LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஒன்றிணைந்த தேசம்? தென்னிலங்கையர் ஒருவரின் வடக்குப் பயணம்

Share

சுநேர பண்டார

கொழும்பிலிருந்து வடக்கு நோக்கிய எனது இரண்டு நாள் பயணம் மிகவும் அலுப்பாகவும் கண் திறப்பாகவும் இருந்தது. வலி சுமந்த பெரிய விடயங்களை பெரும் வேதனையின் மூலமே உணர முடியும் என்று கூறினாலும், எந்த சூழ்நிலையும் அதன் தீமைகள் இல்லாமல் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு, நாட்டின் வடக்கில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள வடக்கு நோக்கி பயணத்தின் போது, எனக்கு ஒரே மாதிரியாக இராணுவமயப்படுத்தப்பட்ட ஒரு சூழல் எப்படியிருக்கும் என்று கூறப்பட்டது போன்றே இருந்தது.

நாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைவதில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை, ஏனென்றால் அங்கு நேராகச் செல்வதற்கான ஒரு பாதையாக அந்த வழி இருந்தது. இடையே அனுராதபுரம் வழியாகச் செல்லும் போது அங்குள்ள புகழ்பெற்ற விகாரையில் சற்று நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பிறகு, ஒரு சாத்திரக்காரன் கூறியதற்கு மாறாக எமது பயணம் சிக்கல் இல்லாமல் இருந்தது. வவுனியாவிற்கு வருவது எதிர்பாராதவிதமாக வித்தியாசமாக இருந்தது.  

வடக்கிற்கான எங்கள் பயணத்தை விவரிக்க வேண்டுமென்றால் நான் அதை குறிப்பாகச் சுட்டிக்காட்ட வேண்டும். சர்வதேசத்தின் பார்வையில் வடக்கு-தெற்குப் பிளவு என்பது வெளிப்படையாக தெரியாத ஒரு கற்பனையாகவே இருக்கிறது, ஆனால் அது உடல் மற்றும் உளரீதியில் உண்மையே. 

தெற்கு மாகாணங்களைப் பார்க்க வடக்கு முற்றிலும் மாறான ஒரு பிரதேசம். நான் ஏதோ மிகைப்படுத்திச் சொல்கிறேன் என்று நீங்கள் கருதலாம்-எனவே தயவு செய்து தொடர்ந்து வாசிக்கவும். 

வவுனியாவில், ஈர்க்கும் வகையிலான கவலை என்பது இடிபாடுகள் மட்டுமின்றி, வடக்கில் பொதுமக்களிடையே ஒருங்கிணைப்பு இன்மையும், அங்கு தெளிவாக தமது எல்லைகளை மீறும் வகையிலும் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தின் மத்தியில் அவர்கள் நடமாட வேண்டியுள்ளது. வலிந்த இராணுவமயமாக்கலே அங்கு ஒருங்கிணைப்பை கொண்டுவர முடியும் என்கிற நம்பிக்கை அதற்கான காரணமாக இருக்கலாம். அங்கு ஒருங்கிணைப்பு இல்லாததால் இந்த நிலை இல்லை, மாறாக அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்தின் மீதான அவநம்பிக்கை காரணமாகவே இந்த நிலை உள்ளது.

 வவுனியா பேருந்து நிலையம் குப்பைகூளம் நிறைந்து காணப்படுகிறது. அதற்கு நேர் எதிராக இராணுவ வீரன் ஒருவரின் சிலை உள்ளது. ஆனால் மக்களோ தமக்கும் அதற்கும் தொடர்பில், வானிலுள்ள மேகங்களில் மேலும் ஒன்று என கடந்து போகின்றனர். அது தான் வவுனியா. 

