LOADING

Type to search

இலங்கை அரசியல்

மனோ சாட்சி | “ரணில்-பிரபா-கருணா-அலிசாஹிர்-மஹிந்த ஆடுபுலி ஆட்டம்”

Share

மனம் திறக்கிறார் மனோ கணேசன்

­­(கனடா உதயனிற்கானபிரத்தியேகத்தொடர் –அத்தியாயம்-6)

 

 புலிகள் அமைப்பில் இருந்து கருணாவை நீங்களா பிரித்தீர்கள்? என்று ரணில் இடமோ, அலிசாஹீர் இடமோ நான் கேட்டிருந்தால் அதைவிட முட்டாள்தனமான ஒரு கேள்வி இருந்திருக்காது.

  • புலிகளின் தலைவர், “ரணிலுக்கு சொல்லுங்கள்!” என்று எனக்கு சொன்ன செய்தியை நான் பிரதமர் ரணிலிடம் கூற வேண்டும் அல்லவா?
  • ஆறுமுகன் தொண்டமான், பெரியசாமி சந்திரசேகரன் ஆகியோரிடமும் ரணில் கதை விட்டு தகவல்கள் பிடுங்கி இருக்கலாம்.
  • பல தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், கொழும்பு-கிளிநொச்சி யாத்திரை போய் வந்தார்கள்.
  • இதில் தூரதிஷ்டசாலிகள் இரண்டு பேர். ஒருவர் ரணில் விக்கிரமசிங்க. அடுத்தவர் வேலுபிள்ளை பிரபாகரன்.

 


காலகட்டம்: -2004 – ரணிலின் போர் நிறுத்தகால ஆட்சியின் இறுதி கட்டம். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து விட்டு நான் கிளிநொச்சியில் இருந்து கொழும்பு திரும்பிய பின் பாராளுமன்றம் சென்ற முதல் நாள்.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து விட்டு நான் கொழும்பு வந்த பிறகு தான், பிரதமர் ரணில் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்.



அதற்கடுத்த நாட்களில்  பாராளுமன்றம். பிரதமர் ரணிலை, அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தேன். நான் விடுதலை புலிகள் தலைவரை சந்திப்பதற்கு கிளிநொச்சி சென்ற பொழுது, பிரதமர் ரணில் கொழும்பில் இருக்கவில்லை. 

ஆகவே அப்போது அரசாங்கத்தில் “செகண்ட்-இன்- கமாண்ட்” ஆக இருந்த அமைச்சர் கரு ஜெயசூர்யவிடம், ஜனாதிபதி சந்திரிகாவின் செய்தியை எடுத்துக்கொண்டு கிளிநொச்சி சென்று புலிகளின் தலைவரை சந்திக்கும் எனது பயணத்தை பற்றி கூறி சென்றிருந்தேன். இது ஒரு தகவல் தெரிவிப்பு மாத்திரமே. 

அவ்வேளைகளில், போர் நிறுத்த உடன்பாடு இருந்தமையால், அது சட்ட விரோதமற்ற, வழமையான நடவடிக்கையாக கணிக்கப்பட்டது. இந்த மாதிரி பல தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், கொழும்பு-கிளிநொச்சி யாத்திரை போய் வந்தார்கள்.  

ஆனால், இங்கே புலிகளின் தலைவரை கண்டு பேசியதுதான் முக்கியத்துவம் பெற்றது.    

கரு மூலமாக எனது கிளிநொச்சி பயணத்தை அறிந்த ரணில், புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான எனது சந்திப்பு பற்றி அறிய விரும்பினார்.


அதே சமயத்தில் கிளிநொச்சி சென்று வந்த, அவரது கபினட் அமைச்சர்கள் ஆறுமுகன் தொண்டமான், பெரியசாமி சந்திரசேகரன் ஆகியோரிடமும் ரணில் கதை விட்டு தகவல்கள் பிடுங்கி இருக்கலாம். அது பற்றி நான் ஒன்றும் கூறவும் இல்லை. கேட்கவும் இல்லை.

எனது சந்திப்பு பற்றி, என்னுடன் ரணிலுக்கு பேசி அறிய வேண்டிய தேவை இருந்ததை போல, எனக்கும் ரணிலுடன் இது பற்றி பேச வேண்டிய தேவை இருந்தது. 

புலிகளின் தலைவர், “ரணிலுக்கு சொல்லுங்கள்!” என்று எனக்கு சொன்ன செய்தியை நான் பிரதமர் ரணிலிடம் கூற வேண்டும் அல்லவா?

விடுதலை புலிகள் தலைவர் சொன்ன, கருணா அம்மான் தொடர்பான விடயத்தை அவர் சொன்ன மாதிரியே நான் ரணிலிடம்  சொன்னேன். 

