LOADING

Type to search

இலங்கை அரசியல்

’போர் குற்றம் தொடர்புடைய’ இலங்கை அமைச்சர்களை அழைத்தமைக்கு தென் ஆப்ரிக்க அரசிற்கு கடும் கண்டனம்

Share

சிவா பரமேஸ்வரன்

தென்னாப்பிரிக்காவில் உள்ள முன்னணி மனித உரிமைக் குழுக்கள், போர்க் குற்றவாளிகளுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இலங்கை அமைச்சர்களை பிரிட்டோரியாவுக்கு ஆய்வுச் சுற்றுப்பயணத்திற்கு அழைத்ததற்காக தங்கள் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளன.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் சிறைச்சாலைகள், அரசியல் சாசன சீர்திருத்த துறைக்கான அமைச்சர் கலாநிதி வியேயதாஸ ராஜபக்ச ஆகிய இருவரையும் தென் அப்ரிகாவின் பன்னாட்டு உறவுகள் மற்றும் கூட்டுறவு துறைகளிற்கான அமைச்சர் கலாநிதி நலேடி பாண்டோர் அழைத்திருந்தார்.

இலங்கையில் இணக்கப்பட்டை மேம்படுத்துவதற்கு உண்மையை கண்டறிதல் மற்றும் இணக்கப்பாட்டிற்கான ஆணையம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ‘தென் ஆப்ரிக்க அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல்’ என்பதே இந்த பயணத்தின் நோக்கம் என்றும் நாட்டின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் இருக்கும் இந்த இரண்டு அமைச்சர்களும் ராஜபக்சக்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள். மேலும் பன்னாட்டுச் சமூகத்தால் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளிற்கு ஆளாகியுள்ளவரும் பதவியிலிருந்து விலக்கப்பட்டவருமான கோத்தாபய ராஜபகச்வின் கீழும் பணியாற்றியவர்கள். மூன்று தசாப்தகளிற்கும் மேலாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த சமயத்தில் கொடூரமான முறையில் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட போது ‘மிகவும் பலம் பொருந்திய’ பாதுகாப்புச் செயலராக கோத்தாபய ராஜபக்ச இருந்தார். இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், அங்கவீனர்கள் ஆயினர் அல்லது படுமோசமாக காயமடைந்தனர். அந்த வலி மற்றும் வேதனையை தமிழ் மக்கள் இன்றும் அனுபவித்து வருகின்றனர்.

போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்ததான குற்றச்சாட்டுகள் தொடர்பில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களும் சர்வதேச சமூகமும் நம்பகத்தன்மை கொண்ட பன்னாட்டு விசாரணை பொறிமுறை ஒன்று வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ஆனால் இலங்கை அரசோ சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்பதாக ஐ நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதியை மீளப்பெற்றது.

முன்னர் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன அரசு சர்வதேச சமூகங்களுடன் ஒத்துழைக்க ஐ நா மனித உரிமைகள் பேரவையில் வாக்குறுதி அளித்தது. ஆனால் அதற்கு அடுத்து ஆட்சிக்கு வந்த கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசு ஐ நா அமைப்பிற்கு அளித்த உறுதிமொழியை நிராகரித்தது.

“இந்த அழைப்பிற்கான எண்ணம் உன்னதமாக இருந்தாலும், இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள், சிவில் சமூகங்கள் ஒடுக்கப்படுவது, 1983-2009ஆம் ஆண்டுவரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படாமல் இருப்பது ஆகியவை காரணமாக இலங்கை அரசின் அமைச்சர்களிற்கு தென் ஆப்ரிக்க அரசு அழைப்பு விடுத்தது கவலையளிக்கிறது”  என்று பவுண்டேஷன் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் அமைப்பு- Foundation for Human Rights (FHR) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

”இந்த பயணத்தில் போது அந்த இரு அமைச்சர்களும் மரியாதை நிமித்தமாக தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமஃபோசாவை சந்தித்தனர் மற்றும் தென் ஆப்ரிகாவின் பன்னாட்டு உறவுகள் மற்றும் கூட்டுறவிற்கான அமைச்சர் நலேடி பாண்டோர், நீதி மற்றும் அரசியல் யாப்பு மற்றும் அரசியல் சாசன மேம்பாடு அமைச்சர் ரொனால்ட் லமோலா ஆகியோரை சந்தித்தனர். அதுமட்டுமன்றி தென் ஆப்ரிகாவின் முன்னாள் அதிபர் தாபோ எம்பெக்கி, நாட்டின் அரசியல் சாசன மேம்பாட்டிற்கான முன்னாள் அமைச்சரும், அதிபர் ராமஃபோசாவுடன் தென் ஆப்ரிகாவின் நிறவெறி கொள்கையை ஒழிக்க துணைபுரிந்து முதல் முறையாக ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடத்த முன்னின்று செயல்பட்டவர்களில் ஒருவரும் ரொயல்ஃப் மேயர் ஆகியோரையும் இலங்கை அமைச்சர்கள் சந்தித்தனர்” என்று இலங்கை வெளியுறவு அமைச்சக அறிக்கை கூறுகிறது.