முல்லைத்தீவை அடைந்தவுடன் இராணுவ கட்டமைப்புகள் மேலும் தெளிவாகத் தெரிந்தன. அவற்றைச் சுட்டிக்காட்டுவதே ஒரு வேலையாகப் போய்விட்டது என்பதே உண்மை. வடக்கில் இராணுவப் பிரசன்னம் பற்றி அறிந்திருந்த நான் அது ஒரு கேலிச்சித்திரத்தில் வருவது போன்று சில இராணுவ வீரர்கள் முகாம்களில் மட்டுமே இருப்பார்கள் என்பதாகவே எனக்குள்ளிருந்தது. வன்னியில் பரந்து விரிந்திருக்கும் இராணுவ முகாம்களை நீங்கள் காணும் போது உங்களை நீங்களே கிள்ளிப்பார்க்க வேண்டும். அது இயல்பானது இல்லை. 

நான் அங்கிருந்த முதல் நாளில் மூன்று பேருடன் உரையாடினேன் – காணாமல் போனவர்களைத் தேடி அலையும் அம்மாக்கள் அமைப்பு, நில அபகரிப்பிற்கு எதிராகக் குரல் கொடுத்த உள்ளூராட்சியின் ஒரு பிரதிநிதி மற்றும் அதே மாவட்டத்தின் மீனவர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர். அங்கு இராணுவமே பிரச்சனைகளிற்கு காரணம் என்று அவர்கள் அனைவருக்கும் குறைபட்டனர். அந்த மீனவர் கவனத்தை ஈர்க்கும் கதை ஒன்றைச் சொன்னார், பெருநிறுவன ட்ரோலர் படகுகள் போன்றவை இலங்கை கடற்பரப்பில் அனுமதிக்கப்பட்டதன் விளைவாக சராசரி தமிழ் மீனவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார சவால்கள் குறித்து பேசினார்.  தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல்களே இதற்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஒட்டுமொத்தச் சூழலில் என்னை மிகவும் உறுத்தியது துரோகத்தின் அளவு தான். ஆனால், உணர்ச்சிகளிற்காக இப்போது வார்த்தைகளை வீணாக்க மாட்டேன். இவை உண்மைகள் மட்டுமே. இருட்ட ஆரம்பித்ததும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள தேவாலயம் ஒன்றைச் சென்று பார்த்தோம். அதில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் கரும்பலகையில் பொறிக்கப்பட்டிருந்தன. கடற்கரையோரம் முழுவதும் படகுகள் நிறைந்திருந்தன. சாலைகளில் இருந்த வெறுமை உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அங்கு பூனைகள் குறைவாக இருப்பது பற்றி நான் பகடியாகக் கூறினேன். இயல்பான கற்பனைக்கு எட்டாத வகையில் நாட்டின் இப்பகுதியில் பிரச்சனைகள் இருப்பதாகத் தோன்றுகிறது.

காலை உள்ளூர் தொடர் உணவுக் கடையான அம்மாச்சிக்கு சென்றோம். பெண்கள் வலுவூட்டலில் ஒரு வகையாக அது உள்ளது ஏனென்றால் பெரும்பாலான சமையல் வேலையை செய்பவர்கள் பெண்கள் என்று எனது சகா ஒருவர் கூறினார். அதன் முக்கியத்துவத்தை நான் கவனிக்கத் தவறிவிட்டேன் என்று கருதுகிறேன்- அதாவது அங்கு ஆண்கள் குறைவாக இருக்கின்றனர். 

இரண்டாவது நாள் ஒரு பெண்மணியை சந்தித்தேன். அவரது கணவர் மற்றும் மகன் காணாமல் போயுள்ளனர். அவர் தொடர்ந்து தனது குடும்ப உறுப்பினர்களை, அதிலும் குறிப்பாக தனது பாலகனை இராணுவம் அழைத்துச் சென்றது பற்றி தொடர்ந்து கேள்வி எழுப்புகிறார். போர் முடிந்த நிலையில் தானே விரும்பி அவர்களை இராணுவத்திடம் கையளித்ததாக அவர் கூறுகிறார்.

