LOADING

Type to search

இலங்கை அரசியல்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மன்னார் மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு கூடிய உலர் உணவு பொதிகள்

Share

(மன்னார் நிருபர்)

(08-03-2023)

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்துடன் கூடிய உலர் உணவு பொதிகள் இன்றைய தினம் புதன்கிழமை(8) காலை மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

-மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக மனிதாபிமான பணியில் ஈடுபட்டு வரும் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் தனது மனிதாபிமான செயல் திட்டத்தின் ஓர் அங்கமாக மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 180 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து 180 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு முதலாம் கட்ட நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டு தற்போது 2 ஆம் கட்ட நிவாரண பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார துடன் கூடிய உலர் உணவு பொதிகள் 2 வது கட்டமாக இன்றைய தினம் புதன்கிழமை(8) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்கள்,குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட சட்ட உதவியை நாடும் குடும்பங்கள் உள்ளடங்களாக 40 குடும்பங்களுக்கு இவ்வாறு பெறுமதியாக உலர் உணவு பொதிகள் 2 வது கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த குடும்பங்கள் 3 மாத முடிவில் சுய வருமானத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிலக்கடலை விதைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமது வீடுகளில் உள்ள காணிகளில் கச்சான் செய்கை மேற்கொள்ள குறித்த கடலை விதைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

3 மாத உலர் உணவு திட்டம் நிறைவடையும் போது அவர்களின் சுய தொழில் முயற்சியாக கச்சான் அறுவடை அவர்களுக்கு கைகொடுக்கும் என்பதன் அடிப்படையில் குறித்த சுய தொழில் உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மெசிடோ நிறுவனத்தின் மீனவ பெண்கள் குழுக்களுக்கு இன்றைய தினம் புதன்கிழமை(8) மதியம் 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கருவாடு பதனிடுவதற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நாச்சிக்குடா,இரணைமா நகர் மற்றும் வலைப்பாடு ஆகிய மூன்று மீனவ பெண்கள் குழுக்களுக்கு இவ்வாறு உதவி திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் 7 குழுக்களுக்கு மன்னார் மாவட்டத்தில் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.