LOADING

Type to search

இலங்கை அரசியல்

இடிக்கப்பட்ட சிவன் கோவிலும், பங்குனி உத்திர எதிர்ப்பார்ப்பும்.

Share

யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் 


அரசு அனுமதித்தால் எதிர்வரும் பங்குனி உத்திரத்தன்று, இடிக்கப்பட்ட சிவன் கோவிலில் மீண்டும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய தயாராக இருக்கிறோம்ஆறு திருமுருகன், உபதலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்

தொல்லியல் பூமி என்ற பூச்சாண்டி, படை முகாம்கள், கைவிடப்பட்ட நிலங்கள், வலிந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வாக்குமூல பதிவிற்கு அழைக்கப்படுவது என்பவை இலங்கையின் வடக்குகிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்களிற்கு பழகிப்போன ஒன்றாகிவிட்டது.

அதேவேளை, நீண்டகாலமாக வலிந்த இராணுவ ஆக்கிரமிப்பின் கீழுள்ள, தனியர், அறக்கட்டளை, ஆலயச் சொத்துகளின் நிலை என்னவாக உள்ளது என்பதை யாரும் அறிய முடியாத வகையில் இரும்புத் திரையால் மறைக்கப்பட்டுள்ளன.  

அப்படியான இரும்புத் திரைக்கு பின்னால் ஏராளமான சோகக்கதைகள் உள்ளன. போர்க்காலத்தில் அபகரிக்கப்பட்ட காணிகளின் நிலை என்ன, விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்டவர்களின் நிலை என்ன, அந்தப் பகுதியில் தாங்கள் நடத்திவந்த தொழில்களிற்கு என்னவாயிற்று, பாரிய மனித உரிமை மீறல்களிற்கு மௌனமான சாட்சிகளாக இருக்கும் இடங்களிற்கு என்னவாயிற்று என்பதற்கெல்லாம் பதில்கள் இல்லை.

இராணுவத்தினர் இருக்கும் இடம் பாதுகாப்பானது என்பது இலங்கைக்கு பொருந்தாதோ என்று தோன்றுகிறது. ஏனென்றால் இராணுவ ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த ஆனானப்பட்ட சிவபெருமானுக்கே பாதுகாப்பு இல்லாமல் அவரது ஆலயமே இடிக்கப்பட்டுள்ளதை இரு வாரங்களிற்கு முன்னர் முதல் முறையாக கனடா உதயனே ஆதாரங்களுடன் வெளியிட்டது.

அந்தச் செய்தி வெளியாகி, பல ஊடகங்கள் அதையடுத்து செய்திகளை வெளியிட்ட நிலையில், அப்படி ஏதும் நடைபெறவில்லை என்பதை மறைமுகமாகக் கூறும் வகையில் சில தகவல்கள் வெளியாயின. ஆனால் உதயன் கூறியது உண்மையே என்பது இப்போது ஆதாரத்துடன் வெளிவந்துள்ளது.

யாழ்ப்பாணம் கீரிமலைப் பகுதியில் இருந்த சிவ சிண்ணங்கள் இடித்து அழிக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகள் உணமையானது என்று அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் ஆறு.திருமுருகன் மீண்டும் உறுதி செய்தார்.

அண்மையில் இன்னும் படையினரின்  கட்டுப்பாட்டில் இருக்கும் கீரிமலை பகுதிக்கு சென்று வந்த அவர் இந்த செய்தியாளரிடம் பிரத்தியேகமாகப் பேசினார்.

”கீரிமலையில் இருந்த ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் சடையம்மா மடம் என்பவற்றோடு சில சமாதிகளும் இடித்து அழிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி தொடர்பில் நானும் கருத்து வெளியிட்டிருந்தேன். இருந்தபோதும் அங்கே கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகை அருகில் இருந்த ஆதிலிங்கேஸ்வரர் எனப்படும் சிவன் ஆலயமோ அல்லது சடையம்மா மடமோ அழிக்கப்படவில்லை. அவை அனைத்தும் இருப்பதாக சில அரச பிரதிநிதிகள் தகவல் வெளியிட்டதனால் அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட நீண்ட முயற்சி மேற்கொண்டோம்”. 

