வெற்றி கோப்பையை பிரித்வி ஷாவிடம் கொடுத்த வீடியோ வைரல்!
Share
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகளை கொண்ட டி20 தொடர் நேற்று நிறைவடைந்தது. டி20 தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. எனவே, தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசிப் போட்டியானது நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா அணியை வழிநடத்தினார். போட்டி முடிந்த பின்னர் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு தொடரின் கோப்பை பரிசளிக்கப்பட்டது. இதை பெற்றுக்கொண்ட ஹார்திக் பாண்டியா அதை எடுத்து அணிவீரர்கள் அருகே வந்ததும் அங்கிருந்த பிரித்வி ஷாவிடம் கோப்பையை ஒப்படைத்தார். பின்னர் பிரித்வி ஷாவும் மற்ற வீரர்களும் கோப்பை வைத்து கொண்டாடி போஸ் கொடுத்தனர்.
கேப்டன் ஹார்திக் பாண்டியாவின் இந்த செயல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பொதுவாக அணியின் கேப்டன் தான் கோப்பை தூக்கிப் பிடித்து போஸ் கொடுத்து கொண்டாடுவார். பின்னர் தான் கோப்பையை மற்ற வீரர்களிடம் கொடுப்பார். ஆனால், மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்த போது பரிசளிப்பு விழாவில் வெற்றிக் கோப்பையை பெற்றதும் அதை சக வீரர்களிடம் கொடுத்து விட்டு ஓரமாக போய் நின்றுகொள்வார். மற்ற வீரர்களை கோப்பையுடன் கொண்டாடுவதை ரசித்து கவனித்து பார்ப்பார். தோனியின் இந்த தன்னடக்கமான செயலுக்கு தனித்த கவனமும் பாராட்டும் ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும்.
Captain @hardikpandya93 collects the @mastercardindia trophy from BCCI president Mr. Roger Binny & BCCI Honorary Secretary Mr. Jay Shah 👏👏
Congratulations to #TeamIndia who clinch the #INDvNZ T20I series 2️⃣-1️⃣ @JayShah pic.twitter.com/WLbCE417QU
— BCCI (@BCCI) February 1, 2023
தற்போது ஹார்திக் பாண்டியாவும் அதே பாணியில் கோப்பையை பெற்றவுடன் பிரித்வி ஷா கொடுத்துவிட்டு ஓரமாக நின்றுகொண்டது தனி கவனம் பெற்றுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், 3 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட விளையாட பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரைத் தான் மூன்று போட்டியிலும் தொடக்க வீரர்களாக களமிறக்கப்பட்டனர்.
பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு கேப்டன் பொறுப்பில் இருந்த ஹார்திக் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இதற்கு மறைமுகமாக பதில் கூறும் விதமாக ஹார்திக் பிரித்வி ஷாவிடம் கோப்பையை கொடுத்துள்ளார் எனவும் நெட்டிசன்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதுவரை இந்திய அணியின் கேப்டனாக 4 டி20 தொடரை விளையாடியுள்ள ஹார்திக் பாண்டியா, நான்கு தொடரையும் வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளார்.