இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்: வடக்கு-கிழக்கில் கட்சிகளின் பலமும் பலவீனமும்.
Share
(கனடா உதயனிற்காக யாழ் செய்தியாளரின் சிறப்பு கள ஆய்வு )
இலங்கையின் உள்ளூராட்சித் தேர்தல் இந்த ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி இடம்பெறும் என்ற வர்த்தமானி அறிவித்தல் வெளியானாலும் அது உறுதியாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
எனினும், உறுதி செய்யப்படாத இந்த தேர்தலிற்காக அனைத்து கட்சிகளும் தயாராகிவிட்டன. இதில் `நரி` தந்திரம் செய்து தேர்தலைத் தடுத்து விடுவோம் என எண்ணும் ஆளும் அரச தரப்புகூட சட்ட ஓட்டைகளால் நடத்தப்படவேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்கும் தயாராக இருப்போம் என்ற மன நிலையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தெற்கில் நிலைமை இவ்வாறு இருக்க வடக்கு-கிழக்கிலே தமிழர் பிரதேசம் மாறுபட்ட குழப்பத்துடன் காணப்பட்டாலும் தேர்தல் பணிகள் தெற்கை விடவும் சூடுபிடித்தே காணப்படுகிறது. இதில் எந்த மாவட்டமும் விதிவிலக்கல்ல எனத் துணிந்து கூற முடியும்.
இம்முறை தமிழர் தரப்பிலே, அரச ஆதரவுத் தமிழர் தரப்பு மற்றும் அரச எதிர்ப்புத் தமிழர் தரப்பு ஆகிய இருமுனைப் போட்டிகள் காணப்படுவதோடு சில சுயேச்சைக் குழுக்களும் காணப்படுகின்றன.
இதிலே முதலில் அரச தரப்பைப் பார்த்து விடுவோம். வடக்கு கிழக்கில் ஐ.தே.கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திரக் கட்சி, பெரமுன, ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய அரச ஆதரவு அல்லது தென்னிலங்கை அரசியல் கட்சிகளிலும் தமிழ் வேட்பாளர்கள் களம் இறங்கும் சூழலில் தென்னிலங்கைத் தரப்பு அல்லது அரச ஆதரவுத் தரப்பு என அங்கேயும் ஒரு முகமாக அன்றி பன்முகப்படுத்தப்பட்டவாறே வேட்பாளர்கள் பிரிந்து நிற்பது மட்டுமன்றி பல குழப்பங்களும் காணப்படுகின்றன. இதிலும் குறிப்பாக தெற்கிலே கடந்தமுறை அதிக வாக்குகளைப் பெற்றாலும் தற்போது குழம்பியுள்ள மொட்டுக் கட்சியானது வடக்கு கிழக்கிலே வாக்குகளை பெறவே முடியாது என்ற நிலையை உணர்ந்து இரகசியமாக வேறு கட்சிகளின் பட்டியலில் ஒளித்து விளையாடியபோதும் உளறுவாயன்போன்று பசில்ராஜபக்ச அதனைப் போட்டு உடைத்து விட்டார். இதனால் தமது கட்சியில் அவர்கள் (பெரமுன) எவரும் இல்லை என்றுகூட துணிந்து கூறமுடியாத அளவிற்கு யாழில் ஈ.பி.டி.பியும் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் உள்ள விடயம் ஒன்றே அவர்களின் பதற்றத்தைக் காட்டுகின்றது.
இதேநேரம் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியதாக மார்தட்டிய அங்கஜன் இராமநாதனின் வீர வசனமும் வாய்ச்சவாடல்களும், அரச வேலை தருவேன் என போலி வாக்குறுதி வழங்கி ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளை வீதி வீதியாக இலவசமாக அலைய விட்டதையும் மக்கள் மறக்கவில்லை என்பதை காண முடிகிறது. இதேநேரம் வீணைக் கட்சியுடன் மொட்டுக்கட்சி இணைந்தமை அந்தக் கட்சிக்குள்ளேயே பல உரசல்கள் காணப்படுவதோடு ஈ.பி.டி.பியில் தற்போது உள்ள உள்ளூராட்சி உறுப்பினர்கள் முதல் நீண்ட கால உறுப்பினர்கள் வரையில் பலர் பிற கட்சிகளிற்குத் தாவி அங்கே வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.