தீவிரமான முயற்சிகளிற்கு பிறகு அங்கு சென்று நிலைமையை நேரில் பார்க்கும் அனுமதி அளிக்கப்பட்டது

”சிவன் அருளால் கடற்படையினரின் பாதுகாப்பில் உள்ள பகுதிக்குள் சென்று நேரில் நிலவரத்தை பார்வையிட்டேன். பார்வையிட்டதன் அடிப்படையில் அங்கே இருந்த சிவன் ஆலயம் இருந்த தடயமே தெரியாது அழிக்கப்பட்டுள்ளது என்பதே மிகப் பெரிய உண்மையாகும். ஏனெனில் அந்த இடத்தில் நின்றபோது வார்த்தைகள் வரவில்லை. உண்மை இவ்வாறு இருக்கும் போது சிவன் ஆலயத்தை வாழ்நாளில் பார்த்திராதவர்கள் அந்த சிவன் ஆலயம் இருக்கின்றது எனக்கூறி எம்மை ஏமாற்றி விட்டனர்என்று மிகவும் மன வேதனையுடன் கூறினார்.

கடற்கரையை ஒட்டி குறைந்தது 350 ஆண்டுகள் பழமையானது என்று அறியப்பட்ட அந்த ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இப்போது முற்றாக இடித்து இல்லாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்த சடையம்மா மடம் மற்றும் இதர இடங்களாவது பாதுகாப்பாக உள்ளதா என்று ஆறு திருமுருகனிடம் கேட்டேன்.  

”இதன் அருகே இருந்த சடையம்மா மடமும் அடியோடு அழிக்கப்பட்டு பற்றை மட்டுமே வளர்ந்த பிரதேசமாக காணப்படுகின்றது. இத்தனைக்கும் ஒரேயொரு ஆறுதல் எமது பெண் சித்தர் சடையம்மாவின் சமாதி முழுமையாக உள்ளது. அத்தோடு அங்கே இருந்த நான்கு சமாதிகளில் இரண்டு சமாதிகள் உள்ளன. ஏனைய இரண்டு சமாதிகளும் இடித்து தள்ளப்பட்ட நிலையில் உள்ளது”. 

கீரிமலை பகுதிக்குச் சென்ற அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியே காத்திருந்தது. அடுத்தடுத்து பல சிவ சின்னங்கள் அங்கு இடித்தழிக்கப்பட்டுள்ளது அவரை மட்டுமின்றி லட்சக்கணக்கான சைவர்களை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. ஆதிலிங்கேஸ்வரர், சடையம்மா சமாதிக்கு அருகிலிருந்த வேறு இரு சித்தர்களின் சமாதிகள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு பழமையான இதர சில வழிபாட்டு இடங்களையும் காணவில்லை அல்லது அழிக்கப்பட்டுள்ளது இப்போது தெரியவந்துள்ளது. ஆறு திருமுகன் தொடர்ந்து கூறுகையில்:

”அனைத்திற்கும் அப்பால் சற்று தொலைவில் இருந்த வைரவர் ஆலயம் இருந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை. இதேநேரம் ஜனாதிபதி மாளிகை நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக ஓர் நிறுவனத்திற்கு கையளிக்க முயற்சிக்கப்படுகின்றது”.

இதேவேளை அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் அந்த இடத்தை பார்வையிடச் சென்ற போதுஅந்த நிறுவனத்தினரும் ஜனாதிபதி மாளிகைப் பகுதியை பார்வையிட அங்கே  வருகை தந்திருந்தனர். அவர்களுடனும் ஆறு திருமுருகன் உரையாடியுள்ளார்

”ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு பெறவுள்ள நிறுவனத்தையும் நான் அனுகி ஆலயங்கள் இருந்த பகுதிகளின் ஆலயங்கள் இடித்து அழிக்கப்பட்டுள்ளபோதிலும் எஞ்சியிருக்கும் நிலத்திலேனும் நாம் ஆலயங்களை அமைத்தும் சடையம்மா சமாதியை புனரமைத்து போற்றி வணங்கவும் அனைத்து தரப்பும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் எதிர் வரும் 6ஆம் திகதி அங்கே ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்ய முடியும்என்றார்

கீரிமலை சிவன கோவில் உடைக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும்  செய்தியை வடமாகாண ஆளுநர்  மற்றும் படைத்தரப்பு என்பன மறுக்கின்றனர். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க   இதனை மேற்கொண்டதாக தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இந்த செய்தி  ஊடகங்களில்  வெளியாகியுள்ளன என்று அரச தரப்பு கூறுகிறது.

