LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ் கலாச்சார மைய திறப்பு விழாவில் இடம்பெற்ற திரைமறைவு சம்பவங்கள்

Share

(கனடா உதயனின் சிறப்பு ஆய்வுக் கட்டுரை)

யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்

”யாழ்ப்பாண மக்களின் கலாச்சாரத்தை ஊக்குவித்து மேலும் வளர்க்கவும் இலங்கையின் வடக்கு மாகாண மக்களின் கலாச்சார விழுமியங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்திய அரசால் யாழ் மாநகர சபைக்கு சொந்தமான இடத்தில் கலாச்சார மண்டபம் கட்டப்படும்” என்று தான் இந்திய அரசிற்கும்-இலங்கை அரசிற்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

அப்படிக் கட்டப்பட்டுள்ள அந்த கலாச்சார மையத்திற்கான நிலம் யாழ் மாநகர சபைக்கு சொந்தமானது. அதாவது யாழ் மாநகர சபைக்கு சொந்தமான இடத்தில், இலங்கை அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஒரு பில்லியன் இந்திய ரூபாய் செலவில் (ஒரு கோடியே இருபது லட்சம் டொலருக்கும் அதிகமான தொகை) கட்டப்பட்டு சில நாட்களிற்கு முன்னர் இலங்கையிடம் கையளிக்கப்பட்டது.

இந்த மண்டபம் தொடர்பில் பல கேலிக் கூத்துகள் அரங்கேறின. இதன் திறப்பு விழாவும் கூட இருமுறை இடம்பெற்றது. 

யார் நிலத்தில், யார் கட்டி, யாரிடம் கையளிப்பது என்பதே பெரும் சர்ச்சையாகி, இதோ அதோ என்று கையளிப்பு வைபவம் இடம்பெற்றது. இதில் நிலத்தை அளித்த யாழ் மாநகர சபையின் முதல்வருக்கு உரிய அழைப்போ மரியாதையோ அளிக்கப்படவில்லை என்பது வேறு கதை.

யாழ் மக்களிற்காக, யாழ் கலாச்சார மேம்பாட்டிற்காக கட்டப்பட்ட   மையத்தை மத்திய அரசி திட்டமிட்டு கபளீகரம் செய்துவிடக் கூடும் என்கிற அச்சம் இப்போது எழுந்துள்ளதாக வட மாகாண மக்கள் கவலைப்படுகின்றனர்.

இந்த மையத்தின் கட்டுமானம் மிக வேகமாக இடம்பெற்று 2020ஆம் ஆண்டு பணிகள் அனைத்தும் முழுமையாக  நிறைவடைந்தன. ஆனால் கொரோனா தொற்று இதன் திறப்பு விழா அல்லது கையளிப்பு விழாவிற்குத் தடையாக இருந்தது. அதனால் கட்டுமானப் பணிக்காக இந்தியாவில் இருந்து வந்த பணியாளர்களே கட்டடத்தை பராமரிக்கும் நிலை ஏற்பட்டது.  அதேவேளை இங்கு குளிரூட்டிகள் மட்டும் 100ற்கும் மேற்பட்டவை இருந்தன.  அவை இயங்காவிட்டால் பாவனைக்கு முன்பே உத்தரவாதக் காலம் முடிவடைந்து விடும். மேலும் மின் இணைப்பு வயர்களை எலி நாசம் செய்யும் என்பதால்  அதனைத் தடுக்க மின்சார இணைப்பை வழங்கியே ஆக வேண்டும் என்ற நெருக்கடி. இதையடுத்து குளிரூட்டியை இயங்க விடுவதற்கு முடிவானது. 

பிறகு “எமது பணியாளர்கள் நாடு திரும்ப வேண்டும்,  எனவே இக்கட்டிடத்தை உத்தியோகபூர்வமாக பொறுப்பெடுங்கள்” என இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்தது. 

”பொறுப்பேற்க தயாராகவுள்ளோம் தாருங்கள்” என யாழ்  மாநகர சபையும் கோரியது.  

”அதை ஒப்பந்தத்தின் வழியிலேயே வழங்க முடியும்” என இந்தியத் தூதரகம் பதிலளித்தனர். அதாவது மத்திய அரசின் மூலமே அதை வழங்க  முடியும் என்பதே இந்திய நிலைப்பாடு.

உடனே சர்ச்சை ஆரம்பித்து வெடித்தது. 

கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தை பார்வையிட்ட மத்திய அரசு அதிகாரிகள், தெற்கு  அரசியல்வாதிகள்  அதனால் ஈர்க்கப்பட்டு தமது அமைச்சின் பணிகளை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கும்போது இக்கட்டடத்தை முழுமையாக  இலவசமாகப் பயன்படுத்த திட்டமிட்டனர். அந்த மண்டபம் மாநகர சபையிடம் இருக்கும், ஆனால் பராமரிப்பு மற்றும் நிர்வகிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று குறி கொழும்பு முட்டுக்கட்டை போட்டது. இதற்கு 2021ஆம் ஆண்டில் அப்போது மாநகர சபை ஒப்புக்கொண்டது. 