உதாரணமாக யாழ்ப்பாணம் மாநகர சபையிலே அங்கம் வகிக்கும் 10 உறுப்பினர்களில் மூவர் வேறு இரு கட்சிகளில் போட்டியிடும் அதே நேரம் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அடுத்தபடியான விருப்பு வாக்குகளைப் பெற்ற சட்டத்தரணி மு.றெமீடியஸ் 2023 தேர்தல் வேட்பாளர் பட்டியலிலேயே காணவில்லை. இவையும் அந்தக் கட்சியின் வாக்கு வங்கிக்கு பின்னடைவாக அமையும் எனக் கருதப்படும் அதேநேரம் மட்டக்களப்பில் பிள்ளையான் தனது கட்சியுடன் பெரமுனவிற்கு இடம் வழங்கிய விடயம் தற்போது பூதாகரமாக பேசப்படுகின்றது. அரச ஆதரவுக் கட்சிகளின் நிலைமை இவ்வாறு இருக்கும் அதே நேரம் வடக்கு-கிழக்கில் தேசிய கட்சிகளில் நிற்கும் தமிழ் வேட்பாளர்களாலும் வாக்குகள் சிதறும் வாய்ப்பும் உள்ளது.
இவ்வாறு அரச ஆதரவு மற்றும் தென்னிலங்கை கட்சிகள் அபகரிக்கும் வாக்குகளில் இருந்து தப்பிப்பிழைக்கும் வாக்குகளே தேசிய (தமிழ் கட்சிகளின்) வாக்குகளாக (இருக்கும்) காண்பிக்கப்படும். இங்கேயும் தமிழ் கட்சிகளிற்கான வாக்கும் ஒன்று அல்லது இரண்டு கட்சிகளிற்கு மட்டுமின்றி பல இடங்களில் 3 முனைப் போட்டிகளும் சில இடங்களில் 4 முனைப் போட்டிகளும் நிலவுவதால் வாக்குகள் பிரியும் சாத்தியங்கள் அதிகமாகவுள்ளன.
இந்த தாக்கத்தை உணரும் கட்சிகளாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றுடன் சில சபைகளில் சுயேச்சைக் குழுக்களும் உள்ளன.
இதில் முதலில் விமர்சனத்திற்கு உள்ளாவது இலங்கை தமிழரசுக் கட்சியே. அக்கட்சியை விமர்சித்தாலே வாக்கு எடுக்க முடியும் என்பதே சகல கட்சிகளின் நிலையாக இருக்கிறது. அதேநேரம் தமிழ் அரசுக் கட்சி கூட்டில் இருந்து தனியாக போட்டியிடுவது பலமா, பலவீனமா என்ற பெரும் கேள்வியும் எழுப்பப்படுகின்றது. அதில் இரண்டிற்குமே இடமிருந்தாலும் அதிகம் எது என்பதற்கான விடை தேர்தலிற்கு பிறகே தெரியும். 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது கட்சிகளின் கூட்டு, ஒற்றுமை எனப் பிரஸ்தாபித்து கூட்டமைப்பில் இருந்த 3 கட்சிகளில் புளட் அமைப்பு நியாயமான கோரிக்கைகளை முன் வைத்தலும் ரெலோ எரியும் வீட்டில் பிடுங்குகிறது லாபம் என்றே செயல்பட்டது. இதனால் வடக்கு-கிழக்கிலே தனக்கு வேட்பாளர்கள்கூட இல்லாத சபைகளைக்கூட கோரி நின்றதோடு அடிபட்டு பெற்றும்கொண்டது. இதனைவிட 2018ஆம் ஆண்டே கூட்டமைப்பை விடவும் அதிக இடம் தருவீர்களா என சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் பேச்சில் ஈடுபட்டு அது சரிவராமல் போகவே பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் ஓடிச் சென்று பேச்சில் ஈடுபட்டு எவையும் சரிவராது ஈற்றில் மீண்டும் கூட்டமைப்பிலேயே சரணாகதி அடைந்த செயலை சிலர் மறந்தாலும் பலர் மறக்கவில்லை. இதனால் சபைகளின் பங்கீட்டில் பல சபைகளை விரும்பியோ விரும்பாமலோ தமிழ் அரசுக் கட்சி ரெலோவிற்கு தாரை வார்த்தனர் என தமிழ் அரசுக் கட்சியினர் இன்றும் குமுறுகின்றனர். உதாரணங்களாக கோப்பாய், கரவெட்டி, மன்னார் நகர சபை என பட்டியல் நீளும். அதே நேரம் ரெலோவின் ஆரவக் கோளாறால் மட்டக்களப்பில் தேர்தலிற்கு முன்பே இரு சபைகளை இழந்தோம் என்கின்றனர்.
