விநாயகர் விமர்சனம் | வில்லாதி வில்லன்களும் விழுந்த வரலாறு உண்டு
Share
(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரைத் தொடர்: பகுதி 6)
கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி
அரசியலிற்கும் சினிமாவிற்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்பது யதார்த்தம்.
இரண்டிலும் கதாநாயகர்கள், வில்லன்கள், அடிதடிகள், கொலை கொள்ளை, வன்செயல்கள், பலாத்காரம், அடிதடி, பித்தலாட்டம் என அந்த தொடர்பு பட்டியல் நீளும். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இது எந்த கதாநாயகரின் படமாக இருந்தாலும் பொருந்தும்.
இந்த இலக்கணம் அரசியல்(வியா)வாதிகளிற்கும் பொருந்தும். அவர்களும் ஒரு வகையில் வில்லன்கள் தானே?
இலங்கையில் இப்போது நாள்தோறும் அரங்கேற்றப்பட்டுவரும் அரசியல் நாடகங்கள் தமிழ் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ரசிகர்களை கதிரைகளின் நுனிப்பகுதியில் உட்கார வைத்திருக்கின்றன. அடுத்தடுத்து வில்லன் என்ன செய்யப்போகிறான் என்று பார்வையாளர்கள் பயங்கரக்கோபத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, வில்லனும் வில்லனின் சகாக்களும் செய்யும் அட்டூழியங்கள் அளவுகடந்து போய்க்கொண்டிருக்கும் நிலையில் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிகேட்டு வீதியில் இறங்க வில்லன் கூட்டம் தனது அடியாட்களைவிட்டு எதிரானவர்களை அடித்து துவம்சம் செய்வார்கள்.
இப்படி ஒரு காட்சியையே கடந்த வாரம் நாம் இலங்கையில் காணமுடிந்தது.
கொழும்பில் இடம் பெற்ற ஜேவிபியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
ஒருவர் இறந்திருக்கிறார் இன்னொருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது. ஜே வி பி மீதான மக்களின் ஆதரவு முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.
அது ஜே விபியினரின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி மக்கள் தெளிவடைந்த காரணத்தினால் ஏற்பட்ட ஆதரவல்ல. மாறாக அவர்களும் திருடர்கள் இவர்களும் திருடர்கள் இந்தத் தடவை ஜே வி பி க்காவதுகொடுத்துப்பார்ப்போம் என்று முன்னைய ஆட்சியாளர்களின் கேவலமான நடத்தையின் காரணமாக ஏற்பட்ட வெறுப்புணர்வின் வெளிப்பாடாகும்.
இந்நிலையில் இப்போது தேர்தலை நடத்தினால் யானை மொட்டுக் கூட்டணி மற்றும் கைக்காரக் கட்சி உட்பட பலரும் மண்ணைக்கவ்வ நேரிடும் என்ற காரணத்தினாலேயே ஆட்சியாளர்கள் இப்போது தேர்தல் வேண்டாம் என்கிறார்கள். ஜேவிபிக்கு இதைத்தவற விட்டால் இது போன்ற இன்னொரு பொன்னான சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்காது. எனவே அவர்கள் பெருமளவில் மக்களைத்திரட்டி ஆர்ப்பாட்டங்களைச் செய்து தேர்தலை நடத்த அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க முயல்கின்றனர். ஜனாதிபதியும் அரசாங்கமும் அவர்களது கூட்டாளிக்கட்சிகளும் எப்படியாவது தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்க அத்தனை தகிடுதித்தங்களையும் திருகுதாளங்களையும் செய்கின்றனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொடக்கம் அது நடக்குமா நடக்காதா என்ற கேள்வியிலேயே மக்களை வைத்திருந்தார்களேயன்றி நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்க என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றி கட்சிகள் சிந்திப்பதற்கு இடமளிக்கப்படவில்லை.
