LOADING

Type to search

இலங்கை அரசியல்

`சட்டவிரோத குடியேற்றங்களை தவிர்க்க` ஐ ஓ எம் – யாழ் மாவட்ட அதிபரிடம் பேச்சு

Share

நடராசா லோகதயாளன்

இலங்கையிலிருந்து கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளிற்கு தமிழர்கள் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க குடியேறிகளிற்கான சர்வதேச அமைப்பு ஐ ஓ எம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐ.ஓ.எம் தூதுக்குழுவினர் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாதசுந்தரனைச் சந்தித்து யாழ். மாவட்டத்திலிருந்து சட்டவிரோத புலம்பெயர் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினர்.

ஐ.ஓ.எம் இன் இலங்கைக்கான உதவி வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினரில் கனடா மற்றும் கானா நாட்டவர்கள் அடங்கிய குழுவினரே யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

இச்சந்திப்பின்போது சட்டவிரோதமாக புலம்பெயர் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை தடுப்பது தொடர்பிலும், யாழ்.மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, தொழில் வழிகாட்டல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக இன்றைய சூழலில் யாழ் குடாநாட்டில் இருந்து இளைஞர்கள் எதற்காக புலம்பெயர்ந்து செல்கின்றார்கள்? அதிலும் குறிப்பாக சட்டவிரோதமாக ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு- இருக்கும் பணத்தையும் இழந்து முகாம்களில் வாடி இருந்த பணத்தையும் இழந்து தாயகம் திரும்பும் சூழல் ஏற்படுவதாக ஐ ஓ எம் குழுவினர் குறிப்பிட்டனர்.

இவற்றிற்கு பதிலளித்த மாவட்ட அரச அதிபர் “இன்று நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காகவும் வேலை வாய்ப்பின்மை காரணமாகவும் அதிக இளைஞர்கள் சட்டவிரோத பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்“ என்று அவர்களிடம் தெரிவித்தார்.

இதனால் தமது மாவட்ட இளைஞர்கள் வருமானத்தை ஈட்டவும் சட்ட பூர்வமாக பயணிக்கும் வகையில் வெளிநாடுகளில் அதிகமாக என்ன வேலைவாய்ப்புக்கள் உள்ளனவோ அதற்கான பயிற்சிகளை ஐ.ஓ.எம் வழங்கி சான்றிதழுடன் தொழிலிற்காக சட்டபூர்வமாக பயணிக்கும் ஏற்பாடுகளை ஐ.ஓ.எம் மேற்கொள்ள முன் வரவேண்டும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த ஐ.ஓ.எம் பிரதிநிதிகள் ஹோட்டல் பணி, தாதியர்கள் போன்ற பணிகளிற்கு உரிய பயிற்சினையும் ஆங்கில மொழிப் பயிற்சிகளையும் வழங்க முடியுமா என முயற்சிப்பதாக பதிலளித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக பல நாடுகளிற்கு படகுகள் மூலம் சட்டவிரோதமாக பயணிக்க முயன்ற ஏராளமானோர், நடுகடலில் படகுகளில் ஏற்பட்ட பழுதுகள், அல்லது பன்னாட்டு கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு அருகிலுள்ள நாடுகளிற்கு அனுப்பப்பட்டனர்.

அவ்வகையில் கடனா செல்லும் நோக்கத்தில் புறப்பட்டு நடுகடலில் சிக்கித்தவித்த 300க்கும் அதிகமானோர் தற்போது வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஐ ஓ எம் அமைப்பு தம்மைப் பொறுப்பேற்று ஐ நாவின் அகதிகளிற்கான அமைப்பிடம் கையளிக்க வேண்டுமென்று கோரியுள்ளனர். எனினும் அது சாத்தியமில்லை என்று ஐ ஓ எம் கைவிரித்துவிட்டது.

அதேபோன்று டிகோகார்சியா, ரியூனியன் தீவுகள் ஆகிய இடங்களிலும் புலம் பெயரும் நோக்கத்துடன் வெளியேறிய தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய பின்புலத்தில் ஐ ஓ எம் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோடையே நடைபெற்ற சந்திப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.