அந்த கலாச்சார மண்டபத்தை தொடர்ந்து பராமரிப்பதற்கான திட்டத்தை தயாரித்து அதற்கு தேவையான ஆளணி மற்றும் அதற்கு ஏற்படும் செலவினங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றையும் கொழும்பிற்கு அனுப்பினர். உடனே தான் நேரடியாக தலையீடு செய்யும் வழியை மத்திய அரசு சிந்தித்தது. பணியாளர் சம்பளம், பராமரிப்பு ஆகியவற்றிற்கு மாதாந்தம் 4 முதல் 5 மில்லியன் ரூபா செலவு ஏற்படும் அதனால் இதனை மத்திய அரசிடம் விட்டு விடுங்கள் என்ற கோணத்தில் அணுக முயன்றது. இதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபை முழுமையாக மறுப்புத் தெரிவித்தபோது அவ்வாறானால் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் வரையில் இராணுவத்தின் தொண்டர் படையணி பராமரிக்கட்டும் என தெரிவித்தனர். இதையும் மாநகர சபை எதிர்த்தது.   

”தமிழ் மக்களிற்காக கட்டப்படுவதாகவே இந்திய அரசினால் உத்தியோகபூர்வமாக தெரிவித்தே பணிகளை ஆரம்பித்தோம் தற்போது இதனை தெற்கு அல்லது மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் செல்வதனை எம்மாலும் ஏற்க முடியாது ஏனெனில் அது இந்திய நாட்டில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதனை இலங்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும்” என இந்தியத் தரப்பால் உறுதிப்படத் தெரிவிக்கப்பட்டது. 

இத்தனையும் தாண்டி அனைவர் கண்ணிலும் எவ்வாறு மண்ணவத் தூவலாம் என காத்திருந்த கொழும்பு மாநகர சபையில் நிலவும் இழுபறியைச் சாதகமாக்க முயன்றது.  இதற்கமைய யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தை கையளிக்கும் நிகழ்வு கடந்த 11ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டு ஏற்பாடுகள் முன்னெடுத்த சமயம், இந்திய அரசு இலங்கை அரசிடம் கையளிக்க அதை  மத்திய அரசு மாநகர சபையிடம் கையளிப்பதாகவே ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டபோதும் மத்தியினால் மாநகர சபையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வை தடுக்க மறைமுக நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

அதை இலங்கை அரசிடம் கையளிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்து மேற்பார்வை செய்ய இலங்கையின் புத்தசாசன அமைச்சர் யாழ்ப்பாணம் வந்ததோடு கலாச்சார மண்டபத்திற்கும் நேரடியாக சென்று அங்கே மேற்கொள்ள வேண்டிய பணிகளை அதிகாரிகளை அழைத்து தானே நேரடியாக கட்டளைகளை வழங்கி முழுமையாக மத்தியின் அதிகாரப் பிடிக்குள் கொண்டு வரும் முயன்றார். இதை அறிந்த மாநகர முதல்வர் இ. ஆனால்ட் அங்கு சென்ற போது மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு புத்தசாசன அமைச்சருடன் யாழில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி, வடக்கு மாகாண கல்வி பண்பாட்லுவல்கள் மற்றும் கலாச்சார அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர் ஆகியோரும் அங்கே கூடியிருந்தனர். மாநகர சபை ஓரங்கட்டப்படுவதை அறிந்த ஆனால்ட் அமைச்சருடன் நேரடியாக மோதும் நிலை ஏற்பட்டது.

”இக்கட்டிடம் மாநகர சபைக்காக எமது காணியில் இந்தியாவால் கட்டப்பட்டதோடு எம்மிடமே கையளிப்பதாகவே ஒப்பந்தம். ஆனால் அந்த இடத்தில் நிகழ்வை நடாத்தி கையளிப்பிற்கான ஏற்பாட்டை எமக்குத் தெரியாமல், முன் அனுமதயின்றி நீங்கள் எவ்வாறு மேற்கொள்வீர்கள். அப்படியானால் இதில் மாநகர சபையின் பங்கு என்ன? இங்கே நினைவுக் கல்வெட்டு வைப்பதாக கூறுகின்றீர்கள் அதில் மாநகர சபையின் வகிபாகம் எந்த வகையில் உறுதிப்படுத்தப்படுகின்றது. அதில் வெறுமனே ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களுடன் இந்திய தூதுவரின் பெயர் மட்டுமே என்று கூறுகின்றீர்களே அவ்வாறானால் மாநகர சபையில் இருந்து முழுமையாக பறிக்கும் முயற்சியா? எனக் கேட்கப்பட்டபோது குழுமியிருந்த அதிகாரிகள் அதிர்ந்தனர். 

