LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் மண் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் வீதிகள் சேதம்

Share

– போக்குவரத்துக்கு சிரமப்படும் கிராம மக்கள்.

(27-03-2023)

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மடுக்கதை கிராமத்தில் அகழப்படும் மண் ஸ்திரத்தன்மை அற்ற வீதிகளூடாக கனரக வாகனங்களில் ஏற்றிச் செல்வதால் வீதிகள், சிறிய பாலங்கள், சேதமடைந்து போக்குவரத்துக்கு உதவாவாமல் அவ்வழியாக செல்லும் பாடசாலை மாணவர்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், நோயாளிகள், என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மடுக்கரை மற்றும் இராசமடு கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் பல வருடங்களாக அபிவிருத்தி எதுவும் காணாத குறித்த வீதி தற்போது புதிதாக அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே இவ்வாறு ஒரு நாளைக்கு அளவு கணக்கில்லாத வாறு கனரக வாகனங்கள் அதிக பாரத்துடன் சென்றால் புதிய வீதி தாங்குமா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார் கள்.

மேலும் மண் ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது ஒரு பாதை. ஆனால் அவர்கள் அந்த பாதை ஊடாக செல்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் மடுக்கரை இராசமடு பாதையை சேதப்படுத்துவதாக தெரிவிக்கின்றார்கள்.

மேலும் இவ்வாறு பொருளாதார நெருக்கடியான நேரத்தில் அரசாங்கம் வீதிகளை அபிவிருத்தி செய்து கொண்டு போக மறுபுறம் அதே அரச அதிகாரிகள் முறையற்ற அனுமதிப் பத்திரங்களால் வீதிகளை நாசப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

குறித்த அதிகாரிகள் ஓய்வு பெற்று அல்லது மாற்றலாகிச் சென்று விடுவார்கள். ஆனால் சேதப்படுத்தப்பட்டு குண்றும் குழியுமான வீதிகளுடன் அவஸ்தைப் படப் போவது மக்கள். இதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த வீதிகளினால் கனரக வாகனங்கள் மண் ஏற்றிச் செல்வது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் அதிகாரிகள் மண் மாபியாக்கள் பக்கம் சார்ந்து நின்று தவறுகளை நியாயப் படுத்துகிறார்களே தவிர பொது மக்களுக்கு ஆதரவாக பேச மறுக்கிறார்கள் என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அத்துடன் குறித்த பாதைகளூடாக மண் ஏற்றிச் செல்பவர்களுக்கும் பொது மக்களுக்கும் ஏதேனும் கைகலப்புகள் பிரச்சனைகள் ஏற்பட்டால் உரிய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றார்கள்.

அத்துடன் 5 வருடங்கள் ஆட்சி செய்த நானாட்டான் பிரதேச சபை பிரதேச சபை அரசியல் நிர்வாகத்தினர் ஒவ்வொரு வீதிகளிலும் எவ்வளவு பாரம் ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற அறிவித்தல் பலகைகள் எதுவும் அமைக்கவில்லை.

வீதிகள் ஒவ்வொன்றும் பிரதேச சபைக்கு சொந்தமானதாக இருக்கலாம், நீர்ப்பாசனம், விவசாயத் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, அல்லது திணைக்களத்திற்கு சொந்தமானதாக இருக்கலாம், அது எமக்குத் தேவையில்லை இவை பொது மக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட வீதிகள்.

அதை பாதுகாப்பது ஒவ்வொரு அரச அதிகாரிகளின் கடமை. எனவே குறித்த வீதிகள் ஊடாக கனரக வாகனங்கள் மண் ஏற்றிச் செல்வதை உடனடியாக தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்காக வீதிகளை பாதுகாப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் .குறிப்பாக நானாட்டட்டான் பிரதேச செயலாளர், மன்னார் மாவட்டச் செயலாளர், மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் இந்த விடயத்தில் கரிசனை கொண்டு பொதுமக்களுக்கு சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்