பொருளாதாரத்தை மீட்பது தான் முக்கியம். தேர்தலை மக்கள் கேட்கவில்லை என்றார்கள் எல்லாம் முடிந்து இறுதியில் வாக்குச் சீட்டு அச்சடிக்கப்பணமில்லை என்றார்கள் தேர்தல் ஆணையகத்திற்கு தேவையான நிதியைக் கொடுக்காமல் தடைசெய்தார்கள்.
ஆனால் நாட்டின் சுதந்திரதின வைபவத்தை ஜரூராக நடத்தவும் கண்டியில் ஜனஜய பெரஹராவை கோலாகலமாகக் கொண்டாடவும் தேவையான பணத்தை எந்த பிரச்சினையுமின்றி ஒதுக்க முடிந்துள்ளது.
முதலில் பணமில்லாததால் தேர்தல் இல்லை என்றார்கள். தேர்தலை நடத்துவதற்கு பணத்தைத்திரட்டிக்கொடுத்தாலும் அதில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்பணமில்லை என்றார் ரணிலின் வலது கரங்களில் ஒன்றாகிய ருவான் விஜேவர்தன. இலங்கை ஜனாதிபதியோ சர்வ வல்லமை படைத்தவராயிற்றே- ’ஐ’ படத்திலே சொல்வது போல் அதற்கும் மேலே சென்று பாராளுமன்றத்திலே தேர்தல் அறிவிக்கப்படவே இல்லை அறிவிக்கப்படாத தேர்தலை எப்படிப் பிற்போடுவது என்றார்.
ஆகவே தமக்கு நிலைமை பாதகமாக இருக்கும் போது தேர்தலைப் பிற்போடுவதும் உரிமைகளை மறுப்பதும் இலங்கைக்குப் புதிதல்ல. 1974இல் நடக்கவேண்டிய பொதுத்தேர்தல் 1976இற்குப் பிற்போப்பட்டு பின்னர் 1977இல் நடத்தப்பட்டு பதவியில் இருந்த மகாஜன எக்சத் பெரமுன அரசாங்கம் படுதோல்வியடைந்து மண்கவ்வியதும் வரலாறு.
அதே போல 1977 இல் கிடைத்த ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக 1982இல் நடத்தப்படவேண்டிய பொதுத்தேர்தலை நடத்தாமல் தடுக்க இந்திய நக்சலைட் தீவிரவாதிகள் இலங்கைத் தேர்தல் மேடைகளில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதால் தேர்தலை நடத்தாமல்- இருக்கிற அரசாங்கம் பதவியில் இருக்கவேண்டுமா இல்லையா என்பதற்கு மக்கள் கருத்துக்கணிப்பை நடத்தி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொண்டமையும் பலருக்கும் குறிப்பாக ஜேவிபிக்கு நன்கு தெரியும்.
ஆகவே அரசாங்கத்தின் கள்ள நோக்கங்களை அறிந்து கடுப்பாகிய ஜேவிபி மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்தது. அதனை எதேச்சாதிகார அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் போராட்டத்தைக் கலைத்ததன் மூலம் தெளிவான ஒரு செய்தி சொல்லப்பட்டுள்ளது. ஜனநாயகம், தேர்தல் பற்றியெல்லாம் எமக்கு கவலையில்லை. போராட்டம் நடத்தினால் அடித்துக் கலைப்போம். நாங்கள் நினைக்கிற போது தான் தேர்தல் நடக்கும். இப்போது தேர்தல் இல்லை. போராட்டங்களை நடத்துவதால் IMF இடமிருந்து உதவி கிடைப்பதில் தடையேற்படுத்தும் என்பதால் அடித்துக் கலைப்பதைத் தவிரவேறு வழியில்லை என்பது தான் அது.
முன்பு செய்வது போல ஒளித்துநின்று அடிக்க முடியாத அளவுக்கு ஊடகங்களின் நேரலைகள் போய்க்கொண்டிருக்க ஆர்ப்பாட்டக் காரர்கள் மீதானதாக்குதல்களும் ஊர்வலக்காரர்களின் எதிர்வினைகளும் உடனடியாகவே உலகம் முழுதும் தெரியவந்தன.
