“இனவிடுதலையுடன் போதை விடுதலைக்கும் போராட வேண்டும்” : மாவை வேண்டுகோள்
Share
எமது யாழ் செய்தியாளர்
இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்து வருவது தொடர்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் `மாவை` சோ.சேனாதிராஜா கவலை வெளியிட்டுள்ளார்.
இன விடுதலைக்காக உழைக்க முன் வந்த வேட்பாளர்கள் எமது இளம் சந்ததி போதையில் இருந்தும் விடுதலை பெற உழைக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
போர் முடிந்த பிறகு தமிழ் மக்க்ளிடையே போதைப் பொருட்கள் பாவனை படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது அவதானிக்கப்படுகிறது. இந்திய-இலங்கை கடற்பரப்பில் கடத்திவரப்படும் போதைப் பொருட்கள் வடக்கு மாகாணத்தின் வழியாகவே நாட்டின் இதர பகுதிகளிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்ற கவலை பொதுமக்களிடையே அதிகரித்துள்ளன.
உள்ளூராட்சித் தேர்தல் கூட்டம்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட உள்ளூராட்சி சபை வேட்பாளர் அறிமுக கூட்டம் கடந்த ஞாயிறு (12) அன்று இளங்கலைஞர் மண்டபத்தில் அவர் தலைமையில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போதே தமிழ் இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் பாவனை பற்றிய தனது கவலையை வெளியிட்டார்.
அரசியலில் இருப்போர் தமிழ்ச் சமூகம் மற்றும் இளையோரின் நலன் மட்டும் மேம்பாட்டிற்காகப் பாரிய பங்காற்ற வேண்டிய தேவை உள்ளது, அதை அவர்கள் காத்திரமாகச் செய்ய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி ஏன் தனித்துப் போட்டியிடுகிறது என்பது குறித்தும் அக்கூட்டத்தில் அவர் விளக்கினார்.
”உள்ளூராட்சி சபைக்காக 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் பெற்ற அனுபவத்தின் மூலம் தனித்து போட்டியிட வேண்டும் என்ற தீர்மானத்திற்கமையவே இம்முறை தமிழ் அரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுகின்றது. இதேநேரம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக இருப்போர் வேறாகப் போட்டியிடும் நிலையில் நிச்சயமாக இந்த புதிய உத்தியில் பெரும்பான்மையைப் பெற முடியும். இந்த முடிவிலும் சிலரிடம் மாறுபட்ட கருத்து இருக்கலாம் ஆனால் இதன் நன்மை, தீமையை வாக்களிப்பின் பின்பே தீர்மானிக்கும்” என்றார்.
இக் கலந்துரையாடலில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிரேஸ்ட தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள், வேட்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
யாழ் பல்கலைக்கழகத்திற்கும் விஜயம்
கனேடியத் தூதுவர் எரிக் வல்ஸ் திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் சென்றார். கனேடிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் யாழ்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின், மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையினால் நடாத்தப்படும் என்லீப் செயற்றிட்டத்தின் மீளாய்வுக்காகவே கனேடியத் தூதுவர் தலைமையிலான குழு பல்கலைக்கழகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தது.
இந்த விஜயத்தின் போது, துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி எஸ். கே. கண்ணதாஸன் ஆகியோருடனும், மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறை மாணவர்களுடனும் கனேடியத் தூதுவர் கலந்துரையாடி, நிலைமைகளைக் கேட்டறிந்தார்.