விநாயகர் விமர்சனம் | ஐயோ 13……… அலறும் பௌத்தம்
Share
(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரைத் தொடர்: பகுதி 4)
கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி
மேற்கத்திய கலாசாரத்தின் நம்பிக்கைகளில் 13 என்னும் இலக்கம் துரதிருஷ்டம் வாய்ந்த எண்ணாக வர்ணிக்கப்படுகிறது. எனவே தான் 13ஆம் இலக்க விமான இருக்கை 13ஆம் இலக்க ஹோட்டல் அறை போன்றவற்றை அங்கு காண முடிவதில்லை. அந்த 13 இலங்கையிலும் துரதிருஷ்டம் பிடித்ததாக மாறியிருக்கிறது கடந்த சில வரங்களாக 46 வருடங்கள் அரதப்பழசான அரசியலமைப்புச் சீர்திருத்தமும் அதன் விளைவாக உருவாகிய மாகாண சபைகளும் அவற்றுக்குரிய அதிகாரப் பகிர்வும் பற்றிய வாய்ச்சண்டைகள் பூஞ்சணம் பிடித்த பழங்கஞ்சியைக் கொதிக்க வைத்து மணந்து பார்க்க வைத்திருக்கிறது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வந்து சென்றார், ரணில் 13ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றார். உடனே ஐயோ 13 என்ற ஒப்பாரி.
வீரவன்ச, கம்மன்பில, வீரசேகர, பொன்சேகா,சிரிசேன, சாந்தபண்டார என்று வரிசையாக வரிந்து கட்டிக்கொண்டு வந்து நிற்கிறார்கள். நான்கு பீடங்களையும் சேர்ந்த பிக்குகள் பாராளுமன்ற வீதிக்கு அருகில் வீரவசனம் பேசி ஆர்ப்பாட்டம் செய்து 13ஐ கொளுத்துகிறார்கள். பிக்குகளைத் தவிர வேறெந்த மதத்தலைவர்களாவது இதைச் செய்திருந்தால் பிக்குகளை சும்மா விட்டிருப்பார்களா? அரசியலமைப்பை அவமதித்தற்காக வழக்குப் போட்டு குடியுரிமையைப் பறித்து கம்பி எண்ணிக்கொண்டிருக்க மாட்டார்களா?
பிக்குகளை பகைத்துக் கொண்டு எதையும் செய்ய முடியாது என்கிறார் மைத்திரிபால சிரிசேன. இவர்தான் 2015இல் அரசியலமைப்பின் 19ஆம் திருத்தத்தின் கீழ் தேசிய நல்லிணக்க அமைச்சு என்ற ஒன்றை உருவாக்கி இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணப் போவதாகச் சொன்னவர். அப்போதும் கூட 13உம் இருந்தது மாகாண சபைகளும் இருந்தன.ஆனால் 13 உருவாக்கிய மாகாண சபைகளின் அதிகாரங்கள் பற்றியோ நீதிமன்றத்தீர்ப்புகள் பற்றியோ தெளிவான நிலைப்பாடுகள் இல்லாம வெறும் புகை மண்டலமாகத் தெளிவில்லாமல் காட்சியளிக்கிறது.
1965 ஆம் ஆண்டு ஏ பி நாகராஜன் இயக்கத்தில் கே வி மகாதேவன் இசையில் சிவாஜி கணேசன் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து எடுக்கப்பட்ட வண்ணப்படம் திருவிளையாடல். இதில் சிவபெருமான் (சிவாஜியும்) தருமி (நாகேஷும்) நக்கீரன் (ஏ பி நாகராஜனும்) தோன்றி–தருமிக்கு பொற்கிழியளிக்கும் நகைச்சுவைக்காட்சிப் பகுதியை மறக்கவே முடியாது. இக்காட்சியில் நாகேஷின் உடல் மொழியைப்பார்த்து அசந்து போய்விட்டதாக சிவாஜி குறிப்பிட்டிருந்தார். இதில் பாட்டில் குறையிருப்பதாக நக்கீரர் கூறவே சிவபெருமான்-”அறிந்தது-அறியாதது, புரிந்தது புரியாதது,தெரிந்நது தெரியாதது அனைத்தும் யாம் அறிவோம் அது பற்றி உமது அறிவுரை தேவையில்லை எல்லாம் எமக்குத் தெரியும் என்று கர்ஜிப்பார். நக்கீரரோ ஏல்லாம் தெரிந்துவிட்டால் எழுதும் பாட்டில் குறையிருக்காது என்று அர்த்தமா? அதுபற்றி நான் குறை கூறக்கூடாதா என்று எதிர்வாதம் செய்வார்.
