LOADING

Type to search

இலங்கை அரசியல்

மலைவாழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அரசும் சமூகமும் தனிக்கவனம் செலுத்த வேண்டும்

Share

த. ஸ்டாலின் குணசேகரன் பேச்சு

மலைவாழ் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு அரசும் சமூகமும் தனிக்கவனம் செலுத்த வேண்டும்’ என்று மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியரிடம் புத்தகங்களை வழங்குகிறார் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன்

அந்தியூரைத் தாண்டி 30 கிமீக்கு அப்பால் மலைப்பிரதேச ஊரான பர்கூர் உள்ளது. அவ்வூரிலுள்ள பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் அப்பள்ளி மாணவர்களிடையே சிறப்புரையாற்றிய அவர் மேலும் பேசியதாவது :
மலைவாழ் மக்களின் குழந்தைகள் எக்காரணம் கொண்டும் கல்வியை பாதியில் நிறுத்துதல் கூடாது. முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது கல்விக்கான வாய்ப்பு மிகவும் அதிகமாகியுள்ளது. வறுமை, கல்லாமை, விழிப்புணர்வின்மை, அறியாமை, சமூகச்சூழல் போன்ற பல அம்சங்கள் கல்வித் தொடர்ச்சிக்கு சவால்களாக உள்ளன. இத்தனை தடைகளையும் மீறி வைராக்கியத்தோடும் உறுதியோடும் கல்வி கற்கிற மனநிலையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசளித்தல்…

இப்பள்ளி நூலகத்திற்கு இங்கு பயிலும் மாணவர்களின் வயதுக்கும் படிப்புக்கும் ஏற்ற நூற்றுக்கணக்கான சிறுசிறு தரம்மிக்க பொது அறிவை வளர்க்கும் புது நூல்கள் சுடர் தொண்டு நிறுவனம் சார்பில் இந்நிகழ்வில் வழங்கப்படுகிறது.

பாடப் புத்தகங்கள் வாழ்க்கையின் அச்சாணி போன்றவை. அதே சமயத்தில் பாடப் புத்தகங்கள் அல்லாத பொதுநூல்கள் மாணவர்களின் ஆளுமையை வளர்க்கும் அற்புதங்களைச் செய்யும் ஆற்றல்மிக்கவை. இரண்டு வகை நூல்களும் மாணவர்களின் இரண்டு கண்களைப் போன்றவை. பள்ளி வயதிலிருந்தே புத்தக வாசிப்பிற்கு வசப்படுகிற மாணவர்கள் மிகுந்த தன்நம்பிக்கை உள்ளவராக வளர்வர்.

செய்தித்தாள்கள் வாசிப்பு மொழி அறிவை வளர்ப்பதோடு உலக நடப்புகளை உள்வாங்கிக் கொள்வதற்கும் பயன்படுகிறது. பள்ளிக் காலத்திலிருந்தே வாசிப்புப் பழக்கத்தை தொடர்ந்து
மேற்கொள்பவர்கள் பல துறைகளில் தலைமைத் தகுதியுடன் விளங்குகின்றனர். பொதுப் புத்தகங்கள் வாசிப்பவர்களுக்கு மற்றமாணவர்களைக் காட்டிலும் பாடங்களை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் ‘ என்றார்.

இந்நிகழ்வில் சுடர் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ரூபாய் 50,000 மதிப்புள்ள நூல்கள் பள்ளி நூலகத்திற்கு வழங்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர் சுப்பிரமணியம், காவல்துறை உதவி ஆய்வாளர் தியாகராஜன், சுடர் அமைப்பின் இயக்குனர் எஸ்.சி. நடராஜ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் குமரேசன், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கப் பொறுப்பாளர் கணேசன், எழுத்தாளர் வே. குமரவேல் உள்ளிட்ட பிரமுகர்களும் 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.