LOADING

Type to search

மலேசிய அரசியல்

ஒரு காலை இழந்த ஜான்சி ராணிக்கு மருத்துவ-சமூக நல உதவி

Share

நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் வருகையால் நெகிழ்ந்த குடும்பம்

-நக்கீரன்

உலக மக்கள் தாய்மொழி நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த இன்றைய நாள், கடுமையான இனிப்பு நீர் நோயால் பாதிக்கப்பட்டு இடக் காலை இழந்த ஜான்சி ராணி என்ற மலேசியத் தமிழ்ப் பெண்ணுக்கு மலேசிய மனித வள அமைச்சர் வ. சிவகுமார் மூலம் புதிய விடியல் பிறந்தது.

அரசமுறைப் பயணம் மேற்கொண்டு ஜகார்த்தாவிற்குச் சென்றிருந்த அமைச்சர், அங்கிருந்து நாடு திரும்பியதும் சிலாங்கூர் மாநிலம்,

கிள்ளான் தாமான் சொந்தோசாவைச் சேர்ந்த ஜான்சி ராணி இல்லத்திற்கு நேரடி வருகை புரிந்து, ஜான்சி ராணியிடம் நலம் விசாரித்தார்.

தொடர்ந்து, மனித வள அமைச்சின்கீழ் இயங்கும் சமூக நல பாதுகாப்பு நிறுவனம்-சொக்சோ’வின் மூலம் ஜான்சி ராணிக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டதோடு அவருக்கு சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டது. சொக்சோ’ கிள்ளான் மாவட்ட அதிகாரிகளும் அப்போது உடனிருந்தனர்.

சொக்சோ புனர்வாழ்வு மையத்தில் ஆறு மாத பயிற்சி பெறவும் ஜான்சி ராணிக்கு கடிதம் வழங்கப்பட்டது.

இளம் வயதில் ஒருகாலை இழந்ததால் எதிர்காலம் குறித்த கேள்விக்குறியுடனும் துயர மனநிலையிலும் இருந்த ஜான்சி ராணி, இனி புதுவாழ்வு பெறுவார் என்றும் சொக்சோ உதவியோடு அனைத்து உதவியையும் பெற்று பழைய நிலைக்குத் திரும்புவார் என்றும் மனித வள அமைச்சர் சிவகுமார் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மலாக்காவில் உள்ள சொக்சோ மறுவாழ்வு மையத்தில் பயிற்சி பெற்ற பிறகு அவரை மீண்டும் வேலைக்கு அமர்த்தி கொள்வதற்கு ‘சிட்டி லிங் எக்ஸ்பிரஸ்’ நிறுவனம் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது என்றும் சிவகுமார் குறிப்பிட்டார்.

இந்த வேளையில், சிலாங்கூர் சட்டமன்ற சொந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர்ர் குணராஜ் ஜோர்ஜ் உடன் இருந்தார்.

தக்க நேரத்தில் தன் இல்லம் தேடி வந்து உதவி வழங்கிய மனித வள அமைச்சர் சிவகுமாருக்கும் சொக்சோ நிறுவனத்திற்கும் ஜான்சி ராணி நன்றி தெரிவித்துக் கொண்டார்.