இந்தச் சூழலிலேயே 2023ஆம் ஆண்டு தேர்தலிலே வடக்கு-கிழக்கில் போட்டியிடும் இந்த 4 கட்சிகளில் தமிழ் அரசுக் கட்சியில் எப்போதுமே ஏற்படும் குழப்பம் இப்போதும் நிலவுகிறது. ஏனைய கட்சிகளில் ஏற்படும் குழப்பம் ஆள் இன்மையாகவே காணப்படும் அது இந்த தேர்தலிலும் விதிவிலக்காக காணப்படாதபோதும் 2019ஆம் ஆண்டு பல சபைகள் ரெலோவிற்கும் புளட்டிற்கும் கூட்டமைப்பின் காரணமாக விட்டுக் கொடுத்தபோது தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்தவர்களிறகு சந்தர்ப்பம் இழந்த காரணத்திற்காகவே அதிக எண்ணிக்கையானோர் கட்சியை விட்டு வேறு கட்சிக்கு தாவினர் அல்லது கட்சி செயல்பாட்டிலிருந்து ஒதுங்கினர். இதனால் வாக்கு வங்கியில் ஓர் வீழ்ச்சி ஏற்பட்டது. அந்த நிலை தற்போது 100 வீதம் சரி செய்யப்படவில்லை என்றாலும் பெருமளவில் தீர்வு காணப்பட்டுள்ளது என்று கட்சியின் ஆதரவாளர்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை மெய்ப்பிக்கப்பட்டால் தமிழ் அரசுக் கட்சி மீண்டு வரும்.
இதேநேரம் 2020ஆம் ஆண்டுத் தேர்தலில் புதிய கூட்டணியை அமைத்த சி.வி.விக்னேஸ்வரனின் பக்கமிருந்த சுரேஸ் பிறேமச்சந்திரன், அருந்தவபாலன், சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் அனைவருமே கூட்டைவிட்டுப் பறந்த நிலையில் வேட்பு மனுவிற்கே ஆள் இல்லை என்ற நிலை காணப்பட்டது. இருந்தபோதும் கட்சி இன்றி நடுவழியில் நின்ற மணிவண்ணன் விக்னேஸ்வரனின் வெறுமையை சரியாக பயன்படுத்திக்கொண்டார். இதிலே வவுனியா மாநகர சபைக்கான வேட்பு மனுவைத் தவிர ஏனைய அனைத்து வேட்பு மனுக்களில் உள்ள வேட்பாளர்களை சி.வி.விக்னேஸ்வரன் அறிந்திருக்கவே இல்லை. அவர்களை மணிவண்ணன் மட்டுமே அறிவார் அதனால் கட்சி எதிர்காலம் யாரின் கையில் என்ற நிலை உள்ளது. மணிவண்ணனின் ஆதரவு நல்லூர்ப் பிரதேச சபை மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை என்பவற்றில் மட்டுமே உள்ளது. அங்கேயும் மாநகர சபையில் முதல்வராக இருந்தபோது ஏதோ சாதித்ததாகக் கூறினாலும் அதனைவிட குளறுபடிகளும் மூடு மந்திர நிர்வாகமுமே அதிகமாக காணப்படுகின்றது என ஏனைய உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுவதிலும் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. இப்படி இருக்கிறது மான் சின்னத்தில் போட்டியிடுபவர்களின் நிலை.