கோவில் இருந்த இடத்தில் ஜனாதிபதி மாளிகை கட்டப்படவில்லை எனவும் அதற்கு அருகில் தனியாரிடம் சுவீகரிக்கப்பட்டு அரசு உடமையாக்கப்பட்ட  காணியிலே மாளிகை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், 8 வருடங்களுக்கு முன்னரே மாளிகை நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கோவில் உடைக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எந் உண்மையும் இல்லை என்கிறார். அதேபோல் வடபகுதிக்குப் பொறுப்பான கடற்படை கட்டளைத்தளபதி  அட்மிரல் அருண தென்னகோன்மாளிகையின் சொத்துக்களின் பாதுகாப்பிற்காக கடற்படை அங்கு இருப்பதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழே இந்த பிரதேசம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

கடற்படை பிரதான தளமும் இதற்கு அருகிலே இருப்பதாக குறிப்பிட்ட யாழ் இராணுவக்கட்டளைத் தளபதி மேஜர்  ஜெனரல் சொர்ண போதொட்டகுறித்த பிரதேசத்தில் ஜனாதிபதி மாளிகைக்கான தேவையொன்று இல்லை என்பதை  தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அண்மையில் மேற்கொண்ட யாழ்ப்பாண  விஜயத்தின்போது குறிப்பிட்டிருந்தார். இந்த மாளிகை  சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறந்த தரத்திலான ஹோட்டல் ஒன்றாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர்  யோசனை முன்வைத்திருந்தார்என்றார்.  

யாழ்ப்பாணம் முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் இந்த பிரதேசம் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இராணுவம் அங்கு எந்த வித நிர்மாணங்களை மேற்கொள்ளவோ அழிக்கவோ இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  

ஆனால், அங்கிருந்த சிவன் கோவில் இப்போது இல்லை என்பதை தெல்லிபளை பிரதேச செயலர் சிவசிறியும் உறுதிபடுத்திகிறார்

”அப்பகுதி ஒரேபற்றைகளால் நிறைந்த பகுதியாக காணப்படுகின்றது. இருந்தபோதும் கிருஸ்ணர் கோவிலிற்கு அருகே சிவன் கோவிலை காணவில்லை”.

அரச தரப்பு சிவன் கோவில் இடிக்கப்படவில்லை என்றும், தமிழர் தரப்பு அது இடைக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்த நிலையிலேயே சில நாட்களிற்கு முன்னர், ஆறு திருமுருகன் அங்கு சென்று பார்வையிட்டு வந்த பிறகு எம்முடன் பேசினார்.

அரச தரப்பு சிவன் கோவில் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை கட்டப்படவில்லை என்று கூறுகிறார்களே தவிர, இருந்த சிவன் கோவில் என்னவாயிற்று என்பதற்கு பதிலளிக்கவில்லை. இது தமிழ் மக்களின் கலாசார மற்றும் மத நம்பிக்கையின் மீதான நேரடி தாக்குதல் என்று வட மாகாண தமிழ் மக்கள் கூறுகின்றனர்.

உரிய ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள் மூலம் அங்கு ஆலயம், மடம், சமாதி ஆகியவை இருந்ததற்கான ஆதாரங்கள் அளிக்கப்பட்ட பிறகும் அரசும் இராணுவத் தரப்பும் வெளிப்படையாக உண்மையை தெரிவிக்க மறுக்கின்றனர் என்கிறார்கள் யாழ் மக்கள்.

அரசு அப்படி ஏதும் நடைபெறவில்லை என்பதை மறுக்கும் போது, அங்கு ஆலயம் இருந்த இடத்தில் எதிர்வரும் பங்குனி உத்திர நாளன்று (ஏப்ரல் 6) ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் அங்கு சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய கோரி விடுக்கப்பட்டுள்ள அனுமதியை அளிக்கலாமே என்று மக்கள் கேட்கும் கேள்விக்கு மௌனமே பதிலாக வருகிறது.

தமிழர்களின் வாழ்வுடன் உணர்வுபூர்வமாக கலந்துள்ள சிவநெறி மற்றும் வழிபாட்டு மையங்கள் காணாமல் ஆக்கப்படும் அதே வேளை, இந்தாண்டு வெசாக் திருவிழாவை மிகவும் சிறப்பாக நடத்திட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அவரது அலுவலகம் கூறுகிறது

”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக இவ்வருட வெசாக் பண்டிகையை தேசிய மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும் வெகு விமரிசையாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதுஎன்று அவரின்  செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மே மாதம் 05ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரைபுத்த ரஷ்மி தேசிய வெசாக் பண்டிகைகொழும்பில் உள்ள கங்காராம விகாரை, ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று பௌத்த குருமார்கள் கொழும்பில் தெரிவித்துள்ளனர்.

ஒரு புறம் சிவன் கோவில் இடிப்பு மறுபுறம் வெசாக் பண்டிகை சிறப்பாக கொண்டாட திட்டம், இது எப்படி தேசிய ஒற்றுமையை, ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வளர்க்கும் என்று நாட்டிலுள்ள தமிழ் மக்கள் கேட்பது எனது காதிலும் விழுகிறது.