருவிழாவைப் போல் நடத்தப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரை பின்பற்றி வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, துபாய், வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகளில் ப்ரீமியர் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் மகளிர் அணிகளுக்கான பிரீமியர் லீக்கை இந்தாண்டு முதல் பிசிசிஐ நடத்துகிறது. 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டபோது கிடைத்த ஏலத்தொகையை விட தற்போது டபிள்யூ.பி.எல். அணிகளுக்கு அதிக தொகை கிடைத்துள்ளது. ஏலத்தின் மூலம் ரூ. 4669.99 கோடி கிடைத்திருக்கிறது. ந்த தொடரை ஒளிபரப்பும் உரிமையை ரிலையன்ஸின் வயாகாம் நிறுவனம் ரூ. 951 கோடிக்கு 5 ஆண்டுகளுக்கு பெற்றுள்ளது. டபிள்யூ பி.எல். தொடரில் தற்போது 5 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த அணிகளை மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, அதானி குரூப் மற்றும் கேப்ரி குளோபல் ஆகியவை வாங்கியுள்ளன.
இந்நிலையில் குஜராத் ஜெயன்ட்ஸ் டபிள்யூ.பி.எல். அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் மிதாலி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்திய அணிக்காக மிதாலி ராஜ் 89 டி20 போட்டிகளியில் விளையாடி 2,364 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 37.52 ரன்கள். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். டபிள்யூ.பி.எல். தொடரில் குஜராத் அணி ரூ. 1,289 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதானி குரூப் நிறுவனம் இந்த அணியின் உரிமையாளராகஉள்ளது.