எனினும் ஒரு விடயத்தைத் தெளிவாகத் தொடர்ந்து அவதானிக்க முடிகிறது.
கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது எல்லாம் அதனை விமர்சித்த மேற்குலக ஊடகங்களும் இராஜதந்திர வட்டாரங்களும் இப்போது நடந்துகொண்டிருக்கும் ஜனநாயக விதிமீறல்கள் அடக்குமுறைகள் பற்றி கப்சிப் என்றுஇருந்து கொள்கின்றன. அதுபற்றி மூச்சு விடுவதாகக் கூடத் தெரியவில்லை.
மேற்குலகு சார்பான ஒருவர் ஆட்சியில் இருப்பதால் அவர் செய்வதெல்லாம் சரி என்று கருதும் தெரிவு செய்யப்பட்ட மறதிநோயில் (Alzheimer’s disease) உலகம் சிக்கியிருக்கிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது.
இதெல்லாம் என்ன இதைவிட இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் ரெடியாக காத்திருக்கிறது. அரசாங்கம் புதிய வரிக்கொள்கை(ள)யை அறிமுக செய்து இரண்டாவது மாத சம்பளம் போடப்பட்டிருக்கிறது. ஆபிசர் தர அதிகாரிகளெல்லாம் சம்பளத்தில் எதுவும் மிஞ்சாமல் உயர் இரத்த அழுத்தத்தினால் ஆடிப்போயிருக்கிறார்கள். இதில் மாற்றங்களை ஏற்படுத்தி மூச்சுவிட அவகாசம் தரமுடியுமா என்பது பற்றி அண்மையில் ஜனாதிபதியுடன் நடந்த பேச்சுவார்த்தை பலரும் எதிர்பார்த்தது போலவே தோல்வியில் முடிந்திருக்கிறது. எங்களுக்கு இவ்வளவு தொகை பணம் வேண்டும்; அதற்கு இந்த வரியை இப்படி அறவிட்டே ஆகவேண்டும் என்ற ஒரேயொரு நிலைப்பாட்டில் ஜனாதிபதியும் இலங்கை அரசாங்கமும் இருந்தார்களே தவிர அது நியாயமானதா அதனைச் செலுத்தக் கூடிய நிலையில் வரியிறுப்பாளர்கள் உள்ளார்களா வரியிறுப்பாளர்கள் கொண்டுள்ள பொறுப்புகள் என்ன? வரியின் பின்னர் வாழ்க்கையை நடத்தக்கூடியளவுக்கு அவர்களுக்கு தங்களது வருமானத்தில் ஏதாவது எஞ்சுமா? ஏன்பது பற்றிய எதுவிதமான கரிசனையோ அக்கறையோ கிஞ்சித்தும் இருக்கவில்லை. வெறும் ஜடங்கள் போல கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்வதும் ஐஆகு சொல்வதால் செய்கிறோம் என் பழியைத் திருப்பி விடுவதும் வெளிப்படையாகத் தெரிகிறது.
இதேபோலத்தான் 1977இல் திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தும் நோக்கில்
ரணிலின் மாமாவும் IMF நமக்கு உதவிசெய்ய வருகிறது இதனைக் கட்டாயம் நாம் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் நாம் சாப்பிடுவதற்கு IMF காசு தராது என்று பாராளுமன்றத்தில் கூறி ஆதரவு தேடினார்.
இன்றைய நிலைமை மிகமிக மோசமாகவுள்ளது. IMF கண்ணசைத்தால் தான் எந்தப்பக்கத்தில் இருந்தும் இலங்கைக்கு கடன் கிடைத்து காசு நகரும். தாம் மேற்கொள்வது பிரபலமற்ற தீர்மானங்கள் என்பது தமக்குத் தெரியுமென்றும் பிரபலமடைய வேண்டிய தேவை தமக்கு இல்லையென்றும் நாட்டுக்குத் தேவையான தீர்மானங்களையே தாம் மேற்கொள்வதாகவும் கூறுகிறார்.
