விநாயகர் விமர்சனம் | வாங்கியது கடன், வைத்தது ஆப்பு, அடிப்பது தண்டோரா
Share
(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரை தொடர்: பகுதி 9)
கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி
“நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி, நற்றமிழ் கற்ற புலவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு நம் மன்னர் செண்பகப்பாண்டியருக்கு ஒரு குறித்த விடயத்திலே பெருத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது…..அதைத் தீர்த்து வைப்போருக்கு ஆயிரம் பொறகாசுகள் பரிசளிக்கப்படும்”…..
இது திருவிளையாடல் திரைப்படத்தில் வந்த ஒரு தண்டோராக் காட்சி.
கடந்த வாரம் இலங்கையின் முடிசூடாமன்னர் பாராளுமன்றத்தில் வந்து போட்ட சத்தம் இந்த தண்டோராக் காட்சியையே நமக்கு ஞாபகப் படுத்தியது.
ஆனால், இலங்கை பாராளுமன்றத்தில் சொல்லப்பட்ட சமாசாரம் மன்னருக்கு ஏற்பட்ட மாபெரும் சந்தேகமல்ல மாறாக ஹீ மேன், சுப்பர்மேன் அல்லது பெற்மேன்போல ஒரு செயற்கரிய செயலை செய்து முடித்துவிட்டதான ஒரு வெற்றிக் கர்ஜனையாக அந்த சத்தம் இருந்தது.
“இலங்கை இனிமேலும் வங்குரோத்து அடைந்த நாடு இல்லை” எனவும் எவருமே செய்ய முன்வராத ஒரு காரியத்தை தாம் ஏற்று சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இணக்கப்பாட்டைப் பெறுவதில் வெற்றி பெற்று விட்டதாகவம் இதன் மூலம் இலங்கைக்கு மூடப்பட்ட உலக நிதிச் சந்தையின் கதவுகள் திறக்கும் எனவும் பெருமிதத்துடன் அவர் அறிவித்தார்.
ஐயா, சர்வதேச நாணய நிதியம் இன்னொரு 2.9 பில்லியன் கடனை நான்கு வருட –கால இடைவெளியில் உங்களுக்குத் தருவதாகத் தானே அறிவித்தது. அதிலே என்ன பெரிய சாதனையைக் கண்டீர்கள்? உங்களுடைய வெளிநின்ற கடன்களோ 50 தொடக்கம் 60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்கிறார்கள். அதை எப்படி மீளச் செலுத்தப்போகிறீர்கள் என்பதை இனித்தான் நீங்கள் சர்வதேச நாணய நிதியத்திற்குச் சொல்ல வேண்டும். அதற்குள் ஏனிந்தக் கொக்கரிப்பு?
அதுமட்டுமா? அந்தக் கடனோடு சேர்த்து உங்கள் அமருமிடத்தில் செருகிக் கொள்வதற்கு வசதியாக 151 பக்கத்தில் கூராகச் சீவிய ஒரு ஆப்பையும் சேர்த்தல்லவா உங்கள் கைகளிலே சர்வதேச நாணய நிதியம் கொடுத்து விட்டிருக்கிறது? அதை எப்போ எப்படி செருகிக் கொள்ளப் போகிறீர்கள்? ஆனால், அதே ஆப்பை பொதுமக்களின் ஆசனவாயிலில் வரிஉயர்வு விலை உயர்வு என்று ஏற்கெனவே பலதடவை செருகிவிட்டீர்கள். இப்போது அதே ஆப்பை பாராளுமன்ற அனுமதிக்காக விட்டிருக்கிறீர்கள். தமக்கு தாமே ஆப்பு வைத்துக்கொள்ள பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் நாலாம் அறிவு மட்டும் கொண்டவர்களா? அவர்கள் மற்றவர்களுக்கு செருகியே பழக்கப்பட்டவர்களாயிற்றே? மறுபறும் கடன் வாங்குவது உங்களுக்கு ஒரு சாதனையாகத் தெரிகிறதா?
கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று இராமாயணத்தில் கம்பன் இராவண மகாராஜாவின் கலக்கத்திற்கு கடன் பட்டவரது நெஞ்சம் படும் பாட்டின் தன்மையை உவமைகாட்டுவான். ஆனால் நமது மகாராஜாவோ சர்வதேச நாணய நிதியத்திடம் இன்னொரு கடனைப்பெற்று விட்டு அதை ஒரு வெற்றிச் சாதனையாக நினைத்து மகிழ்கிறார். அவரது தொண்டரடிப் பொடிகளோ மருதானையில் மஹாபாரயில் (நடுரோட்டில்) வெடிகொளுத்தி ஜயவேவா வெற்றிக் கோஷம் எழுப்புகிறார்கள்.
பொருளாதாரத்தில் இந்தளவு அடிவாங்கியும் இவர்கள் இன்னமும் கூடத் திருந்தவில்லை என்பதற்கு இதைவிட என்ன சாட்சி வேண்டும்? அடுத்த நாள் காலையில் உள்நாட்டுப் பத்திரிகைக் கார்ட்டூன் ஒன்று கைலி கட்டிய ஒருவரின் அகல வைத்த கால்களுக்கு இடையில் பட்டாசு வெடி வெடிப்பதாக வரைந்து காட்டியிருந்தது. அவரது சந்தான சமாசாரமும் சேர்ந்து வெடித்திருக்கும் என்பதை விளங்கிக் கொள்ள நமக்கு எட்டாம் அறிவு தேவையில்லை.
ஆகவே இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களை சாதனைகளாக ஊதிப்பெருப்பித்துக்காட்டி அரசியல் ஆதாயம் பெறவே ஆளும் தரப்பு முயல்கிறதென்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இன்றுள்ள நிலையில் தேர்தலொன்று வந்தால் ஆளுந் தரப்பு நிச்சயமாக மண்ணைக்கவ்வும் என்பது அவர்களுக்கே நன்கு தெரியும். எனவே எதையாவது செய்து மக்கள் மனங்களை மாற்ற நினைக்கிறார்கள். அதேவேளை இலங்கை மக்கள் மறதிநோய்க்கு ஆளானவர்கள். ஆதலால் ஆறேழு மாதங்கள் காலத்தை கடத்தி விட்டால் மக்கள் கடந்தகால கஷ்டங்களை மறந்து விட்டு தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று ஆட்சியாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
இப்போது சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்பட்டுள்ள 333 மில்லியன் டொலர் பெறுமதியான முதலாவது கடன் தவணைப்பணத்தை அரசாங்கம் தனது வரவு செலவுதிட்டத் தேவைகளுக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 121 மில்லியன் டொலர்களை- இந்தியாவிடமிருந்து பெற்ற கடன் வசதியின் ஒரு பகுதியை மீளச் செலுத்தப்பயன்படுத்தப்படுகிறது.
இலங்கையின் வறிய மற்றும் பாதிப்புறு நிலையில் உள்ள மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க மீதமுள்ள பணத்தின் ஒருபகுதியைப் பயன்படுத்தலாம் அத்தகைய மக்களை பாதுகாக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே 37 இலட்சம் பேர் அரசாங்கத்தின் உதவித் தொகைகளுக்காக விண்ணப்பித்திருக்கிறார்கள். இதில் கணிசமானோருக்கு மேற்படி நிவாரணங்கள் வழங்கப்பட்டால் அவர்கள் மனச்சாந்தியடைந்து மகிழ்வுடன் தமக்கு உதவிய அரசாங்கத்திற்கு புள்ளடிகள் மூலம் நன்றி தெரிவிப்பார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கலாம். ஆனால் இப்போது மேற்கொள்ளபட்டுள்ள விலைத்திருத்தங்கள் எல்லாமே மக்களின் அடிப்படைத் தேவைகளின் விலை அதிகரிப்பாகவே உள்ளது. பெற்றோலியம் மின்சாரம் எரிவாயு உணவுப் பொருள்கள் விலைகள் வானளாவ உயர்ந்துள்ள நிலையில் கடந்த இரு வாரங்களில் பொருள் விலைகள் பாரியளவில் குறைவடைந்துள்ளதாகக் காட்ட அரசாங்கம் பகீரதப் பிரயத்தனம் செய்கிறது. விலைகளை ஒருசில பத்து ரூபாய்களால் குறைய அனுமதித்துவிட்டு பாரிய விலைக்குறைப்பு ஏற்படுத்தப்பட்டதாகப் பிரசாரம் செய்யப்படுகிறது. உதாரணமாக ஒரு கிலோ பால்மாவின் விலை இலங்கையில் 985 ரூபாவாக இருந்து 3085 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. இப்போது அதில் 200 ரூபா குறைக்கப்படுவதாகக் கொக்கரிக்கிறார்கள் ஒரு லீற்றர் பெற்றோல் 117 ரூபாவிலிருந்து இப்போது 400 ரூபாவாக 241.8 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டது.
