இந்திய கேப்டன்களில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா
Share
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆட்டத்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் மார்னஸும், ஸ்டீவன் ஸ்மித்தும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். எனினும், மார்னஸ் 49 ரன்களிலும், பின்னர் வந்த மட் ரென்ஷா, ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். மேலும், ஸ்டீவன் ஸ்மித், 37 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அலெக்ஸ் கேரி 36 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து, பெவிலியன் திரும்பினர். இதனால், அந்த அணி 177 ரன்களில் முதல் இன்னிங்சை இழந்தது. இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களையும், ரவிசந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 77 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து இருந்தது. 2-வது நாளான இன்றும் இந்திய அணி நிதானமாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை விட முன்னிலை பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா தவிர மற்ற வீரர்கள் யாரும் டெஸ்ட் போட்டியில் சோபிக்கவில்லை. ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்த போதும் மற்றொருபுறம் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி சதமடித்தார். ரோஹித் 120 ரன்கள் எடுத்திருந்த போது கம்மினஸ் பந்துவீச்சில் அவுட்டானார்.
டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பேற்ற பின் ரோஹித் சர்மாவின் முதல் சதம் இதுவாகும். இந்த சதத்தின் மூலம் அனைத்து வடிவங்களிலும் (டெஸ்ட், ஒரு நாள், டி20) சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். விராட் மற்றும் தோனி டி20 போட்டிகளில் கேப்டனாக சதமடித்தது கிடையாது, ஆனால் தற்போது ரோஹித் சர்மா அனைத்து வடிவங்களிலும் சதமடித்த இந்திய கேப்டன் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.