எதிர்வரும் நாட்களில் போக்குவரத்து, சுகாதாரம், துறைமுகம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. ஏற்கெனவே பெரும்பாலான சேவைகள் வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் அத்தியாவசியத் தேவைகளாகப் பிரகடனப்படுத்தப்படடிருக்கின்றன. தொழிற்சங்கப் போராட்டங்களை அடக்குவதற்கு உள்ள அத்தனை வழிகளையும் அரசாங்கம் கையாளும் என்பதற்கான முஸ்தீபாக இதனைக் கொள்ளலாம்.
அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கை காரணமாக ஏராளமான வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். இதனால் நாட்டின் சுகாதாரத் துறைபாரிய நெருக்கடியை எதிர்கொள்ளுமெனவும் விமர்சிக்கப்பட்டது. இப்போது 2500 வைத்தியர்களை ஆட்சேர்ப்பு செய்யப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளியேறிச் செல்லும் விமானிகளை பதிலீடு செய்யவும் இவ்வாறான அறிவிப்புகள் வெளிவரலாம். ஆகவே அரசாங்கம் தாம் எடுத்துள்ள தீர்மானங்களை நியாயப்படுத்தவும் அதற்கு எதிராக கிளம்புபவர்களை சட்டரீதியிலும் வேறுவகைகளிலும் அடக்கி நிலைமையைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க விரும்புவதாகவே தெரிகிறது. சமூகத்தில் எழக்கூடிய எதிர்ப்புகளை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்துவதையே பெரும்பாலும் இனி அடுத்துவரும் காலங்களில் எதிர்பார்க்க முடியும்.
தொடர்ச்சியான வேலை நிறுத்தங்கள் போராட்டங்கள் என இன்னொரு ரவுண்டு நிச்சயமற்ற தன்மை தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகம். தான் எடுக்கும் உறுதியான நடவடிக்கைகள் பொருளாதார மீட்சிக்கு இட்டுச்செல்லுமென அரசாங்கம் நம்புகிறது நிலைமை வழமைக்கு திரும்பும் வரை எப்படியாவது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டால் அதன் பின்னர் மக்கள் கடந்த காலத்தை மறந்து விடுவார்கள் வழமைபோன்று அரசியலைத் தொடரலாம் என நம்புகிறார்கள்.
பொருளாதாரரீதியில் உறுதியற்ற நிலையில் உள்ள நாடுகளுக்கு IMF விதந்துரைத்த மருந்துகள் கடந்த காலங்களில் அந்நாடுகளைப் பாடாய்படுத்திக்கொண்டிருந்த நோய்களைச் சுகமாக்கிவிடுவதை அதைவிடப் பெரிய சமூக நோய்களை அங்கங்கே ஏற்படுத்தியுள்ளதையும் நாம் அவதானிக்க முடிகிறது.
ஆகவே IMF என்பது சர்வரோக நிவாரண சஞ்சீவி மருந்தல்ல. ஆகவே IMFக்கு எள் என்றால் எண்ணெய்யாக நிற்கும் ரணிலும் அவரது ஒட்டு அரசாங்கமும் இலங்கை மக்களை எங்கே கொண்டுபோய் விடப்போகிறார்களோ அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.
இலங்கையில் சினிமா மிகவும் பிரபலமில்லை என்றாலும் நடிகர்களிற்கு குறைவில்லை. ஆனால் நாட்டில் கதாநாயகர்களை விட வில்லன்களே அதிகம். அதிலும் கதாநாயகர்களாக காட்டிக்கொள்ள முனைந்த வில்லன்களில் வீழ்ந்தவர்களே மிகவும் அதிகம்
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 1
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 2
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 3
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 4