கடந்த புதன் இரவு முதல் பெற்றோல் விலையை 340 ரூபாவாகக் குறைத்திருக்கிறார்கள். இது ஒரு போதும் பழைய விலைக்குத் திரும்பாது. மக்களின் வருமானங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. அல்லது நிரந்தர சம்பளம் பெறுபவர்களாயின் சம்பளங்களில் எந்த மாற்றமும் இல்லை. அதே வேளை நடுத்தர வருமானம் பெறுபவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் அவர்களது வருமானத்தில் பெருந்தொகையை வரியாக உறிஞ்சிக்கொண்டுள்ளது. ஆகவே முன்னர் இருந்த வாழ்க்கைத் தரம் குறைந்து அவர்களும் வறிய மக்களின் வாழ்க்கைத்தரத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். நாட்டின் மிகவுயர்ந்த செல்வந்த நிலையில் வாழும் 20 சதவீத மக்களைத்தவிர ஏனையோரின் வாழ்க்கைத்தரம் மிகக் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனவே தான் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மனிதத்தன்மையற்றவை என்று குற்றஞ் சாட்டப்படுகிறது. அந்த நிறுவனத்தின் கொள்கைகள் பெரும்பாலும் ஒரு நாட்டின் ஆட்சியாளர்களையோ அல்லது அவர்களைத் தாங்கிநிற்கும் செல்வந்த வகுப்பினையோ பாதிப்பதில்லை. மாறாக குறித்த நாட்டிலே பிறந்த பாவத்திற்காகவும் போலி வாக்குறுதிகளை நம்பி ஆட்சியாளர்களுக்கு வாக்களித்த குற்றத்திற்காகவும் வறிய மற்றும் நடுத்தர வருமானம் பெறும் மக்களே அத்தனை சுமையையும் தாங்க வேண்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளில் பொதுமக்களின் கண்ணுக்கு கவர்ச்சியாக உள்ள விடயம் ஊழல் மோசடி என்பவற்றிற்கு எதிராக சர்வதேச நியமங்களுக்கு அமைய நிறுவன ரீதியான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு ஊழல் புரிந்தவர்களுக்க எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் அதற்கு அவசியமாக ஆலோசனைகளையும் தொழில்நுட்ப வல்லமையையும் நிதியுதவியையும் அது வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ள பரிந்துரையாகும். நாடு கடன் வாங்கியுள்ள மொத்தத் தொகை 84 பில்லியன் டொலர்கள் என்று சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை சொல்கிறது இதில் 43 பில்லியன் உள்நாட்டுக்கடன்களாகும் 41 பில்லியன் வெளிநாட்டுக்கடன்களாகும். இந்த 84 பில்லியன் டொலர்களையும் என்ன செய்தீர்கள் என்பது தான் இப்போதுள்ள கேள்வி. எவ்வாறு செலவு செய்தீர்கள்? அவ்வளவு பணமும் எங்கு சென்றது? யார் யாருடைய கணக்குகளுக்கு அந்த பணம் சென்றது, இவை வெளிக்கொணரப்படவேண்டும். Foresnsic auditing உட்பட பல்வேறு வழிகள் ஊடாக அவ்வளவு பணமும் எங்கு போனது என்று காணமுடியும். அதை இலங்கை உழைப்பாளிகளும் வறிய மக்களும் தின்று தீர்த்தார்களா? தொழில்வாண்மையாளர்களும் புத்தி ஜீவிகளும் அதில் வாழ்க்கை நடத்தினார்களா? அல்லது அரசியல்வாதிகளின் வாரிசுகள் அந்தப்பணத்தில் ராக்கெட் விட்டு அந்த ராக்கெட்டை இப்போது தேடிக்கொண்டிருக்கிறார்களா? அல்லது தாம் ஏப்பம் விட்டதை வெளிநாட்டு வங்கிகளில் பத்திரமாக சேமித்து வைத்திருக்கிறார்களா? எங்கு போனது அந்தப்பணம்?