உடனே புத்தசாசன அமைச்சர், ”இதனை என்னிடம் கேட்க வேண்டாம் நீங்கள் பிரதம செயலாளரிடம் கேளுங்கள் அவர் கூறியே நான் வந்தேன்” என்றபோது வாக்குவாதம் மேலும் முற்றியது

”அவருக்கும் எமக்கும் என்ன தொடர்பு, எம்மை அவர் கட்டுப்படுத்தவும் முடியாது அவரிடம் நாம் ஏன் இது தொடர்பில் பேச வேண்டும்” என்று ஆனால்ட் குரலை உயர்த்த அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அதிர்ந்து போனார்.

”அவ்வாறானால் நீங்கள் ஆளுநருடன் பேசுங்கள்”

”அது சரி எமக்கு உங்களிடம் என்ன பேச்சு நான் ஆளுநரிடம் கேட்கின்றேன்” 

பின்னர் சமாளிப்பில் ஈடுபட்டார் அமைச்சர். இதனையடுத்து ஆளுநர் செயலகத்தில் ஓர் கூட்டம்.

அதில் கல்வெட்டில் மாநகர சபையுடன் முதல்வரின் பெயர் பொறிக்கப்படுவதோடு நிகழ்வில் வரவேற்புரை அமைச்சருக்கு வழங்கியதனால் நன்றியுரை என்ற வகிபாகம் மாநகர முதல்வருக்கு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. 

ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் கூட்டம் அமைச்சர் தலைமையில் கூடியபோது அதிலே நன்றியுரை பிரதம செயலாளருக்கு என்று மாற்றப்பட்டது. 

இதனால் குறித்த விடயங்கள் மாநகர முதல்வரினால் மீண்டும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதனால் ஜனாதிபதி செயலகத்தின் நிர்ப்பந்தம் காரணமாக நினைவுக் கல்லில் மாநகர சபையின் முதல்வரின் பெயரும் சேர்க்கப்பட்டது.  

இதையடுத்து  தனது நிலைப்பாட்டை தெரிவிக்க பேச்சிற்கும் அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அவசரமாக தகவல் வழங்கப்பட்டதோடு மாநகர சபையிடம் கட்டடம் வருவதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது. 

ஜனாதிபதி செயலகம் இணங்கியபோதும் சில இனவாதிகள் குறுக்கிட்டு தடையை ஏற்படுத்தினர். 

கையளிப்பு நிகழ்வு 11ஆம் திகதி இடம்பெறவிருந்த சமயம் 10ஆம் திகதி இரவு 10மணிக்கும் உறுதியான உத்தரவாதம் இன்மையால் நிகழ்வை முழுமையாக புறக்கணிப்பதனை தவிர வேறு மார்க்கம் இல்லை என்ற தகவல் இந்திய தூதரகம், ஜனாதிபதி செயலகம், ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டபோது இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோரின் காதுகளிலும் எட்டியது. சூழலை கையை மீறிச் செல்வதை உணர்ந்த இந்தியத் தரப்பு இரவு 10 மணியளவில் அண்ணாமலைக்கும் மாநகர முதல்வருக்கும் இடையில் 15 நிமிட சந்திப்பை ஏற்படுத்தியது.  

”அது மாநகர சபைக்குரியது அதனை மீறி இலங்கை அரசு செயல்படுமாக இருந்தால் நானும் அமைச்சரும் மட்டுமன்றி அனைத்து தரப்பின் ஊடாகவும் இது பாரதப் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அது இலங்கைக்கான எதிர்கால திட்டங்கள் வரையில் தாக்கத்தை செலுத்தியே தீரும் அதனால் நல்லது நடக்கும் என நம்புகின்றேன்” என அண்ணாமலை பதிலளித்தார். 

இந்த நிலையில்தான் கையளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மாநகர முதல்வரும் பங்கேற்றார்.  இருப்பினும் எதிர்பார்த்தமை போன்றே மாநகர சபை புறக்கணிக்கப்பட்டது. நன்றியுரைக்கு பிரதம செயலாளரே அழைக்கப்பட்டார். 

இதன் நிறைவில் கருத்துரைத்த முதல்வர் ஆனால்ட் மாகாணத்தின் சுய அதிகாரத்தை பேண வேண்டும் என்பவர்கள் உடபட சில இனவாதிகள் மாநகர சபைக்கு கிடைக்க வேண்டிய சொத்தை கபளீகரம் செய்ய முயல்வதாகவே கூறவேண்டியுள்ளது. இதனை இந்தியாவும் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது அதனால் எமது அதிருப்தியை பகிரங்கமாகவே பதிவு செய்கின்றோம். இவ்வாறுதான் இடம்பெறலாம் என்பதனால் நிகழ்வையே புறக்கணிக்க இருந்தபோதும் அது இந்தியாவை பகைத்ததாக அமையக்கூடாது என்பதனால் பங்குகொண்டேன் என்றார்.