இந்த சந்திப்புகளிற்கு அப்பாற்பட்டு தென் ஆப்ரிக்காவின் அரச குற்றவியல் விசாரணை அலுவலக அதிகாரிகள், தென் ஆப்ரிக்கா முழுவதும் இருக்கும் சட்டத்தரணிகள் சங்கத்தினர் ஆகியோருடன் “ ஃப்ரீடம் பார்க்”, “மாறுதலிற்கான ஊக்கப்படுத்தும் அமைப்பு” மற்றும் ”நீதி மற்றும் இணக்கப்பட்டிற்கான மையம்” ஆகியோரையும் தமது அமைச்சர்கள் சந்தித்ததாக இலங்கை அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

அப்படியான சில மனித உரிமை மீறல்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் போன்ற மோசமான குற்றச்செயல்களாக கருதப்படக் கூடும் என்று ஐ நா தொடர்ச்சியாக கூறி வருகிறது.

இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற 2009ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் மே வரையிலான காலப்பகுதியில் குறைந்தபட்சம் 40,000 முதல் 70,000 பேர் உயிரிழந்தனர் என்று ஐ நா கூறுகிறது. அந்த இறுதிகட்ட பகுதியில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு சிறிய துண்டு நிலத்தில் சிக்குண்டிருந்தனர். அப்போது அந்த பகுதி கடும் எறிகணை மற்றும் வான்வீச்சு தாக்குதல்களிற்கு இலக்காயின.

உலகளாவிய அதிகார வரம்பு கொள்கையின் அடிப்படையில் (principle of universal jurisdiction) கீழ் பதவியிலிருந்து விலக்கப்பட்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மீது-இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மிக மோசமான பன்னாட்டுக் குற்றங்கள் மற்றும் பாரிய மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றில் அவரின் பங்கு தொடர்பில்- சிங்கப்பூரில் வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது என்பதையும் FHR தலைமையிலான மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதே போன்று கோத்தாபய ராஜபக்ச மீது தனியான வேறொரு வழக்கும் 2019ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அவர் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தபோது தனக்கு நெருக்கமானவர்களை மிகுந்த அதிகார பலம் வாய்ந்த பதவிகளில் நியமித்தது தொடர்பில் அந்த வழக்கு தொடுக்கப்பட்டது. அப்படி பெரும்பாலான நியமனங்களில் அது உருவாக்கப்பட்டுள்ள சட்டம் மற்றும் மரபுகளை மீறிய செயலாகவே இருந்துள்ளது.

அவ்வகையில் நியமிக்கப்பட்டவர்கள்-அவர்களில் பெரும்பாலானவர்கள் அவரது முன்னாள் இராணுவ சகாக்கள்- சிலர் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் அமெரிக்கா மற்றும் கனடாவால் தடை விதிக்கப்பட்டுள்ளனர்.

தமது நாட்டிற்கு விஜயம் செய்துள்ள இந்த அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய பின்னணியைப் பார்க்கும் போது அவர்கள் தமது நாட்டிற்கு ‘நல்லிணக்கம் மற்றும் மாறுங்கால நீதி தொடர்பிலான ஆய்வு சுற்றுப்பயணம்’ மேற்கொண்டுள்ளதன் நம்பகத்தன்மையை தென் ஆப்ரிக்க மனித உரிமை அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன.

”வெளியுறவு அமைச்சர், அலி சப்ரி கோத்தாபய ராஜபக்சவின் தனிப்பட்ட வழக்கறிஞராக இருந்து பல ஊழல் வழக்குகளில் அவருக்காக ஆஜராகியிருந்தார். வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்கும் முன்னர், அலி சப்ரி நீதி அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காரணத்தால் அவர் அந்த பதவியில் இருந்தது தொடர்பில் அலுவலகப் பணியில் அது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று கவலைகள் எழுந்தன. அதே போன்று அவண்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கிடங்கு வழக்கில் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்யப்படாமல் இருப்பதை தடுக்க தான் சட்ட மாஅதிபரிடம் தலையிட்டதாக கலாநிதி விஜேயதாஸ ராஜபக்ச ஒப்புக்கொண்டுள்ளார்”.

கடந்த 2015ஆம் ஆண்டு மைத்ரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ‘நல்லாட்சி அரசாங்கம்’ ஐ நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை இணைந்து முன்மொழிந்தனர். அதில் அரசு மாறுங்கால நான்கு நீதி பரிபாலனம் தொடர்பில் நான்கு வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்தது. அவை காணாமல் போனவர்களை தேடுவதற்கான ஒரு பொறிமுறை, இழப்பீடுகளிற்கான ஒரு அலுவலகம், உண்மையைக் கண்டறியும் ஆணையம் அமைத்தல் மற்றும் நீதிபரிபாலன் வழிமுறை என்பவையாகும்.