அதுபோல 13ஐப்பற்றி எல்லாம் தெரிந்தது போல இனவாதிகளும் அவர்களது கைக்கூலிகளும் வெளியே குரைத்துக் கொண்டு திரிந்தபோதிலும் உண்மையில் அவர்களுக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது. இனவாதத்தில் மூழ்கிப்போயுள்ள அரசியல் வாதிகளுக்கு 13ஆம் திருத்ததினால் நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இறைமைக்கும் எதுவித அச்சுறுத்தலும் இல்லை என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் அதை தமது அரசியல் இலாபங்களுக்குப் பயன்படுத்தும் மலினப்பட்ட தந்திரத்தைக் கையாள்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
13ஆம் திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு வழங்கப்படவிருந்த காணி அதிகாரங்களை நீதிமன்ற தீர்பொன்றின் மூலம் நீக்கி விட்டதாகவும் ஆகவே இல்லாத காணி அதிகாரத்தை ரணில் தமிழர்களுக்கு எவ்வாறு வழங்கமுடியும் என்று கேள்வி எழுப்புகிறார் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைப் போராசியர் நண்பர் சர்வேஸ்வரன். அவரது கூற்றுப்படி கைக்காசு கொடுத்து வாங்கியுள்ள தனியார் காணிகள் தொடர்பிலேயே மாகாண சபைகளுக்கு இப்போது அதிகாரம் உள்ளது. அரசகாணிப்பயன்பாடு தொடர்பில் அதிகாரம் இல்லை. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது என்று ஏற்கெனவே அவர்கள் அறிவித்து விட்டார்கள். இணைந்திருந்த வடக்குக் கிழக்கையும் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரித்து விட்டார்கள். அது மட்டுமன்றி மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மத்திய அரசாங்கம் மீளப்பெறமுடியாது என்று எந்தத் தடைகளும் இல்லை. மாகாண சபைகளின் கழுத்தை நெறிக்க மத்திய அரசு கடும்போக்காளர்களை ஆளுநர்களாக நியமித்து கட்டுப்படுத்தவும் முயற்சிக்கலாம். எல்லாவற்றுக்கம் மேலாக மாகாண சபைகளுக்கு தேவையான நிதியை மத்திய அரசே வழங்கவேண்டும். வருடாந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மாகாணங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அந்த நிதி உடனடியாகவே மாகாணங்களுக்கு வழங்கப்படுவதில்லை. கட்டங்கட்டமாகவே வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்படும் நிதியை வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதன் மூலம் மாகாணசபைகளின் செயற்பாடுகளை முடக்க முடியும். உதாரணமாக– வழங்கப்படவேண்டிய நிதியை கடைசிக்காலாண்டில் திறைசேரி மாகாண சபைக்கு வழங்குமாயின் அவற்றால் தமது செயற்திட்டங்களை மூன்று மாதங்களுக்குள் முடிக்க முடியாததால் வருட இறுதியில் நிதி மீண்டும் திறைசேரிக்கே திரும்பி வந்துவிடும். நிதி எப்போது கிடைக்கும் என்று சரியாகத் தெரியாதபடியினால் மாகாண சபைகளால் திட்டங்களை உருவாக்கி உரிய வேளையில் நடைமுறைப்படுத்த முடியாது. காலதாமதம் ஆவதால் திட்டச் செலவினங்கள் அதிகரிக்கும்.