ஜனாதிபதி சொல்கிறார் எல்லோரும் பிழைவிட்டிருக்கிறார்களாம். மக்களும் பிழையானவர்களைத் தெரிவு செய்து பிழைவிட்டிருக்கிறார்களாம். ஆகவே கடந்த காலத்தை மறந்துவிட்டு எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வரி செலுத்தட்டாம். எவனெவனோ கொட்டிக்கொண்டுபோக உதிரத்தைக் கொடுத்து உழைப்பவன் வரிசெலுத்தி அதை ஈடுசெய்ய வேண்டிய கட்டாய நிர்ப்பந்தம்.
மக்களால் தெரிவு செய்யப்படாதவரே மக்களை ஆட்சி செய்ய சந்தர்ப்பம் உள்ள ஒரு நாட்டில் மக்களின் தெரிவுக்கு எங்கே ஐயா முக்கியத்துவம்? இந்த இலட்சணத்தில் தெற்கு ஆசியாவிலேயே மிகச் சிறப்பான ஊழல் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவரப் போகிறார்களாம். திருடனின் மனைவியிடம் திருட்டுப் போன பொருள் பற்றி சாத்திரம் கேட்பது போல என்று சிங்கள மொழியில் ஒரு பழமொழி உண்டு. அது இன்றைய ஆட்சியாளர்களுக்கு கனகச்சிதமாகப் பொருந்தும்.
மத்தியவங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். கடந்த காலத்தை மற்ந்து(விடு)விட்டு என்று அடிக்கடி கூறுவதன் பொருள் கடந்த காலத்தில் கொள்ளை அடிச்சதை எல்லாம் மறந்திடுங்கோ வரியைக் கட்டுங்கோ இனிமேல் நடந்தாப்பாப்பம், ஆகவே கடந்த காலத்தில் நடந்ததை மறக்கவும் என்பதன் அர்த்தம் அதுவாகத்தான் இருக்கும். ச.நா.நி என்பது சர்வதேச நாணய நிதியம் என்பதன் தமிழ்ச் சுருக்கம். அதற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. சர்வ நாசம் நிச்சயம் என்பது தான் அது.
ஏற்கெனவே ஆப்பு செருகப்பட்ட நிலையில் பொதுமக்கள் நடைப்பிணங்கள் போல நடக்கிறார்கள். தொழிற்சங்கங்களுக்கு இப்போது ஆப்பு செருகப்படுகிறது. எதையும் செவிமடுக்க அரசாங்கம் தயாராக இல்லை. இரும்புக்கரம் கொண்டு எல்லாவற்றையும் அடக்கவே முன்னுரிமை தரப்படுகிறது. மக்களின் ஆணையற்ற அரசாங்கம் மக்களைப்பற்றி யோசிக்கத் தேவையில்லைத் தானே என்றார் அனுபவசாலி ஒருவர். ஆகவே சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளில் தமக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவற்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும். மற்றவற்றை மக்களுக்குச் சொன்னது போல மறந்துவிடவே வாய்ப்புள்ளது.
”மக்களும் பிழையானவர்களைத் தெரிவு செய்து பிழைவிட்டிருக்கிறார்கள்” என்று ரணில் தன்னைப்பற்றி தான் கூறுகிறாரோ என்று கேட்கிறார்கள் மக்கள். எது எப்படியோ ஆக மொத்தம் ஆப்பு, ஆனால் அடிப்பது மட்டும் தண்டோரா.
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 1
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 2
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 3
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 4
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 5
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 6
கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 7