LOADING

Type to search

இலங்கை அரசியல்

ரணில் எப்போது தேர்தலை வைப்பார்? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

Share

அண்மை காலங்களில் ஊர்வலங்கள் போராட்டங்களுக்காக அதிகளவுக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது ஜேவிபிதான் என்று தனியார் பேருந்துகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்திருக்கிறார். தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்களின் உணர்வுகளை அதிகம் பிரதிபலிக்கும் ஒரு கட்சியாக ஜேவிபி தோற்றம் பெற்றுள்ளது. அதை வைத்து ஜேவிபி வருங்காலங்களில் நடக்கக்கூடிய தேர்தல்களில் ஒரு பிரதான கட்சியாக மேல்நிலைப் போகிறது என்ற எதிர்பார்ப்பு சிங்களம் மற்றும் தமிழ் அவதானிகளில் ஒரு பகுதியினர் மத்தியில் உண்டு.

தென்னிலங்கையில் தன்னெழுச்சி போராட்டங்களின் பின்னணியிலும், அதற்குப் பின்னரான ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியிலும் ஜேவிபியின் கை மேலோங்கி வருவது பரவலாகத் தெரிகிறது. ஆனால் அதன் பொருள் ஜேவிபி ஆட்சியைப் பிடிக்கும் ஒரு வளர்ச்சியை அடைந்து விட்டதா? ஒரு தனிக் கட்சியாக தன்னால் சாதிக்க முடியும் என்று ஜேவிபி நம்புவதாக தென் இலங்கையில் உள்ள தொழிற்சங்க வாதிகள் கூறுகிறார்கள்.ஆனால் அந்த நம்பிக்கை ஒரு மிகை மதிப்பீடு என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள்.

சஜித் பிரேமதாச தன்னுடைய தலைமைத்துவத்தை நிரூபிக்க தவறியிருக்கும் ஒரு பின்னணியில், சிங்களப் பொதுமக்கள் மத்தியில் ஜேவிபிக்கு ஒப்பீட்டளவில் கவர்ச்சி அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை. இம்முறை அக்கட்சி ஒப்பிட்டுளவில் அதிக வெற்றிகளைப் பெறக்கூடும். ஆனால் அதற்காக ஜேவிபி பிரதான எதிர்க்கட்சியாக மேலெழ முடியுமா என்பது சந்தேகந்தான்.

சில சமயங்களில் எதிர்க்கட்சிகள் பலமான ஒரு திரட்சியாக உருவாகாத வெற்றிடத்தில் நடக்கக்கூடிய எந்த ஒரு தேர்தலிலும் வாக்குகளை எதிர்க்கட்சிகள் சிதறடிக்கும்.அப்பொழுது வேண்டுமானால் ஜேவிபி ஒப்பீட்டளவில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக மேலெழக்கூடும்.

மேலும், உள்நாட்டு யதார்த்தம் ஜேவிபிக்கு சாதகமாக காணப்பட்டாலும்கூட அது ஒரு ஆளுங்கட்சியாக வருவதை அல்லது ஆட்சியைத் தீர்மானிக்கும் வளர்ச்சியைப் பெறுவதை மேற்கு நாடுகளோ இந்தியாவோ மேற்கத்திய நிதி முகவர் அமைப்புகளான .எம்.எஃப் போன்றனவோ ரசிக்காது. அதை எப்படிக் குழப்பலாம் என்றுதான் சிந்திக்கும். குறிப்பாக சீனா ஏற்கனவே இலங்கைக்குள் தன் கால்களைப் பலமாக ஊன்றியிருக்கும் ஒரு பின்னணியில்,இடது மரபில் வந்த ஒரு கட்சி ஆட்சிக்கு கிட்ட வருவதை மேற்கு நாடுகளும் இந்தியாவும் ஆர்வத்தோடு ரசிக்கப் போவதில்லை. அதை எப்படித் தடுக்கலாம் என்றுதான் சிந்திக்கும்.