அத்துடன் வருட இறுதியில் நிதியைக் காலந்தாழ்த்தி வழங்குவதால் அவற்றை செலவிடமுடியாமல் அடுத்தவருட ஆரம்பத்தில் திறைசேரிக்கு அனுப்பும் போது மாகாண சபைகள் வழங்கப்பட்ட நிதியில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளாமல் திருப்பி அனுப்பிவிட்டன என்று குற்றம் சாட்டவும் முடியும். ஆகவே இப்போதைய நிலையில் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தினாலும் சிறுபான்மையினரின் வாழ்வில் தேனும் பாலும் பெருக்கெடுத்து ஓடப்போவதில்லை. பெரும்பான்மைச் சிங்கள மக்களின் சோற்றுப்பானையிலிருந்தோ கொல்லைப்புறத்திலிருந்தோ எதுவும் பறிபோகப் போவதுமில்லை. நாடு பிரியப் போவதுமில்லை. பல் பிடுங்குப்பட்ட இந்த 13 வது திருத்தத்தை முழுமையாக அமல்செய்யுமாறு வலியுறுத்தும் இந்தியாவுக்கு இந்த விவகாரங்கள் எதுவும் தெரியாது என்று யாரும் நம்பினால் அந்த முட்டாள்தனத்திற்கு நாம் பொறுப்பல்ல.
அவ்வாறாயின் ஏன் இந்தியா 13ஐ அமல்படுத்தக் கோருகிறது? இலங்கை இப்போதுள்ள வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவருவதற்கு நீறுபூத்த நெருப்பாக உள்ள இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டுமென்று சர்வதேச சமூகம் விரும்புகிறது. யுத்த முடிவின் பின்னரான கடந்த 13 வருடங்களில் காத்திரமானவகையில் இனப்பிரச்சினைக்குரிய தீர்வு தொடர்பில் நம்பிக்கை தரவல்ல எவ்வித நடவடிக்கையையும் இலங்கை எடுத்ததாகத் தெரியவில்லை. எனவே சர்வதேச மட்டத்தில் எதிர்காலத்தில் இலங்கை கடும் நெருக்குவாரங்களைச் சந்திக்க வேண்டி நேரிடலாம். இந்தியா விரும்பாத எதையாவது இலங்கைமீது சர்வதேச சமூகம் திணிக்கவும் கூடும். இரண்டாம் உலகப்போரின் போது யுத்தக்குற்றங்கள் செய்தோரும் ஹிட்லருக்கு ஆதரவாக செயற்பட்டவர்களும் இன்னமும் கண்டுபிடிக்கப்பட்டு தள்ளாத வயதிலும் தண்டிக்கப்படுவதைக் காண்கிறோம். அண்மையில் கனடா இலங்கை அரசியல்வாதிகளுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் விதித்த பயணத்தடைகளை இதன் ஒரு ஆரம்பக்கட்டமாகக் கூடக்கருதப்படலாம். குறைந்த பட்சம் பிராந்திய வல்லரசான இந்தியா தனது முயற்சியினால் உருவான 13வது திருத்தத்தையும் மாகாண சபைகளையும் முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் இலங்கை இனப் பிரச்சினை விவகாரத்தை நேர்க்கணியமாக அணுகுகிறது என்று சர்வதேசத்தை நம்பச் செய்யவைத்து இலங்கையைக் காப்பாற்றும் ஒரு முயற்சியாகக் கூட இது இருக்கலாம்.
என்னதான் உதவிகளைச் செய்தாலும் 4 பில்லியன் டொலருக்கும் கூடுதலான கடனை உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைய உரிய காலத்தில் இலங்கைக்கு வழங்கிய போதிலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கேற்ப இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்குரிய உறுதிமொழியை முதன் முதலாக வழங்கி உதவி செய்தபோதிலும் இலங்கையின் பேரினவாதம் இந்தியாவை எதிரியாகவே என்றும் நோக்கும். இதனால் இந்தியாவின் இலங்கை தொடர்பான நகர்வுகளை அதன் சுயநலமாக மட்டுமே காணும் ஒவ்வாமை நோய் இலங்கையின் பெரும்பான்மை மக்கள் மத்தியில் உள்ளது. ஆகவே ஒன்றுமே இல்லாத 13 நாட்டை பிளவுபடச் செய்யும் என்றும் வடக்கும் கிழக்கும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு நாடு பிரிந்துவிடும் என்று தங்களுடைய கற்பனைக்குதிரைகளைக் கண்டபடி தட்டிவிட்டு போர்க்கொடி தூக்குகிறார்கள். அது போதாதென்று மெத்தப்படித்த தமிழ் அரசியல்வாதி ஒருவர் 13ஐ மட்டுமல்ல சமஷ்டியையும் பெற்றுவிட்டுத்தான் மறுவேலை பார்ப்போம் என்று எரிகிற நெருப்பில் பெற்றோல் ஊற்றிக் கொளுத்துகிறார்.