இவை அனைத்திற்கும் மேலாக ` நாம்தான் பழம்பெரும் கட்சி, எந்த ஆயுதக் குழுவுடனும் எப்போதும் தொடர்பில்லை நாமே கொள்கை வாதிகள்` என வீராப்பு மட்டுமே பேசும் கட்சியாகவுள்ளது அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் நிலைப்பாடு. 2018ஆம் ஆண்டுத் தேர்தலிலே வீடா, சைக்கிளா என்ற எதிர்பார்ப்பு மிகவும் விறுவிறுப்பாக காணபட்டது. இந்த நிலைப்பாடு தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான தேர்தலில் 50 வீதம்கூட காணப்படவே இல்லை.வடக்கு கிழக்கு மாகாணத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் 40 வேட்பு மனுவிலே எந்தவொரு சபையின் வேட்புமனுவிலேனும் ஓர் சாதனையாளர், பெரும் புள்ளி, தீராத லட்சியவாதி, இவரின் பெயரிற்காகவே வாக்கு கிடைக்கும் எனக் குறிப்பிடும் ஒரு வேட்பாளரைக் காண முடியவில்லை. உதாரணமாக யாழ்ப்பாணம் மாநகர சபை எனில் அங்கே ஏற்கனவே உறுப்பினராக இருக்கும் மூவருடன் முதன்மை வேட்பாளர் எனக் கூறப்படுபவர்கூட இம்முறை வெல்வாரா என்ற சந்தேகமே காணப்படுகின்றது. இருந்தபோதும் அனைவரும் எடுக்கும் வாக்குகள் விகிதாசாரப் பட்டியல் ஆசணங்களைத் தீர்மானிக்கும்.
இவை அனைத்திற்கும் மேலாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி 5 கட்சிகளின் கூட்டாக நாம்தான் தற்போது கூட்டமைப்பு எனக்கூறி களமிறங்கியுள்ளனர். கட்சியின் D.T.N.F என்ற குறியீட்டை முதலில் D.T.N.A என உச்சரித்த உடனேயே D என்றால் டூப்பிளிக்கேற் T.N.A என்ற விமர்சனம் எழுந்தபோது சத்தம் சந்தடி இன்றி Dயும் காணாமல் போய்விட்டது. இதேநேரம் T.N.A என்ற பெயரில் ஓர் பதிவு செய்த கட்சி இல்லாத காரணத்தால் அந்தச் சொல்லை எவர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற நிலைப்பாடே தற்போது வரையில் காணப்படுகின்றது.
இதேநேரம் இராணுவத்தோடு ஒட்டுக் குழுக்களாகச் செயல்பட்டு கூட்டமைப்பின் பெயரிலேயே இவர்கள் புனிதர்களாயினர் என்ற குற்றச் சாட்டின் மத்தியில் தற்போது சைவக் கடைகளான அரசியல் கட்சிகள் தனியாகவும் ஆயுதக் குழுக்களான `இறைச்சிக் கடை` ஒருபுறம் என்னும் அளவிற்கு நிலை உள்ளது.
இவர்களின் திசையில் தாம் ஒற்றுமை என்பதற்காக பல கட்சிகளின் கூட்டு எனவும் இவை இரண்டிற்காகவும் மக்கள் வாக்களிப்பர் என நம்புகின்றனர்.
இந்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி என்ற கட்சியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக புளட் அமைப்பின் ஆர்.ஆர் எனப்படுபவரால் பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதனையே மறைக்கவும் முயல்கின்றனர்.
கொள்கை அரசியல் என்பதற்கு பதிலாக வாக்கு வங்கி அரசியலே தமிழ்க் கட்சிகளிடையே காணப்டுகிறது.