“அலிசாஹீர் மௌலானா மூலமாக கருணா அம்மானை கொழும்புக்கு கூட்டி வந்தீர்கள். இன்று அவரை கொழும்பிலே ரகசியமாக ஒளித்து வைத்திருக்கிறீர்கள்.” என்று பிரபாகரன் கூறியதை அப்படியே ரணிலிடம் கூறினேன்.

நான் இதை சொன்ன பொழுது ரணிலின் பாராளுமன்ற அலுவலக அறையில் நானும், ரணிலும் மட்டும் தான் இருந்தோம். மேசையின் அந்த பக்கம் ரணில் அமர்ந்திருக்க இந்த பக்கம் இருந்து நான் சொன்னேன். 

ரணில், என் முகத்தை சற்று நேரம் உற்று பார்த்துக்கொண்டு இருந்தார். பிறகு, பிரபாகரனின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்தார். 

புலிகள் இயக்கத்தில் உட்கட்சி முரண்பாடு, உள்சண்டை, கருணா அம்மான் பிரபாகரனுடன் முரண்பட்டார்- பிரபாவும் கருணாவை வன்னிக்கு அழைத்து கைது செய்ய முடிவு செய்தார். பிறகு சண்டையிட்டு கொண்டார்கள். இதுவே தனக்கு கிடைத்த புலனாய்வு அறிக்கை என ரணில் என்னிடம் சொன்னார். 

“இவர்கள் பிரிந்துக்கொண்டதற்கு  நான் என்ன செய்ய முடியும்?” என்று என்னிடம் கேட்டார். 

அதானே! இவர் என்ன செய்ய முடியும்? அவர்கள் பிரிந்த பிறகுதானே இவர் அவர்களை வைத்து நன்றாக செய்தார், என நான் என் மனதில் நினைத்துக் கொண்டேன். 

இப்பொழுது எனது சந்தர்ப்பம். நான் சற்று நேரம் ரணில் முகத்தை உற்று பார்த்துக்கொண்டு இருந்தேன். 

“அப்படி இல்லை, இப்படி இல்லை” என்று மறுத்து நாட்டின் பிரதமருடன் விவாதம் செய்ய வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை. மேலும் மிகவும் கிளர்ச்சிகரமான அவ்வேளையில் அது எனக்கு வேண்டாத வேலையும்கூட. 

“எனக்கு தெரியாது. பிரபாகரன் அப்படித்தான் சொன்னார். உங்களுக்கு சொல்ல சொன்னார். சொல்கிறேன்” என்று கூறிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேற தொடங்கினேன்.

அமைதியாக அமர்ந்திருந்த ரணில், கதவு பிடியில் கைவைத்து கதவை திறக்க முற்பட்ட என்னை அழைத்து, அவரது ஆசனத்தில் அமர்ந்திருந்தபடியே “உண்மையிலேயே பிரபாகரன் அவ்வாறு கூறினாரா?” என்று கேட்டார். 

நான் கதவுக்கு அருகில் நின்ற படியே “ஆம்!” என்று வார்த்தையாலும், தலை அசைத்தும் கூறிவிட்டு பிரதமர் அறையில் இருந்து வெளியேறினேன்.

அடுத்த நாள் முதல் சில சம்பவங்கள் கொழும்பில் நடந்தன. 

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் எம்பீயாக இருந்த அலிசாஹீர் மௌலானா தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அவர் சடுதியாக நாட்டிலிருந்து வெளியேறினார். இந்த முடிவுகளுக்கு பின்னால் பிரதமர் ரணில் இருந்ததை நான் ஊகித்துக்கொண்டேன்.

அப்போது அலிசாஹீர், ஐக்கிய தேசிய கட்சியின் நேரடி உறுப்பினர். அவரது தலைவர் ரணில் விக்ரமசிங்க. பிற்காலத்தில் அலிசாஹீர், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். அப்போது அவரது தலைவர் நண்பர் ரவுப் ஹக்கீம். சமீபத்தில் அலிசாஹீர் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்.  எனவே அவரது தலைவர் நண்பர் சஜித் பிரேமதாச. கடைசி செய்தியாக இப்போது அலிசாஹீர் மௌலானா மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகி விட்டதாக அறிகிறேன்.  இப்போது அவரது தலைவர் மீண்டும் நண்பர் ரவுப் ஹக்கீம் என எண்ணுகிறேன்.  

பாவம், அலிசாஹீர். அரசியல் அலைகளால் பலமுறை அலைகலைக்கப்பட்டார். அது இன்னமும் தொடர்கிறது. அவர் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினராகவே இனி இருப்பது அவருக்கு நல்லது என நான் நினைக்கிறேன். 

கடந்த நல்லாட்சி அரசின் இறுதி வருடத்திலேயே, அலிசாஹீர் எனது அமைச்சின் பிரதி அமைச்சராக சில மாதங்கள் ஜனாதிபதி மைத்திரிபாலவால் நியமிக்கப்பட்டார். அப்போது எனக்கும், அவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. 

