LOADING

Type to search

இலங்கை அரசியல்

மலையகத்திலிருந்து தமிழ் பெண் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராவது எப்போது?

Share

பார்த்திபன் சண்முகநாதன்

சர்வதேச மகளிர் தினம் உலகளவில் மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இது தொடர்பிலான விசேட நிகழ்வுகளை பெண்கள் மற்றும் பொது அமைப்புகள் இலங்கையில் நடத்துகின்றன. ஊடகங்களில் விசேட நிகழ்ச்சிகள் ஒளி/ஒலிபரப்பாகி வருகிறது. தனிப்பட்ட ரீதியிலும் ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள பெண்களுக்கு அந்த குடும்பத்தின் ஆண்கள் பரிசுப் பொருட்களை வழங்கியும், விருந்துகளை வழங்கியும் கொண்டாடுகின்றனர்.

எனினும் இந்த தினம் கொண்டாட்டத்திற்கானதா? போராட்டத்திற்கானதா? அல்லது அனுஷ்டிக்க வேண்டிய ஒரு நாளா?

1908ஆம் ஆண்டு 15,000 பெண்கள் நியூயோர்க் நகரத்தின் வழியாக குறுகிய வேலை நேரம், ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி அணிவகுத்துச் சென்றனர். ஒரு வருடத்தின் பின்னர் அமெரிக்காவின் சோசலிஸ கட்சி முதலாவது தேசிய மகளிர் தினத்தை அறிவித்தது. அதன் பின்னர் பல நாடுகள் படிப்படியாக மகளிர் தின நிகழ்வுகளை, பல்வேறு விடயங்களின் அடிப்படையில் நடத்த ஆரம்பித்தன. 1975ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை மகளிருக்கான சர்வதேச தினமாக அங்கீகரித்தது.

சர்வதேச மகளிர் தினம் சமூகத்தில் பெண்கள் கல்வியிலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும் எந்தளவு முன்னேறியிருக்கின்றார்கள் என்பதை கொண்டாடுகின்ற, சுட்டிக்காட்டுகின்ற அதேவேளை அவர்களுக்கு மறுக்கப்படுகின்ற உரிமைகள், சலுகைகள் என்பவற்றை வலியுறுத்தும் போராட்டங்களை முன்னெடுக்கும் நாளாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றது.

2023ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் தின தொனிப்பொருள் “டிஜிட்டல்; பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்” என்பதாகும். இந்த தொனிப்பொருள், தொழில்நுட்பம் மற்றும் இணையவழி கல்விக்கு பெண்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரித்து கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வருடம் பெண்கள் மற்றும் பெண்களுக்கான சமத்துவமின்மையின் மீதான டிஜிட்டல் பாலின இடைவெளியின் தாக்கத்தையும் சர்வதேச மகளிர் தினம் ஆராய்கிறது. ஏனெனில் சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 2025ற்குள் பெண்கள் இணைய உலகத்துக்கான அணுகல் இல்லாத நிலை தொடர்ந்தால், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 ட்ரில்லியன் டொலர் இழப்பு நாடுகளுக்கு ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை கணிப்பிட்டுள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் இணையவழி கல்விக்கு பெண்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரிப்பதே இந்த வருட மகளிர் தினத்தின் தொனிப்பொருள்.

எனினும், இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் மலையகத் தமிழ் பெண்கள் அன்றாடம் படும் துயரங்களில் இருந்து அவர்களை மீட்பதும், அவர்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவதும் யார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கல்வி, அரசியல், பொருளாதாரம் என அனைத்து உரிமைகளும் குடும்பத்தினாலும், சமூகத்தினராலும் மறுக்கப்பட்டுள்ள ஒரு இனக்குழுவாக மலையகத் தமிழ் பெண்கள் இன்றும் தமது நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர். இலங்கையில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு சமூகமாக மலையகத் தமிழர்கள் காணப்படுகின்ற நிலையில், அந்த அடிமை சமூகத்தின் ஆண்களால் அந்த பெண்கள் மேலும் அடிமைகளாக நடத்தப்படுகின்றமை வழமையான விடயமாக மாறியுள்ளது. வேலைக்குச் செல்வதும் உழைப்பதும், குழந்தைப் பெற்றுக்கொள்வதும் அவர்களை வளர்ப்பதும், வீட்டை பராமரிப்பதும் ஏதோ அவர்களுக்கே உரிய கடமை என்ற மனநிலை இன்றும் அந்த சமூகத்தின் ஆண்களிடம் காணப்படுகிறது.

இதற்கு பல்வேறு காரணங்கள் அடிப்படையாக அமைந்துள்ளது. மறுபுறம் தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளாக மாறியுள்ள அந்த சமூகத்தில் பெண்களுக்கான உரிமைக் குரல்கள் ஒலிக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஆணாதிக்க சிந்தனையும், தேர்தலை அடிப்படையாகக் கொண்ட அரசியலும் உரிமைகள் பற்றி என்றுமே பேசியதில்லை.

1931ஆம் ஆண்டு இலங்கையின் அரசாங்க சபைக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற தேர்தலில் ஹட்டன் தொகுதியில் இருந்து பெரிசுந்தரமும் தலவாக்கலை தொகுதியில் இருந்து எஸ்.பி.வைத்தியலிங்கமும் இந்தியத் தமிழர்கள் சார்பில் தெரிவு செய்யப்பட்டனர். இதுவே மலையகத் தமிழர்களின் பிரதிநிதித்துவ அரசியலுக்கான ஆரம்பமாக அமைந்தது. எனினும் அன்று முதல் இன்றுவரை 90 வருடங்களைக் கடந்த மலையகத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் இதுவரை ஒரு பெண்கூட நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை.

மலையகத் தமிழர்களிடையே செல்வாக்குப் பெற்ற அரசியல் கட்சிகளான, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகள் கூட பல தசாப்தங்களாக தேர்தல் அரசியலில் ஈடுபட்டாலும் ஒரு பெண்ணைக்கூட இதுவரை தேசியப் பட்டியலிலேனும் நாடாளுமன்ற அனுப்ப முயற்சிக்கில்லை. மகளிர் தினத்தையும், மே தினத்தையும் பெரும் எடுப்பில் கொண்டாடும் அந்த கட்சிகள் பெண்களின் அரசியல் உரிமை சார்ந்து எந்தவொரு முற்போக்கான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை என்பதே யதார்த்தம்.

கடந்த 2015ஆம் ஆண்டு மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் பெரியசாமி சந்திரசேகரனின் புதல்வி அனுஷியா சந்திரசேகரன் அந்த கட்சியில் இருந்து பிரிந்து பொதுத் தேர்தலில் போட்டியிட்டாலும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.

இந்த நிலைமை நீடிக்கக்கூடாது. இதில் மாற்றம் வேண்டும். 200 வருட கசப்பான வரலாற்றைக் கொண்ட மலையக தமிழ் மக்களின் 100 வருட அரசியல் வரலாற்றில் ஒரு பெண்கூட நாடாளுமன்றம் செல்லவில்லை என்பதானது, மிகமோசமான பின்தங்கிய நிலைமையையே பறைசாற்றி நிற்கின்றது.

இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்கான சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ள நிலையில் அதில் மலையகப் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதன் ஊடாக இதற்கு பிள்ளையார் சுழி இடமுடியும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.

மலையகத்திலிருந்து பெண் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற கருத்தில் நியாயம் உள்ளது என்பதை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஏற்றுக்கொள்கிறார். அதை தமது கூட்டணி ஆக்கபூர்வமாக பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்.