தான் அப்படிச் சொல்ல வேண்டும் என்று யாரும் வற்புறுத்தவில்லை என்று அவர் கூறினாலும், தனது மகனை அதற்கு பின்னர் அவர் பார்க்கவில்லை.  அரசு பதில்களை ஏதும் அளிக்காத நிலையிலும் அதற்கு தாங்கள் காரணமல்ல என்று கூறிய நிலையிலும், பலவிதமான அதிகாரப் படிநிலைகளின் மத்தியில் அவர் தொடர்ச்சியாக தனது மகனை கண்டுபிடிக்க முயன்றார். ஆனால் மீண்டும் அந்த ஒரே பொய்யே கூறப்பட்டது. 

அது அவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு பகடியாகவே மாறிவிட்டது. அதேவேளை இராணுவம் தமது அளப்பரிய புணர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து மக்களை நம்ப வைக்க பெரியளவில் நேரத்தை செலவிட்டது. அப்படியான எண்ணங்கள் கூறப்பட்டாலும், யதார்த்தத்தில் எம்மால் அப்படியான புணர்வாழ்வு நடவடிக்கைகள் எதையும் காண முடியவில்லை. 

அன்றைய தினம், வடக்கே தமிழ் மக்களின் உரிமைகளிற்கான செயற்பட்டு வந்த ஒரு ஒரு புகைப்படக் கலைஞரின் இறுதிக் கிரியைகளில் என்னால் பங்குபற்ற முடிந்தது. அவரது இறுதிக் கிரியை அவரது குடும்ப வீட்டிற்கு தொலைவில் நடைபெற்றது. சேற்றுப்பாதை ஊடாக அங்குச் செல்ல வேண்டியிருந்தது. தொடர்ச்சியாக பல மணித்தியாலங்கள் மழை பெய்ததால் மக்கள் அந்த சேற்றின் ஊடாகவே நடந்து சென்று பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியிருந்தது. 

எனது அஞ்சலியைச் செலுத்த உயிரிழந்தவரின் குடும்ப வீட்டிற்கும் சென்றேன். அங்கு இரங்கல்களைத் தெரிவிக்கும் வகையில் இருந்த சுவரொட்டிகளில், நாட்டின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரான விமல் வீரவன்சவின் பெயரும் இருந்தது. அப்படியான உணர்சிகள் மிகுந்த தருணத்தில் கூட எந்த அரசியல்வாதியும் அந்தச் சூழலில் ஆதாயம் தேடுவதற்கான வாய்ப்பை இழப்பதில்லை.  

அதேவேளை வடக்கின் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை என்னை மிகவும் ஈர்த்தது- அதில் அமானுஷ்ய அழகிருந்தாலும் சில வேளைகளில் அச்சுறுத்துகிறது. வெறுமையாக இருந்த நீண்ட சாலைகளில் குறைவான மனிதர்களே இருந்தனர். அங்கு நாளாந்தம் ஜனநெருக்கடியின் அடர்த்தி குறைந்து வருகிறது. எனினும் விலங்கினங்கள் இங்கும் அங்கும் அலைகின்றன. அனைத்து வகையான பறவைகளும் சாலையில் மிக நெருக்கமாக கூடுகின்றன. மனிதர்களைக் கண்டு பறந்துவிடும் பறவைகள் மனிதர்களின் குடியிருப்புகளுக்கு இவ்வளவு நெருக்கமாக ஏன் வருகின்றன என்று நான் வியந்தேன். இதற்கான பதில் அங்கு ஜனநெருக்கடி குறைந்து வருவதே. முல்லைத்தீவு ஒரு பாழடைந்த நகர், அங்கு ஒரு மூலையில் போர் வலையமல்லாத ஒரு பகுதியாக ஒரு இந்து கோவில். அங்கு இராணுவத்தினர் பிரார்த்தனை செய்ய வருவார்கள் என்று கூறப்பட்டது. 

