LOADING

Type to search

இலங்கை அரசியல்

உதயன் கட்டுரையால் உதவி பெற்ற கிராமம்: ஒரு நேரடி ரிப்போர்ட்

Share

யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்

கனடா உதயனில் அண்மையில் வெளியான கட்டுரை ஒன்று வறுமை மற்றும் இயற்கை அச்சத்தின் நடுவே வாழ்ந்துவரும் பலருக்கு சில உதவிகளைப் பெற்றுத்தந்துள்ளது.நெடுங்கேணி, ஒலுமடு, காஞ்சுரமோட்டைப் பகுதியில் வசிக்கும் மக்களின் நிலை தொடர்பில் வெளிவந்த செய்தியினையடுத்து புலம்பெயர்ந்து வசிக்கும் உறவுகள் சிலர் உதவி புரிந்தனர்.

காஞ்சுரமோட்டை தொடர்பில் முதன் முதலாக ’கனடா உதயனில்’ வெளிவந்த செய்தி தொட்பில் ஊடகவியலாளர் சகிதம. நேரில் சென்று காஞ்சுரமோட்டை, ஒலுமடு, வெடிவைத்தகல் கிராமங்களினதும் அவர்களின் அவலங்களையும் நேரில் பார்வையிட்டதன் பின்னர் அங்கே வசிக்கும் குடும்பங்களிற்கு தலா 8 ஆயிரம் ரூபா பெறுமதியிலான உதவிகள் செய்தியாளர் ஊடாக ஒரு தடவை வழங்கி வைக்கப்பட்டது.

அமெரிக்காவினைச் சேர்ந்த மருத்துவர் ஜெயக்குமாரன், சிவசுப்பிரமணியம், சிறிமகிழ்காந்தன், ஆசீர்வாதம் மற்றும் சிவபாலன் மற்றும் ஹூல் குடும்பத்தினர் இணைந்து செய்தியாளர் நடராசா லோகதயாளன் ஊடாக இந்த உதவிப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

தமிழர் தாயகப் பகுதியை பாதுகாக்க வேண்டும், நில உரிமை வேண்டும் எனக் குரல் கொடுத்தாலும் இருக்கும் நிலத்தை பாதுகாப்பவர்களை திரும்பிப்பார்க்க மறந்து விடுகின்றோம் என்ற குற்றச் சாட்டு உண்மையாகவே தெரிகின்றது. இதிலே வடக்கின் எல்லைப் பகுதியை பாதுகாக்கும் நோக்கில் பெரும் வனப் பகுதியில் அடிப்படை வசதிகள் எவையும் இன்றி அல்லல்படும் இந்த மக்களின் அவலத்தை வெளியே எடுத்துவந்த நிலையில் அம்மக்களிற்கு கிடைத்த முதல் உதவி இதுவாகும்.

இப்பிரதேசத்தை சேர்ந்த 40 குடும்பங்களிறகு இந்த உதவிகள் 24ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன. இதேநேரம் இதன்போது சிறுவர்கள், முதியவர்கள், நோயாளிகள் தனியாக கவனிக்கப்பட வேண்டியவர்களாகவும் உள்ளனர்.

இங்கே வாழும் மக்கள் தமிழர்களின் எல்லையை காக்கும் எல்லைப்படை வீரர்கள்போன்று போர்க் காலத்தை ஒத்த வாழ்வினைவாழும் அல்லது வாழ்கின்ற மக்களிற்கு அவர்களின் அடிப்படை வசதிகள்கூட பூர்த்தி செய்யப்படாதமையால் வாழுகின்ற இடங்களில் இருந்து மீண்டும் இடம்பெயர்கின்றனர். காஞ்சுரமோட்டையில் குடியேறிய 41 குடும்பங்களில் 18 குடும்பங்கள் மீண்டும. வவுனியாவிற்கே திரும்பி சென்றுவிட்ட நிலையில் எஞ்சியவர்களும் தமது அவலத்தின் காரணமாக வெளியேறவே முற்படுகின்றனர். இதனால் தமிழ் மக்களின் இருப்பு, தாயக பூமி, நிலம் அபகரிப்பு என வாய் கிழிய கத்துவதில் பயன் ஏதும் கிட்டாது. அந்த அடர்ந்த காட்டின் நடுவே வாழும் அந்த மக்களிற்கு நிரந்தர தொழில் வாய்ப்பு கிடையாது, இரு குடும்பங்களிற்கு மின்சார வசதியும் இல்லை, குடிநீருக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.

இவை அனைத்திற்கும் மேலாக நாம் பயணித்த வாகனச் சாரதி அந்த மக்களின் பசி போக்கும் பொருட்கள் எனபதனால் இந்த வீதியில் வாகனத்தை செலுத்துகின்றேன் இல்லையேல் கோடி ரூபா வழங்கினாலும் இந்த வீதிக்கு வாகனத்தை திருப்பவே மாட்டன் என்றார்.