என்றாலும் நான் நேரடியாக அவரிடம் “நீங்களா கருணா அம்மானை புலிகள் அமைப்பில் இருந்து பிரித்து கொழும்புக்கு அழைத்து வந்தீர்கள்?” என்று ஒருபோதும் கேட்கவே இல்லை. 

“புலிகள் அமைப்பில் இருந்து கருணாவை நீங்களா பிரித்தீர்கள்?” என்று அலிசாஹீர் இடமோ, ரணில் இடமோ நான் கேட்டிருந்தால் அதைவிட முட்டாள்தனமான ஒரு கேள்வி இருந்திருக்காது.

புலிகளின் கிழக்கு தளபதி கருணா அம்மான் அரசியல் தெரியாத பாப்பா கிடையாது. புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரனும் அரசியல் குழந்தை இல்லை. ஆக அவர்களது அமைப்பிற்குள்ளே அவர்கள் இருவரும் முரண்பட்டுக்கொண்டார்கள். ஆகவே புலிகளின் தலைவர் தனது கிழக்கு மாகாண தளபதியை தனது அமைப்பில் இருந்து வெளியேற்றினார். இதையே கருணா அம்மானிடம் கேட்டால், அவர் என்னை வெளியேற்றவில்லை, நானே தான் வெளியேறினேன் என்று கூறுவார்.

எது எப்படி இருந்தாலும் கூட, விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகிவிட்ட கருணா அம்மானை அலிசாஹீர் கொழும்புக்கு அழைத்து வந்தார், என்பது நம்பத்தகுந்த தகவல். அலிசாஹீர் மௌலானாவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கருணா அம்மானின் குடும்பத்துடன் தொடர்புள்ளவர், என்ற காரணத்தினாலேயும், கருணாவும், அலிசாஹீரும் ஒரே மட்டக்களப்பு மாவட்டகாரர்கள் என்ற முறையிலும் இந்த சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம்.

புலிகள் இயக்கத்துடன் போரும், சமாதானமும் செய்த, இலங்கை நாட்டின் பிரதமர் என்ற முறையிலே ரணில் விக்கிரமசிங்க, கருணா அம்மான் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிவதை விரும்பிதானே இருப்பார். ஆகவே பிரிந்த கருணாவை, தனது எம்பீ மௌலானா ஊடாக, பத்திரமாக கொழும்பிற்கு கொண்டு வந்திருப்பார். இது பின்நாட்களில் கருணா அம்மானை பயன்படுத்தி புலிகளைத் தோற்கடிக்க ராஜபக்ச அரசாங்கத்திற்கு வழி சமைத்தது.

இதிலே துரதிஷ்டசாலிகள் இரண்டு பேர். ஒருவர் ரணில் விக்கிரமசிங்க. அடுத்தவர் வேலுபிள்ளை பிரபாகரன்.



தானே புலிகளின் பிரதான தளபதியை பிரித்து, புலிகளை பலவீனப்படுத்தி, அவர்கள் தோல்வியடைவதற்கு பெரும் காரணகர்த்தா என்று தன்னை  சிங்கள மக்கள் மத்தியிலே சந்தைப்படுத்திக்கொள்ள ரணில் விக்ரமசிங்கவினால் முடியவில்லை. இது ரணிலின் துரதிஷ்டம். 

அதே போல ரணில் மீது கோபம் கொண்டு அவரை தோற்கடித்து அதன் மூலம் கொழும்பிலே ஒரு சிங்கள தேசியவாத அரசாங்கம் உருவாகினால்தான் தமிழ் ஈழத்திற்கான தனது பயணம் இலகுவாகும், என புலிகளின் தலைவர் தவறாக கணக்கு போட்டுவிட்டார். இது பிரபாகரனின் துரதிஷ்டம்.

இங்கே அதிர்ஷ்டசாலி யார்? 

சந்தேகம் இல்லாமல் மஹிந்த ராஜபக்ச தான். 

பிரபாகரன் கட்டளையிட்டு ரணிலுக்கான வாக்குகளை தடுக்க, அதன்மூலம் சுலபமாக ஆட்சிபீடம் ஏறிய மஹிந்த,  ரணில் கஷ்டப்பட்டு கொழும்பிற்கு கொண்டு வந்த கருணாவை தனது போர் வியூகங்களுக்கு பயன்படுத்தி வென்றார். 

ஆகவே, மஹிந்த பெரும் அதிஷ்டசாலியென்பதை போல இந்த நிகழ்வுகளின் ஏனைய இரண்டு பிரதான பாத்திரங்களான ரணிலும், பிரபாகரனும் துரதிஷ்டசாலிகள் என்று கூறினேன். 

அப்போது, துணை பாத்திரங்களான,  கருணா அம்மானும் அலிசாஹீர் மௌலானாவும்?  இவர்களும்கூட இரண்டு துணை தூரதிஷ்டசாலிகள்தான்.  இருக்கும் இடங்களில் இருந்திருந்தால் செளக்கியமாக இருந்திருக்கும்.