அதை எங்கிருந்து யார்மூலம் பெறப்போகிறார் என்பதைப்பற்றியெல்லாம் திருப்பி கேள்வி கேட்காத முட்டாள் சனம் நாடு பிரிக்கப்படும் என்று நம்பத் தொடங்கியிருக்கிறது. பெரும்பான்மை இனப் புத்திஜீவிகள் மத்தியில் ஓரிரண்டு குரல்கள் 13 இற்கு ஆதரவாக வெளிவந்த போதிலும் அவை இனவாதிகளின் கூச்சல்களை மீறி ஒலிக்கச் செய்யும் அளவுக்குப் பலமானதாக இல்லை. மறுபுறம் சில தமிழ் அரசியல் வாதிகள் 13ஐ முழுமையாக ஆதரிக்கிறார்கள் அதையே தீர்வெனவும் நம்புகிறார்கள். வேறுசிலர் மதில் மேல் பூனையாக முதலில் அமல் படுத்துங்கள் அதன் பிறகு பார்க்கலாம் என்கின்றனர். கடந்த நான்கு தசாப்த கால அனுபவத்தின் அடிப்படையில் அலசிப்பார்க்குமிடத்து பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் 13ஐ இனப்பிரச்சினைக்கான தீர்வாகக் கருதவில்லை என்பதை சுலபமாக அறிய முடியும். அவர்கள் 13இற்கு அப்பாற்சென்ற சமஷ்டித்தீர்வை விரும்புகிறார்கள். ஆனால் அந்தத்தீர்வை இலங்கை விரும்பவில்லை.
ஆகவே சிங்கள மக்கள் பெரும்பான்மையானோர் 13ஐ விரும்பவில்லை சிறுபான்மை மக்களிலும் பெரும்பாலானோரும் அதனை விரும்பவில்லை என்றால் யாருடைய தேவைக்காக 13ஐப்பற்றி இப்போது பேசப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. இருதரப்பும் 13ஐ விரும்பவில்லை ஆகவே இதனை நீக்கிவிடலாம் என்று இறுதியில் ரணில் முடிவெடுக்கலாம். ஆனால் அதனை இந்தியா விரும்பாது. இவ்வாறு முக்கோணக் காதல் கதை மாதிரி இந்தப் பிரச்சினை தொடர்கிறது. அரசியலமைப்புத் திருத்தத்தின் இந்தப் பதின்மூன்றை விட இன்னொரு பதின்மூன்று பெரும் உலுக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 13ஆம் திகதி தஞ்சையில் பழ.நெடுமாறன் புலிகளின் தலைவர் நலமாக இருக்கிறார் என்று வெளியிட்ட அறிவிப்புதான் அது. அடுத்த மணித்தியாலங்களில் இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் அது தலைப்புச் செய்தியாக இருந்தது. இலங்கை ராணுவமும் ராஜபக்ஷ்வும் அதற்கு மறுப்பறிக்கை விட்டனர். அதே 13ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள பௌத்த பிக்குவின் இருப்பிடத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டதாகவும் சுட்டவர் தப்பிச் சென்று விட்டதாகவும் பத்திரிகைச் செய்தியொன்று கூறியது. நடந்துள்ள இவ்விடயங்களை உற்றுநோக்குமிடத்து இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சீரழிவுகளுக்கு மத்தியிலும் ஏற்பட்டுள்ள பூகோள மற்றும் பிராந்திய அரசியல் நகர்வுகளும் இலங்கையின் உள்நாட்டு அரசியல் திருகுதாளங்களும் இலங்கையை பொருளாதார மீட்சிப்பாதையிலிருந்து வெகுதூரம் நகர்த்திவிடக் கூடிய ஏது நிலைகளை தென்படுகின்றன. இவை சிறுபான்மைத் தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமன்றி எதையும் சீர்தூக்கி ஆராயாமல் சுயபுத்தியின்றி சொல்புத்தியில் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கும் சிங்கள மக்களுக்கும் ஒருபோதும் நன்மை தராது.
எவ்வித அச்சமுமின்றி நெற்றிக்கண்ணைத் திறக்கும் ஒருவர் இப்போது நாட்டிற்கு தேவை.