சாரதியின் இந்தவொரு கூற்றே அந்த மக்களின் அவலத்தை படம்போட்டுக் காட்டும். ஏனெனில் வீதியில் குண்டும் குழியும் அல்ல மாறாக குண்டும் குழியிலுமே அந்த பாதை காணப்படுகின்றது. இவர்களின் நிலை இதுவெனில் அங்காலே வெடி வைத்த கல் பகுதியில் வாழும் மக்கள் தினமும் காலையில் எழுந்தால் தமக்கான பணியை சிந்தித்தார்களோ இல்லையோ வீதியால் பயணிக்கலாமா, எங்கேனும் ஊடுருவல் உண்டா, யானை என்ன செய்துள்ளது எனபதனை அறிந்த பின்பே பயணிக்க வேண்டியுள்ளது.

மறுபுறம் புளியங்குளம் பகுதியில் 2004 ஆம் ஆண்டு 197 குடும்பங்கள் வாழ்ந்த மிகப் பெரிய கிராமத்தை நாம் அடைந்தபோது நெஞ்சு கனத்தது. ஆரம்ப பாடசாலை ஒன்று நெற் களஞ்சியமாகவே உள்ளது. அவ்வாறானால் அந்த கிராம மாணவர்கள் கல்வி கற்பதில்லையா, இங்கே கல்வி கற்ற மாணவர்கள் எங்கே என அருகில் இருந்த வீட்டின் முதியவரை வினாவினேன். அதற்கு ஒரு நிமிடம் மௌனம் காத்த முதியவர் தம்பி நீங்கள் எங்கிருந்து வாறீங்கள் என என்னிடம் பதில் கேள்வியே எழுப்பினார். எனக்கு ஏதும் புரியவில்லை. இருந்தபோதும் அறிமுகம. செய்தபோது செய்திக்காவது எமது கிராமத்தை எட்டிப் பார்க்கின்றீர்கள் நல்லது என்றவர் விபரத்தை கூறினார்.

இன்றைய சூழலில் இது மிகப் பெரும் கிராமந்தான் 197குடும்பங்கள் இருந்தபோது பாடசாலைகள், கூட்டுறவுச் சங்கங்கள் எல்லாம் இருந்தன. ஆனால் இன்று இருப்பது வெறும் 16 குடும்பங்கள் மட்டும்தான் என பெருமூச்செறிந்து எவ்வாறு வாழ்ந்த கிராமம் இன்று இரவானால் எந்தவொரு ஆபத்து என்றாலும் கூக்குரல் எழுப்பினால் எவருமே கிடையாது. மாறாக தொலைபேசியில் ஒலுமடுவில் வாழ்பவர்களை அழைக்க வேண்டும் அவர்களும் ஓடிவர முடியாது. ஏனெனில் யானை வீதியின் நடுவே எங்கு நிற்குமோ அதுவும் தெரியாது. பாடசாலை உண்டு ஆனால் ஆசிரியர்களும் மாணவர்களும் இல்லை. இதனால் நெல. அடுக்குவதற்காகவேனும் பயன்படுகின்றது என்றார்.

இவ்வாறெல்லாம் அணர்த்தங்களின் மத்தியில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் இந்த மக்களிற்கு நெல் மட்டும் இருப்பதனாலும் அயல் கிராமங்களில் தேங்காயை பெறமுடிவதனால் சோறும் சம்பலுமே அதக நாள் உணவாகின்றது என்பதனை உணர்ந்தோம்.

மறுபுறத்தில் இத்தனை அவலத்திலும் விவசாயத்தையும் அந்த விவசாய வேலைக்கு கூலிவேலையாக செல்வதனை மட்டுமே நம்பி வாழும் மக்கள் விவசாயத்திற்கோ அல்லது கூலி வேலைக்குச் செல்வதற்கு, பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு துவிச்சக்கர வண்டிகூடக் கிடையாது என்பதனால் கால் நடையில் பயணிக்கின்றனர். காஞ்சுரமோட்டையில் வாழும் 23 குடும்பங்களில் ஒரே ஒருவரிடம் காணம்படும் மோட்டார் சைக்கிலே அந்த கிராமத்திற்கான அவசர தேவை வாகனமாகவுள்ளது. அதுவும. பெயரிற்கே மோட்டார் சைக்கில் எப்போது கைவிடும் என்பதனை கூற முடியாத நிலை.

இத்தனை அவலங்களை சுமந்த மக்கள் எம்மை வழி அனுப்பினார்கள் என்பதனைவிட மீண்டும் வருவோம் என எதிர் பார்க்கின்றனர் என்பதே உண்மை ஏனெனில் எமக்கான மதிய உணவு அங்கே வாழும் ஓர் வீட்டிலேயே தயார் செய்யப்பட்டது.

எமது கட்டுரையை அடுத்து அம்மக்களிற்கு உதவிய அனைவருக்கும் உதயன் ஆசிரியர் பீடம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.