எனது மூன்றாவது மற்றும் பயணத்தின் இறுதி நாளன்று, ஒரு விவசாயி மற்றும் அவரது மனைவியைச்சந்தித்தேன். ஒரு காலத்தில் அவர்களுக்கு சொந்தமாக இருந்து இப்போது  இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிக்கு எதிரேயுள்ள ஒரு இடத்தில் வசிக்கின்றனர். ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன், அதாவது இந்த சட்டங்கள் எதுவும் மணனில் எழுதப்பட்டவை அல்ல. அவை பழக்கத்தின் மூலம் அச்சத்தின் காரணமாக வந்த வழக்கமாகிவிட்டது. இராணுவம் எப்படிச் செயல்பட வேண்டும் என்ற முறையை வரையறுக்கும் தனியான சட்டரீதியான கட்டமைப்பு ஏதுமில்லை. மாறாக, தீயநோக்கம் கொண்ட கெடுபிடிகள், ஆக்ரோஷமான அச்சுறுத்தல்கள் ஆகிய கலவைகளை உள்ளடக்கிய இராணுவத்தின் தேவைகள் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் தம்மை ஒடுக்கிக்கொண்டு வாழும் நிலையில் பொதுமக்கள் உள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளை மற்றும் அவர்களுடன் எப்படி ஒத்துழைக்க வேண்டும் என்பதற்கு சட்ட வரையறை ஏதுமில்லாததால், இராணுவத்தால் காத்திரமாக எதையும் செய்துவிட்டு அதிலிருந்து தப்பிக்க முடிகிறது. 

இராணுவத்தினர் எப்படி தமது நிலங்களை அபகரித்தனர் மேலும் அதன் வளங்களைப் பயன்படுத்துவதற்கு இழப்பீடு அளிக்காமல் உள்ளனர் என்று கூறியத்கோடு மட்டுமின்றி தெற்கிலிருந்து காட்டு யானைகளை வடக்கிற்குள் கொண்டுவந்து விடுவதற்கு எடுத்த பெரும் முயற்சிகள் பற்றியும் கூறினர். இந்த காட்டு யானைகள் அந்த விவசாயி மற்றும் அவரது மனைவி போன்றவர்களின் வாழ்வாதாரங்களை குழப்பியடித்து நேரடியாக சுற்றுச்சூழல் கட்டமைப்பை பாதிக்கின்றன என்பது பற்றிய குற்றச்சாட்டை முன்வைத்தனர். அடுத்த நாள் காலை உணவு தயாரிக்கும் போது முதல் நாள் இரவு மிஞ்சிய சோற்றில் துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்ததைக் கண்டதாக அந்த விவசாயியும் அவரது மனைவியும் எம்மிடம் கூறினர். இது ஏதோ எதேச்சையாக நடைபெற்ற சம்பவமாக இல்லை, அச்சுறுத்தும் ஒரு காரணியாகவே உள்ளது.  மேலும் தமிழ் மக்கள் எல்லைகளை மீறாமல் இருப்பதற்காக அச்சுறுத்தி வைக்கும் மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒரு உளவியல் நடவடிக்கையாகவே உள்ளது. அந்த உணவகத்திற்கு மூன்றாவது நாளன்றும் சென்ற போது, எம்மை குறைந்தது ஐந்து வித்தியாசமானவர்கள் அவதானித்தனர். இருவர் சீருடை அணியாத பொலிசார் மற்றவர்கள் சமூகத்தில் நடைபெறுவதை கூறும் உளவாளிகள்.

பிரபலமான மத வழிபாட்டு இடமொன்றிற்குச் சென்ற போது, தமிழ் மக்களின் உரித்துக்கள் குறித்து இராணுவம் எதுவும் கவலைப்படுவதில்லை என்பதை நான் அவதானித்தேன். அதேவேளை கடலிற்கு நேர் எதிராக உள்ள மற்றுமொரு கோவிலில் அரச மரம் ஊன்றப்பட்டு பௌத்த கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. அந்த கோவிலிற்கு பொறுப்பான பிக்கு அங்கு அமர்ந்துள்ளார். அந்த இந்து கோவிலில் இருந்த தெய்வச்சிலைகள் அதன் பூசகரின் அனுமதியின்றி அங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்து கோவிலிருந்து கடவுளின் விக்ரகம் ஒன்று அகற்றப்படும் போது செய்யப்படும் வழக்கமான மதச்சடங்குகளும் இடம்பெறவில்லை. இந்த குறிப்பிட்ட இடத்தில் சிங்கள பௌத்த சின்னங்கள் ஏதும் இல்லாத நிலையிலும், அது அவ்வாறு இருந்தது என்று கோரும் வகையில் சிங்கள பௌத்தர்கள் அங்கு வர முடிவு செய்தனர் என்ற கதை ஒன்று கூறப்படுகிறது.