இன்று வரை, அந்த நடைமுறைகளில், காணாமல் போன நபர்கள் தொடர்பான அலுவலகம் (OMP) என்ற ஒரு விஷயம் மட்டுமே செயலாக்கப்பட்டது. அதிலும் பார்க்க அந்த அலுவலகமே ஒரு ஏமாற்று வேலை என்று கூறி காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களால் நிராகரிப்பட்டது. அதேவேளை காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு அலுவலகம் அமைக்கப்பட்டாலும் இன்றுவரை அந்த அலுவலகம் ஒரு நபரைக் கூட கண்டுபிடிக்கவில்லை, மேலும் வடக்கு கிழக்கில் இருந்த அந்த அலுவலகத்தின் பெரும்பாலான கிளைகள் மூடப்பட்டுள்ளன. முல்லைத்தீவின் கிழக்குப் பகுதியின் கோடியிலிருந்த மக்கள் ஒரு முறைப்பாட்டைச் செய்வதற்கோ அல்லது ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கோ அல்லது அவர்களிடமிருந்து பதிலைக் கோரவோ யாழ்ப்பாணம் செல்ல வேண்டியிருந்த நிலையில், வடக்கில் OMPயின் பல அலுவலகங்கள் மூடப்பட்டன.

இந்தாண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான ஆறாவது அறிக்கை “இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக் கூறலும்” மேலும் “மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை அரசின் உயர் பதவிகளில் நியமிப்பதோ அல்லது அவர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதையோ தவிர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

“ஐ நான் தீர்மானத்தை இணைந்து முன்மொழிந்த இலங்கை அரசு அதற்கமைய நம்பகத்தன்மை வாய்ந்த மாறுங்கால நீதி பரிபாலன வழிமுறைகளை ஏற்படுத்துவதற்கு அளித்த வாக்குறுதியை நடைமுறைபடுத்த தவறிய விதம் அரசின் நம்பகத்தன்மை குறித்த கேள்வியை எழுப்புகிறது” என்று தென் ஆப்ரிக்க மனித உரிமைகள் அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.

இதேவேளை மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிப்பது மற்றும் சிவில் சமூகத்தினர் மீதான தொடரும் ஒடுக்குமுறையை முடிவிற்கு கொண்டுவருவதற்கு தமது அரசு இலங்கை அரசுடன் ஈடுபட வேண்டும் என்றும் தென் ஆப்ரிக்க மனித உரிமைகள் கூட்டமைப்பு கோரியுள்ளது. அப்படிச் செய்வதன் மூலம் ஐ நாவின் பல அமைப்புகள் பரிந்துரைத்துள்ளபடி அர்த்தமுள்ள வகையில் மாறுங்கால நீதிபரிபாலன வழிமுறையை ஏற்படுத்துவதற்கு சாதகமான சூழலை உருவாக்க முடியும் எனவும் அந்த அமைப்புகள் கூறியுள்ளன.

”மாறுங்கால நீதிபரிபாலன வழிமுறைகளை ஏற்படுத்துவதில் சிவில் சமூக அமைப்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன. அவ்வகையில் இலங்கையுடனான ஈடுபாட்டில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, அனைவரையும் உள்வாங்குவது ஆகியவற்றை தென் ஆப்ப்ரிக்க அரசு வலியுறுத்த வேண்டும். அது இந்த பொறிமுறை வெற்றி பெறுவதற்கு மிகவும் முக்கியமானதாகும்”

FHR தலைமையிலான அமைப்புகள் போர் குற்றச்சாட்டுகளிற்கு ஆளான ராஜபக்சக்கள் மற்றும் முன்னாள், இந்நாள் படை அதிகாரிகள் ஆகியவர்களிற்கு நெருங்கிய தொடர்புள்ளவர்களை தமது நாட்டிற்கு அழைத்தது தொடர்பில் ஏமாற்றம் வெளியிட்டுள்ளன.

கோத்தாபய ராஜபக்சவுடன் நெருக்கமாக இருக்கும் நம்பகத்தன்மையையும் நியாத்தன்மையும் அற்றவர்கள் போல் தோன்றும் இரு நபர்களிற்கு அழைப்பு விடுத்ததன் மூலம், மிகவும் ஆழமான குறைபாடுள்ள ஒரு வழிமுறையை தென் ஆப்ரிக்கா சட்டபூர்வமாக்குகிறது”.

இலங்கை அமைச்சர்கள் இப்போது நாடு திரும்பிவிட்டனர்.

“தென் ஆப்ரிக்க நீதி அமைச்சர் மற்றும் வல்லுநர்களுடனான ஈடுபாடு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அவர்கள் ஏற்படுத்திய அனுபவம் குறித்த மதிப்பு வாய்ந்த பார்வையை எமக்கு அளித்தது” என்று இலங்கை வெளியுறவு அமைச்சக அறிக்கை கூறுகிறது.