LOADING

Type to search

இலங்கை அரசியல்

கிறிஸ்துவ போதகர் பால் தினகரன் இலங்கையில் மதப் பிரசாரத்தில் ஈடுபட அனுமதி மறுப்பு

Share

நடராசா லோகதயாளன்.

இலங்கைக்கு வர்த்தக விசாவில் வருகை தந்த கிறிஸ்துவ் மத போதகர் பால் தினகரன் மதக் கூட்டம் நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பால் தினகரன் யாழ்ப்பாணத்தில் வியாழன் (23) முதல் மூன்று தினங்கள் மதக் கூட்டம நடாத்தவுள்ளதாக பகிரங்க துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டபோது யாழ்ப்பாணம் சிவசேனை அமைப்பின் சார்பில் இதற்கு எதிராக முறையீடு செய்யப்பட்டது.

வர்த்தக விசாவில் வருகை தரும் ஒருவர் மதப் பரப்புரையில் ஈடுபட முனைவதனால் இதனை தடுக்க வேண்டும் என அந்த முறையீட்டில் கோரப்பட்டது.

இந்த நிலையில் கொழும்பு மற்றும் கண்டியில் மதம் சார் நிகழ்வில் ஈடுபட்ட பால் தினகரன குழுவினர் வியாழன் மாலை 4 மணிக்கு தனியான விமானம் மூலம் இரத்மலான விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய பால் தினகரன் குழுவினரை வெளியேற அனுமதிக்க முடியாது என குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தடை விதித்தனர்.

நீண்ட பேச்சுக்களின் பின்னர் வியாழன் இரவு 8 மணியளவில் அந்த குழுவினர் அனைவரின் கடவுச் சீட்டுக்களையும் பெற்றுக்கொண்டு யாழ் நகரில் உள்ள பிரபல நட்சத்திர கோட்டலில் தங்க அனுமதித்ததோடு மதநிகழ்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

அவரது மதக் கூட்டங்களிற்கு எதிராக மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 50 மேற்பட்ட இந்துக்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் டி ஐ ஜிக்கு கடிதம் எழுதி, மதப் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது என்று கோரியிருந்தனர்.

அந்த குழுவினரின் வருகைக்கு எதிராக சிவ சேனை அமைப்பினரும் முறைப்பாடு செய்திருந்தனர். தமது கோரிக்கையை ஏற்றே பால் தினகரன் குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று சிவ சேனா அமைப்பு கூறியுள்ளது. இதையடுத்து வெள்ளிக்கிழமை (24) மானிப்பாயில் சிவ சேனை சார்பில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டம் நடைபெறாது என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

கீழேயுள்ள அந்த குழுவினருக்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

1 திருமதி எவாஞ்சலின் பால் தினகரன் -இந்தியர்

2 திரு. சாமுவேல் பால் தினகரன் -அமெரிக்கர்

3 செல்வி ஸ்டெல்லா இரமோலா தினகரன்- அமெரிக்கர்

4 செல்வி. யோகினி வசந்தகுமார்- இலங்கையர்

5 திரு. பால் தினகரன்- இந்தியர்

6 திரு. உலூக் பெர்னார்டர் யோர்ச்சர்- இந்தியன்

7 திரு. இரத்தினகுமார் ஆசீர்வதம்- இந்தியர்

8 திரு. இரெசி இடேனியல் பால்ராசர்- இந்தியன்.

இவர்கள் எண்மரும் பலாலி விமானம் நிலையம் வந்த உடனேயே கொழும்பில் இருந்து இந்தப் பணிக்காகவே விரைந்து வந்த இலங்கை அரசின் குடிவரவுத் திணைக்கள நடவடிக்கைக் குழு அவர்களை விமான நிலையத்தில் தனி அறைக்கு அழைத்துச் சென்றனர் என்று உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களின் கடவுச் சீட்டுகளைக் கைப்பற்றிய குடிவரவுத் திணைக்கள அலுவலர்கள், வெள்ளிக்கிழமை 24.03.2023 காலை 1000 மணிக்குக் கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு திணைக்கள அலுவலகத்திற்கு நேரே வந்து சேருமாறு ஆணையிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.