நன்றி கூறி விடைபெறுவதில் நான் சிறந்தவன் இல்லையென்றாலும், புறப்படும் போது எனக்குள் மனவருத்தம் ஏற்பட்டது. எனினும் விரைவாக இப்படியான சந்திப்புகள் மீண்டும் இடம்பெறும் என்ற நம்பிக்கையும், அந்த நட்பு பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சாட்சியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இன்று வடக்கில் தமிழர்கள் எதிர்கொள்வது கலாச்சாரம் மற்றும் உடல்ரீதியாக முற்றானதும் திட்டமிட்ட இனப்படுகொலையாகும் . போரின் இறுதியில் இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றது என்று நான் நம்பவில்லையென்றாலும், அந்த இனப்படுகொலை இப்போது நடைபெறுவதாக நம்புகிறேன். “இனப்படுகொலை நடைபெறவில்லை” என்ற வாதம் வடக்கை கொடூரமான வகையில் வலிந்து ஆக்கிரமிப்பதை நியாயப்படுத்துவதற்கு வழி செய்துள்ளது. அங்குள்ள ஒவ்வொரு தமிழரும் மரபணு ரீதியாக பயங்கரவாத சந்தேக நபர்கள், அவர்கள் விடுதலைப் புலிகளை மீண்டும் உயிர்ப்பிப்பார்கள் என்று இராணுவம் முத்திரை குத்தியுள்ளது. அதுவே சர்வதேசக் குழுக்களும் பரப்புரையாளர்களால் முன்னெடுக்கப்படுவதால் அங்குள்ள மிகவும் முக்கியமானதும் மற்றும் தொடர்ச்சியான விஷயங்கள் கவனத்தை சிதறடித்துள்ளன. வடக்கில் முக்கியமான பிரச்சனை இராணுவமயமாக்கலும், அதன் மூலம் வடக்கில் வாழும் தமிழர்கள் மீது முன்னெடுக்கப்படும் கலாச்சார மற்றும் உடல்ரீதியான இனப்படுகொலையே. அங்கு விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்வதற்கான  உண்மையாக எந்த ஆதாரத்தையோ ஒரு சிறு துளிகூட என்னால் காண முடியவில்லை. 

அவ்வளவு பெரிய இராணுவப் பிரசன்னம் இருக்கையில் அங்கிருக்கக் கூடிய தமிழர்கள் எப்படியாவது வாழ வேண்டும் என்று எண்ணுவார்களே தவிர தமக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொள்ள விரும்பமாட்டார்கள் என்று நீங்கள் முன்கூட்டியே கணிக்கக் கூடும். ஆனால் இராணுவம் தொடர்ச்சியாக வடக்குப் பகுதியில் மறைமுகமாக பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது என்று சித்தரிப்பதும், யுத்த காலத்தில் இடம்பெற்ற தீவிரமான பிரச்சாரமும் இந்த போலி தேசியவாத முழக்கத்தை முன்னெடுக்க வழிவகுக்கிறது. 

ஆனால் உண்மையில் வடக்கில் வலிந்து சிங்கள மக்களை மறைமுகமாக குடியமர்த்தும் நோக்கத்தின் மூலம் மக்கள் மக்கள் தொகை நிலையை பித்தலாட்டத்தின் மூலம்- வெளியேறுங்கள், ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளுங்கள் அல்லது செத்து மடியுங்கள் என்கிற வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