அரகலய நசுக்கப்பட்டபோது மேற்கு நாடுகளின் தூதரகங்கள் அறிக்கைகளை வெளியிட்டன. அதற்குமப்பால் பெரியளவில் அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்கவில்லை.இந்தியா அதைப்பற்றி வாயையே திறக்கவில்லை. ராஜபக்சக்கள் கவிழ்க்கப்படும் வரையிலும் மேற்கு நாட்டுத் தூதரகங்கள் அரகலயவை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்தன, ஆசீர்வதித்தன. ஆனால் எதிர்க்கட்சிகள் பலமாக இல்லாத ஒரு பின்னணியில் அரகலய போன்ற தன்னெழுச்சிப் போராட்டங்களின்மூலம் இடது சாய்வுடைய கட்சிகள் ஆட்சியை கைப்பற்றுவதை அல்லது அதிகாரத்தைக் கையில் எடுப்பதை மேற்கு நாடுகளும் விரும்பவில்லை, இந்தியாவும் விரும்பவில்லை. இப்பொழுது ஜேவிபியின் வெற்றியைக் குறித்த எதிர்பார்ப்புகளின் மத்தியிலும் இந்திய,மேற்கு அணியின் நிலைப்பாடு அதுவாகத்தான் இருக்கும். .எம்.எஃப்பின் நிலைப்பாடும் அதுவாகத்தான் இருக்கும். இவ்வாறான ஒரு பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் பின்னணியில், ஜேவிபி ஆட்சியைத் தீர்மானிக்கும் ஒரு வளர்ச்சியைப் பெறுவதைத் தடுப்பதற்கு நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு வகைப்பட்ட சக்திகளும் தீவிரமாகச் செயல்படும்.

தென்னிலங்கையில் நடந்த தன்னெழுச்சிப் போராட்டங்களில் தொடங்கி இன்றுவரையிலுமான நாட்டின் அரசியல் யதார்த்தம் என்னவென்றால், எதிர்க்கட்சிகள் பலமான ஒரு திரட்சியாக இல்லை என்பதுதான். தன்னெழுச்சிப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கப் பிரதான எதிர்க்கட்சிகளால் முடியவில்லை. மக்கள் போராடிய போது அவை மக்களின் பின்னே சென்றன. எதிர்க்கட்சிகள் வலிமையாகத் தலைமை தாங்கத் தவறிய ஒரு வெற்றிடத்தில், அரகலயவுக்குப் பின்னாலிருந்து இயக்கிய கட்சிகளும் செயற்பாட்டு அமைப்புகளும் முன்னரங்கிற்கு வரத் தயாராக இல்லாத ஒரு வெற்றிடத்தில், அரகலய நசுக்கப்பட்டது. ரணில் ஆட்சிக்கு வந்தார். ரணில் ஆட்சிக்கு வந்தது என்பதே எதிர்கட்சிகளின் இயலாமைதான். இப்பொழுதும் ரணிலுடைய பலம் எதுவென்றால் எதிர்க்கட்சிகளுக்கிடையே ஐக்கியம் இல்லை என்பதும்தான். எதிர்க்கட்சிகள் வலிமையான ஒரு திரட்சியாக இல்லை என்பதுதான்.

ஜேவிபி தனது உயரத்தை மிகை மதிப்பீடு செய்வதும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் ஓர் ஐக்கியம் ஏற்படுவதற்கு தடையாக காணப்படுவதாக தென்னிலங்கையை சேர்ந்த ஒரு தொழிற்சங்கவாதி சொன்னார். அரகலயவுக்கு எதிராக ஒற்றை யானையாகிய ரணிலும் தாமரை மொட்டும் கூட்டுச் சேர்ந்தது போல, ரணில்ராஜபக்ச கூட்டுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வல்ல ஒரு பலமான தலைமை எதிர்க்கட்சிகள் மத்தியில் இல்லை. இந்த வெற்றிடம் உள்ளவரை ரணில் நம்பிக்கையோடு இருப்பார். தேர்தல்களையும் ஒத்தி வைப்பார். பொருளாதாரத்தை குறிப்பிடத்தக்க அளவுக்கு நிமிர்த்தியபின் ஒரு தேர்தலை வைப்பதே ரணிலின் உள்நோக்கம் போல் தெரிகிறது.

பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு .எம்.எஃப்தான் ஒரு சர்வரோக நிவாரணி என்ற தோற்றத்தை ரணில் வெற்றிகரமாக கட்டியெழுப்பி வருகிறார். அவர் மேற்கத்திய பாரம்பரியத்தில் வந்த ஒரு தலைவர். மேற்கத்திய நிறுவனங்களை அதிகம் நம்புவார். அவருடைய மாமனாரைப் போலவே அவரும் .எம்.எஃப்வை ஒரு சர்வரோக நிவாரணியாக நம்புகிறாரா?

ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் ஒற்றை யானையாக அவர் நாடாளுமன்றத்துக்குள் வந்த அன்று முதல் நாளிலேயே ஆற்றிய உரையில் அவர் .எம்.எஃப்பிடம் போங்கள் என்றுதான் சொன்னார்.அன்றிலிருந்து  இன்றுவரையும் அதைத்தான் ஒரு மந்திரம்போல சொல்லி வருகிறார்..எம்.எஃப் உதவிகள் கிடைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற ஒரு மாயையை அவர் வெற்றிகரமாகக் கட்டியெழுப்பி வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை கிடைத்த செய்திகளின்படி சீனா கடனை மீளக்கட்டமைப்பதற்கு ஒத்துழைக்கப் போகிறது என்று தெரிகிறது. அதன் விளைவாக .எம்.எஃப்பின் உதவிகள் ஏற்கனவே ரணில் எதிர்பார்த்ததுபோல இந்த மாத இறுதிக்குள் கிடைக்கக்கூடும். அவ்வாறு கிடைத்தால் அதை ஒரு பெரிய வெற்றியாக அவர் காட்டுவார். ஏற்கனவே அந்த வெற்றியை அவர் பிரகடனப்படுத்தத் தொடங்கி விட்டார். மின்சாரம் கிடைக்கின்றது, எரிபொருள் கிடைக்கின்றது என்று தனது சாதனைகளைப் பட்டியலிடும் அவர், அண்மை நாட்களாக இலங்கை ரூபாய்க்கு எதிராக டொலரின் பெறுமதி குறைவதை ஒரு சாதனையாகக் காட்டுவார். பொருளாதாரத்தை நிமிர்த்தினால் அல்லது பொருளாதாரம் நிமிர்கிறது என்ற ஒரு தோற்றத்தையாவது கட்டியெழுப்பினால், அது அவருக்கு தேர்தல் வெற்றி களுக்கான அத்திவாரமாக அமையும் என்று அவர் நம்புகிறார்.

அதன்பின் அவர் தேர்தலை வைக்கலாம். அல்லது பொருளாதாரமா? தேர்தலா? என்று கேட்டு தேர்தல்களை மீண்டும் ஒத்தியும் வைக்கலாம். அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் கலை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிர்வாகரீதியாக எங்கெங்கே தனக்கு வாய்ப்பான சாத்தியக்கூறுகள் உண்டு என்று தெரியும். பொருத்தமான நேரத்தில் பொருத்தமான நிர்வாக ஏற்பாடுகளைக் காட்டி தேர்தலை ஒத்திவைக்க அவர் முயற்சிப்பார். தான் பலம் என்று கருதும் ஒரு காலத்தில் அவர் தேர்தலை நடத்தக்கூடும்.

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடாத்த வேண்டும். அதற்கிடையில் அவர் தன் சொந்தக் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். இடையில் ஒரு தேர்தலை வைத்தால் அது நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையைக் குழப்பிவிடும் என்று அவர் சொல்வதை மேற்கு நாடுகளும், .எம்.எஃபும்  உற்றுக்கேட்பதாகவே தோன்றுகிறது.

 

எதிர்க்கட்சிகள் ரணில் ராஜபக்ச கூட்டுக்கு எதிராக தந்திரோபாயக் கூட்டு ஒன்றுக்கு தயாராக இருந்தால் மட்டும்தான் ரணிலைச் சவால்களுக்கு உட்படுத்தலாம். இல்லையென்றால் அவர் எதிர்க்கட்சிகளை பொருட்படுத்த மாட்டார். எதிர்க்கட்சிகள் ஐக்கியப்படப் போவதில்லை என்ற நம்பிக்கையில்தான் அவர் கூறுகிறார்தெருவில் நின்று போராடுவதால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று. ஆனால் தெருவில் நின்று மக்கள் போராடியதன் விளைவாகத்தான் அவருக்கு பதவி கிடைத்தது.

மக்கள் ஆணையை இழந்து, நாட்டின் மிக மூத்த கட்சியை முற்றிலுமாகத் தோற்கடித்து, தனித்துப்போய்,இனி ஓய்வு பெறலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்த ஒருவருக்கு, மக்கள் தெருவில் இறங்கிப் போராடியதால்தான் அதிர்ஷ்டம் அடித்தது.ஆனால் அவர் கூறுகிறார் தெருவில் இறங்கி மாற்றத்தைச் செய்ய முடியாது என்று. ஏனென்றால் எதிர்க்கட்சிகள் பலமாக இல்லை என்பதுதான் அவருடைய மிகப் பிரதான பலம்