எஸ்பிஎம் தேர்வு தொடங்குகிறது: மஇகா தேசியத் தலைவர் வாழ்த்து
Share
-நக்கீரன்
கோலாலம்பூர், பிப்.20:
எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எழுதுங்கள் என்றும் தேர்வு எழுதும் மாணவர்களின் கல்விச் சாதனை தொடரட்டும் என்றும் மலேசிய இந்தியர் காங்கிரஸ்- மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரனின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2022 கல்வி ஆண்டிற்கான மலேசியக் கல்விச் சான்றிதழ் என்னும் எஸ்பிஎம் தேர்வு, இன்று பிப்ரவரி 20-ஆம் நாள் தொடங்குகிறது.
நாடு முழுவதும் 4இலட்சத்து 3ஆயிரத்து 637 மாணவர்கள் 3,355 மையங்களில் எழுதவிருக்கும் இத்தேர்வு தொடர்பில் 1இலட்சத்து 31ஆயிரத்து 318 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இடைநிலைக் கல்வியை நிறைவுசெய்து, உயர்க்கல்வி வாய்ப்புக்கான வசந்த வாசலை ஏற்படுத்தித்தரும் இந்தத் தேர்வை எழுதவிருக்கும் அனைத்து மாணவர்களும் தங்களது பாடங்களுக்கான தேர்வினை முழுமூச்சுடனுடனும் உற்சாகத்துடனும் எழுத வேண்டுமென்று விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
கல்வி ஒன்றால் மட்டுமே நமது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த முடியும் என்ற கருத்தினை மனதில் கொண்டு, இத்துணை ஆண்டுகள் பல்வேறு சூழ்நிலைகளைக் கடந்து வந்த மாணவர்கள், இன்று ஐந்தாம் படிவத்திற்கான தேர்வில் அமரவுள்ளார்கள். தேர்வு எழுதும் மாணவர்கள், நம்மாலும் சிறந்த முறையில் தேர்வு எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களுக்காக அனுபவித்த சிரமங்களையெல்லாம் மறவாமல், அவர்களின் எண்ணங்களை ஈடேற்றும் வகையில், மாணவர்கள் தங்களது மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு இந்தத் தேர்வை எழுத வேண்டும்.
மலேசிய இந்திய சமுதாயம் கல்வி கற்ற சமுதாயமாக மாற வேண்டும் என்ற நோக்கத்தை முன் வைத்தே மலேசிய இந்தியர் காங்கிரஸ் பல்வேறு கல்வித் திட்டங்களை அமல்படுத்திக் கொண்டு வருகிறது. அந்த வகையில், கல்விக்காக நிதியுதவி தேவைப்படும் மாணவர்களுக்கு எம்ஐஇடி மூலம் நிதி வழங்கி, மாணவர்களின் உயர்க்கல்விக்காக ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான வெள்ளியை உதவிநிதியாகவும் கடனாகவும் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது.
எனவே, இவ்வாண்டும் எஸ்பிஎம் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் துணிவுடன் தேர்வு எழுதி, சிறந்த தேர்ச்சிப் பெற வேண்டுமென்று எல்லாம் வல்ல இறையருளை வேண்டி, அனைத்து மாணவர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளார்.