புராண காரணங்கள் அல்லது வேறு எந்த நோக்கமாக இருந்தாலும் சரி அல்லது அரசு உண்மையாக வடக்கின் பொருளாதார நிலையை மீண்டும் புத்துணர்ச்சி செய்ய விரும்புகிறதா என்பது இன்னும் தெரியாத நிலையில், வடக்கை இராணுவம் மட்டுமே ஆட்சி செய்கிறது தெற்கை மட்டுமே அரசு ஆட்சி செய்கிறது என்பதைக் கூட அரசு ஒப்புக்கொள்வது கூட இல்லை. இந்த தீவில் தெற்கும் வடக்கும்  நிலத்தின் மூலமே தொடர்பிலுள்ளது என்கிற காத்திரமான உண்மை நிலவும் போது, ”ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற மாயத்தோற்றத்தின் மூலம் அதை இணைக்கப்படுகிறது என்ற வாதம் வைக்கப்படுகிறது. ஆனால் இந்த உண்மை ஒப்புக்கொள்ளப்படுவதில்ல.

 

புவியியல் ரீதியாக அவை ஒரே நிலப்பரப்பில் இருந்தாலும், சட்டரீதியாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தெற்கே நீங்கள் மேற்கத்திய உல்லாச கலாச்சாரம், கேளிக்கைகள், சிறந்த ஹொட்டல்கள் ஆகியவற்றை அனுபவிக்கலாம். ஆனால் வடக்கிலோ ”மனிதாபிமான நடவடிக்கை” என்று கூறப்பட்ட நடவடிக்கையில், இராணுவம் மட்டுமே வெற்றிபெற்ற நிலையில் போரின் வடுக்கள் மற்றும் போர்க்காலத்தில் நிகழ்ந்த கொடூரங்களின் காட்சிகளை மட்டுமே நகைமுரணாக பார்க்க இயலும். அவையே நல்லெண்ணத்தின் சமிஞ்கைகள் என்று எமக்குச் சரியாக நினைவூட்டப்படுகிறது. 

இன்று வடக்கைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து திரும்பிய பிறகு அதை இஸ்ரேல் மற்றும் பாலஸ்த்தீன சூழலுடனேயே என்னால் ஒப்பிட முடிகிறது. சூழல்கள் தனித்துவமாக இருந்தாலும், 

இராணுவ வர்க்கம் மற்றும் சாதாரண பொதுமக்கள் ஆகிய இருவருக்குமிடையிலான கலாச்சார பரிமாற்றத்தில் பொதிந்துள்ள கருத்துக்கள் மற்றும் எண்ணங்கள் வடக்கில் நிகழும் நிகழ்வுகளுக்கு உண்மையாக மிகவும் ஒத்ததாக உள்ளது. ”இராணுவம்” மற்றும் “தமிழர்கள்” என்கிற வார்த்தைகளை “யூதபேரினவாத” மற்றும் “ஹமாஸ்” என்று மாற்றிப்பாருங்கள், ஒரு பிளவுபட்ட தேசத்தை அடைவதற்கான நிகழ்வுகளை வரிசைப்படுத்த முடியும். ஆனால் அது பரவாயில்லை; போர்க்காலத்திற்கு பிறகு நாம் இறுதியாக முழு அளவில் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளோம் மேலும் அதனால் தான் மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவுசெய்து சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது- ஏனென்றால் நாடு முழுவதும் இணைக்கப்பட்டு சுதந்திரமாக உள்ளது மற்றும் அந்த உண்மையை நாம் ஏற்க வேண்டும் என்று எமது அரசால் தொடர்ச்சியாகக் கூறப்படுகிறோம். நீங்கள் இப்போது ஒரு பிரிவினைவாதி என்று அழைக்கப்பட விரும்பமாட்டீர்கள் தானே?

இந்த எழுத்தாளர் சட்டம் படித்த ஒரு பட்டதாரி. அவர் சர்வதேச  மனித உரிமைகள் சட்டம், சமகால நடப்புகள், புவிசார் அரசியல், புலனாய்வு ஊடகத்துறை மற்றும் ஆவணப்படத் தயாரிப்பில் ஆரவமுள்ளவர்

 

 

இந்த கட்டுரையில் இருக்கும் கருத்துக்களும் எண்ணங்களும் இதை எழுதியவருடையது, மேலும் அது இந்த வெளியீட்டாளரின் கருத்துக்களைப் பிரதிபலிக்கிறது என்பதாக புரிந்துகொள்ளப்படக் கூடாது