நாவற்குழி விகாரைக்கு வந்த சவேந்திர சில்வாவிற்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு
Share
நடராசா லோகதயாளன்.
யாழ்ப்பாணம்-நாவற்குழியில் வலிந்து கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு போர்க் குற்றச்சாட்டுகளிற்கு ஆளாகியுள்ள ஜெனரல் சவேந்திர சில்வாவின் வருகைக்கு எதிராக தமிழ் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இலங்கை முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் யாழ்ப்பாண வருகையை எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமையில் மக்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமை (18) மாலை 3 மணி அளவில் அவர் அந்த விகாரைக்கு வரவிருந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
”தமிழ் இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா வெளியேறு” , “சவேந்திர சில்வா போர்க்குற்றவாளி” போன்ற வாசகங்களை கொண்ட பதாதைகளை ஏந்தி மக்கள் அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
தமிழர் தாயகப் பகுதியில் வலிந்து பௌத்த ஆக்கிரமிப்பு நடைபெறுகிறது என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறினர். போர் முடிந்து 14 ஆண்டுகள் ஆகும் நிலையில், இப்படியான செயல்பாடுகள் தொடருகின்றன என்று போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
ஒரு புறம் இணக்கப்பாடு, இணைந்த தேசம், அனைவரும் சமம் என்றெல்லாம் வெளியுலகிற்கு போலியான முகத்தைக் காட்டும் இலங்கை அரசு, உண்மையில் தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்த சிங்களக் குடியேற்றம், தமிழ் மக்களின் கலாச்சார அழிப்பு ஆகியவற்றில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர் என்று தமிழர் தரப்பு ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகிறது.
நில ஆக்கிரமிப்பு செய்வதற்கு இப்போது தொல்லியல் பூமி என்ற வழிமுறையை இப்போது சிங்கள அரசு முன்னெடுத்து வருகிறது என்று வடக்கு-கிழக்குப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அப்படியான ஆக்கிரமிப்பின் ஒரு அடையாளமே நாவற்குழி விகாரை என்று சவேந்திர சில்வாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறினர்.
”நாவற்குழு விகாரை சிங்கள பௌத்த ஆக்கிரப்பின் அடையாளம்” என்ற கோஷமும் எழுப்பப்பட்டது.
தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் நாவற்குழிக்கு வருகை தந்த சவேந்திர சில்வா விகாரையின் மண்டப கலசத் திறப்பு விழாவில் பங்கு கொண்டு கலசத்தை திறந்து வைத்து சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியேறினார்.
இந் நிகழ்வில் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த பெருமளவு பௌத்த துறவிகளும் பங்குகொண்டனர்.